உங்கள் வழியை கர்த்தருக்கு ஒப்புவிப்பதினால் வரும் நன்மைகள்:-

சங் 37:5. உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.

அநேக நேரங்களில் நாம் பாரங்களால் நிறைத்துவிடுகிறோம். அந்த பாரம் கொடுக்கிற நெருக்கத்தினிமித்தமாக தேவ பிரசன்னத்தையும் இழந்துவிடுகிறோம். வேதம் வாசிக்க வேண்டும் என்று அமரும்போது, தேவையில்லாத பாரங்களினிமித்தமாக சரியாக வேதம் வாசிக்க முடிவதில்லை; சரியாய் ஜெபிக்க முடிவதில்லை; சரியாக தேவ பிரசன்னத்தில் நிற்க முடிவதில்லை. காரணம் உலக பாரங்கள் நம்மை நெருக்குகிறது. வேலை ஸ்தலங்களில் வேண்டாத பாரங்கள், குடும்பத்திலிருந்து வருகிற பாரங்கள், எதிர்காலத்தை குறித்த பாரங்கள், பிள்ளைகளை குறித்த பாரங்கள், ஊழியத்தில் வரும் சவால்கள், துன்மார்க்கர்கள் கொடுக்கும் நெருக்கங்கள், சரீர பெலவீனம் என்னும் பாரங்கள், கணவன் மனைவியால் வரும் பாரங்கள், பாவம் என்னும் பாரங்கள், சாபை என்னும் பாரங்கள் என்று இப்படி பலவகையான பாரங்கள் உங்களை நெருக்கி ஏவலாம். இதற்கு ஒரே விடை வசனம் சொல்லுகிறது ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம் (எபி 12:1). பவுல் சொல்லும்போதும் அவசியமான இவைகளையல்லாமல் பாரமான வேறொன்றையும் உங்கள்மேல் சுமத்தாமலிருப்பது பரிசுத்தஆவிக்கும் எங்களுக்கும் நலமாகக் கண்டது (அப் 15:29) என்று சொல்லுவதை பார்க்கலாம்.

ஒருவேளை இப்படி பாரமான சூழ்நிலையில் என்ன செய்வது என்று தவிக்கிறீர்களா? வசனம் சொல்லுகிறது உங்கள் வழியை கர்த்தருக்கு ஒப்புவியுங்கள். ஒப்புவியுங்கள் என்பதற்கு எபிரேய பாஷையில் Roll away என்று எழுதப்பட்டிருக்கிறது. அப்படியென்றால் பாரமான யாவற்றையும் ஒன்று சேர்த்து உருட்டி இயேசுவினிடம் தள்ளிவிட வேண்டும். காரணம் இயேசு சொல்லுகிறார் வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் (மத்தேயு 11:28) என்பதாக. உங்கள் பாரங்களை கர்த்தரிடம் ஒப்புவிக்கும்போது வரும் நன்மை என்னவென்றால் அது தேவன் உங்களுக்கு தரும் இளைப்பாறுதலாய் காணப்படுகிறது.

உங்கள் பாரங்களையெல்லாம் Roll away செய்துவிட்டு, விசுவாசத்தோடு இருங்கள் அந்த பாரங்களை இயேசு உங்களிடமிருந்து பெற்றுக்கொண்டார், அதை சிலுவையில் சுமந்தார் என்று. பின்பு நீங்கள் வேதம் வாசிக்கும்போதும், ஜெபிக்கும்போதும் தேவ பிரசன்னத்தால் நிரப்பப்படுவீர்கள்.

கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *