ஏசா 25:8. அவர் மரணத்தை ஜெயமாக விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையை பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்; கர்த்தரே இதைச் சொன்னார்.
பரிகரிக்கப்படுங் கடைசிச் சத்துரு மரணம் (1 கொரி 15:26) என்று வசனம் சொல்லுகிறது. அந்த கடைசி சந்துருவை இயேசு ஜெயமாக விழுங்கினார். மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே? (1 கொரி 15:55). மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று பவுல் கொரிந்து சபைக்கு எழுதுகிறான். இப்படி மரணத்தை இயேசு ஜெயித்தார். இயேசு சிலுவையில் தொங்கி தன் ஜீவனை விட்டபோது, பிசாசும் அவன் சேனைகளும் நினைத்திருப்பார்கள் இயேசு தோற்று போய்விட்டார் என்று. அதேவேளையில் பரலோகத்தில் தேவதூதர்களின் ஆரவாரமும், பரிசுத்தவான்களின் மகிழ்ச்சியும் அதிகமாக கேட்டிருக்கும். காரணம் அவர்கள் அறிந்திருந்தார்கள் இயேசு மூன்றாம் நாள் உயிரோடு எழுந்திருப்பார் என்று. அவர் சொன்னபடியே கல்லறையை விட்டு உயிரோடு எழுந்து வெளியே வந்தார்; மரணத்தை ஜெயித்தார். இயேசு மரணத்தை ஜெயித்ததினால் வந்த நன்மைகள் அநேகம் இருந்தாலும் மேற்குறிப்பிட்ட வசனத்தில் இரண்டு நன்மைகள் எழுதப்பட்டிருக்கிறது.
முதலாவது, கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைப்பார். தேவ ஜனங்களின் கண்ணீரை துடைப்பதற்கு நம் ஆண்டவராகிய இயேசுவுக்கு இணையாக யாரையும் சொல்ல முடியாது. அவர் கண்ணீரை காண்கிறவர். நீங்கள் தனியாக அழுகிறதை உலகம் அறியாமல் இருக்கலாம், ஆனால் இயேசு உங்கள் கண்ணீரை அறிந்திருக்கிறார். அன்னாளின் கண்ணீரை கர்த்தர் துடைத்தார். ஆகாரின் அழுகுரலை கேட்டார். பிள்ளையாண்டான் அழுவதை கர்த்தர் கேட்டார். யோபு சொல்லுகிறான் என் கண் தேவனை நோக்கிக் கண்ணீர் சொரிகிறது (யோபு 16:20). எரேமியா சொல்லுகிறான் கர்த்தருடைய மந்தை சிறைப்பட்டுப்போனதென்று என் கண் மிகவும் அழுது கண்ணீர் சொரியும் (எரே 13:17). என் கண்களிலிருந்து இரவும்பகலும் ஓயாமல் கண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும்(எரே 14:17). அவளுடைய கண்ணீர் அவள் கன்னங்களில் வடிகிறது (புல 1:2) என்றெல்லாம் பார்க்கும்போது அநேகர் கண்ணீர் விட்டு அழுததை கர்த்தர் கவனியாமல்; விட்டுவிடாமல் இருக்கவில்லை. அவர்கள் கண்ணீர் விட்டு அழுததை வேதம் குறிப்பிடுகிறது என்றால், கர்த்தர் அதை எவ்வளவு அதிகமாக கவனித்திருக்கிறார் என்பதை அறிந்துகொள்ளுங்கள். கர்த்தர் சொல்லுகிறார் இனி நீ அழுதுகொண்டிராய். உங்கள் முகத்தில் இருக்கும் கண்ணீரை துடைப்பதற்காகவே இயேசு மரணத்தை ஜெயமாக விழுங்கினார்.
இரண்டாவதாக, உங்கள் நிந்தையை பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார். நிந்தை, அவமானங்களோடு இருக்கிறீர்களா? அவைகள் நீங்கும். உங்கள் நிந்தை உங்களை விட்டு சற்று தூரமோ, வேறு இடத்திற்கோ, தற்காலிகமாகவோ நீங்காது. மாறாக, உங்கள் நிந்தை பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீங்கும்படியாக கர்த்தர் செய்வார். உங்கள் நிந்தையை நீக்கவே இயேசு மரணத்தை ஜெயமாக விழுங்கினார்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org