…நான் உங்களை ஊரில் ஒருவனும், வம்சத்தில் இரண்டுபேருமாகத் தெரிந்து, உங்களைச் சீயோனுக்கு அழைத்துக்கொண்டுவந்து, உங்களுக்கு என் இருதயத்துக்கு ஏற்ற மேய்ப்பர்களைக் கொடுப்பேன், அவர்கள் உங்களை அறிவோடும் புத்தியோடும் மேய்ப்பார்கள் (எரே3:14,15).
கர்த்தர் தன்னுடைய பங்காகிய ஜனங்களை தனக்கென தெரிந்து கொள்ளுகிறவர். அவர் உலகத்தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டார் என்று எபே.1:4ல் எழுதப்பட்டிருக்கிறது. நாம் அவரை தெரிந்துகொள்ளவில்லை, அவர் நம்மைத் தெரிந்துகொண்டார் என்றும் வேதம் கூறுகிறது. நீங்கள் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.
கர்த்தர் நம்மை ஏன் ஊரில் ஒருவனாகவும், குடும்பத்தில் இரண்டு பேராகவும் தெரிந்துகொண்டார், நம்மில் என்ன நன்மை காணப்பட்டது? கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை தன் சொந்த ஜனங்களாகத் தெரிந்து கொண்டதின் காரணம், சகல ஜனங்களிலும் நீங்கள் திரட்சியான ஜனமென்று கர்த்தர் உங்கள் பேரில் அன்புவைத்து உங்களைத் தெரிந்துகொள்ளவில்லை, நீங்கள் சகல ஜனங்களிலும் கொஞ்சமாயிருந்தீர்கள் (உபா. 7:7). இஸ்ரவேலர்கள் திரள் கூட்டமாகக் காணப்பட்டதினால், அதினிமித்தம் அன்பு கூர்ந்து அவர்களைத் தெரிந்துகொள்ளவில்லை, மாறாகக் கர்த்தருடைய அன்பினாலும், பிதாக்களுக்குக் கொடுத்த ஆணையைக் காக்க வேண்டும் என்பதற்காகவும் தெரிந்து கொண்டார். கர்த்தருடைய பிள்ளைகளே, தேவனுடைய அனாதி சிநேகத்தின் நிமித்தம் நீங்கள் தெரிந்து கொள்ளப் பட்டவர்கள் என்பதை மறந்து போகாதிருங்கள். நம்மைக் காட்டிலும் நல்லவர்கள் கோடிக்கணக்கானவர்கள் காணப்பட்டிருந்தும் கர்த்தர் நம்மைத் தெரிந்துகொண்டது அவருடைய சுத்த கிருபை. உங்கள் பட்டணங்களிலும் உங்கள் குடும்பங்களிலும் உங்களைவிட நல்லவர்கள் அனேகர் உண்டு. ஆகிலும் ஏசாவை வெறுத்து யாக்கோபை தெரிந்து கொண்டவர் உங்கள் பேரில் கொண்ட அன்பினிமித்தம் தெரிந்து கொண்டார் என்பதை மறந்து போகாதிருங்கள்.
கர்த்தர் தெரிந்து கொண்டவர்களை சீயோனுக்கு அழைத்துக் கொண்டு வருகிறவர். சீயோன் என்பது கர்த்தருடைய மணவாட்டி சபையைக் குறிக்கிறது. நீங்கள் சீயோன் மலையினிடத்திற்கும், ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமினிடத்திற்கும், ஆயிரம் பதினாயிரமான தேவதூதர்களினிடத்திற்கும், பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேறானவர்களின் சர்வ சங்கமாகிய சபையினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள் (எபி. 12:22,23). ஒரு மாணவனுக்குப் பள்ளிக்கூடமும் ஆசிரியர்களும் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் சபையும், போதகர்களும். கர்த்தருடைய வழிகளைக் நீங்கள் கற்றுக் கொள்ளுகிற இடம் ஆலயமாகும். ஆகையால் கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை சீயோன் சபைக்கு அழைத்துக் கொண்டு வருகிறார். நீங்கள் தெரிந்து கொள்ளப்பட்ட ஜனங்களாய் காணப்பட்டால் தேவனுடைய சமூகத்தை வாஞ்சிப்பீர்கள்.
அவர்களுக்கு தன்னுடைய இருதயத்திற்கு ஏற்ற மேய்ப்பர்களைக் கொடுக்கிறார். மேய்ப்பர்களையும் போதகர்களையும் உங்களுக்குக் கொடுப்பவர் கர்த்தர், அதுவும் அவரால் தெரிந்து கொள்ளப் பட்டவர்களுக்கு அவருடைய இருதயத்திற்கு ஏற்றவர்களைக் கொடுக்கிறார். உங்களுடைய மேய்ப்பார்கள் கர்த்தருடைய இருதயத்திற்கு ஏற்றவர்களா என்பதை அறிந்து கொள்ளுங்கள். அவர்கள் உங்களுக்காகக் கர்த்தர் கொடுத்த மேய்ப்பர்களா என்பதையும் சோதித்து அறிந்து கொள்ளுங்கள். தவறான மேய்ப்பர்கள் உங்கள் ஆத்துமாக்களை அழிவுக்கு நேராய் நடத்திவிடக் கூடும். ஆத்துமாக்களுக்கு உத்தரவாதம் பண்ணுகிற பிரதான வேலையைக் கர்த்தர் மேய்ப்பர்களுக்குக் கொடுத்திருக்கிறார். தன் மந்தையை அறிவோடும், புத்தியோடும், வசனத்தின் அடிப்படையிலும் மேய்க்காதவர்கள் ஆத்துமாவை அக்கினி கடலுக்கு நேராக நடத்திவிடக் கூடும். நீங்கள் கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்ட ஜனம் என்ற உணர்வோடு ஜீவிக்கக் கர்த்தர் உங்களுக்குக் கிருபை பாராட்டுவாராக.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar