சொப்பனங்கண்ட தீர்க்கதரிசி சொப்பனத்தை விவரிப்பானாக, என் வார்த்தையுள்ளவனோ, என் வார்த்தையை உண்மையாய்ச் சொல்வானாக, கோதுமைக்குமுன் பதர் எம்மாத்திரம்? என்று கர்த்தர் சொல்லுகிறார் (எரேமியா 23:28).
கர்த்தருடைய வார்த்தையோடு, சொப்பனங்களையும், தரிசனங்களையும், வெளிப்பாடுகளையும் ஒப்பிட முடியாது. சொப்பனங்களைக் கண்டவர்கள் அதை விவரிக்கலாம், யோசேப்பு சொப்பனங்களைக் கண்டு, அதைத் தன் சகோதரருக்கு அறிவித்தான் என்று வேதம் கூறுகிறது. வயலில் அறுத்த அரிகளைக் கட்டிக்கொண்டிருந்தோம், அப்பொழுது என்னுடைய அரிக்கட்டு நிமிர்ந்திருந்தது, உங்கள் அரிக்கட்டு என் அரிக்கட்டைச் சுற்றி வணங்கி நின்றது என்றும், சூரியனும் சந்திரனும் பதினொரு நட்சத்திரங்களும் என்னை வணங்கினது என்றும் கூறினான். ஆனால் பொய் சொப்பனங்களையும் தீர்க்கதரிசனங்களையும் சொல்லுகிறவர்களுக்கு “நான் விரோதி” என்று கர்த்தர் சொல்லுகிறதை எரேமியா 23:31-33 வசனங்களில் மூன்று முறை எழுதப்பட்டிருக்கிறது. ஆகையால் சொப்பனங்களும், தீர்க்கதரிசனங்களும் தேவனுடைய வார்த்தையை விட மேலானது அல்ல, என்பதைக் கர்த்தருடைய ஜனங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
கர்த்தருடைய வார்த்தை உள்ளவன் அதை உண்மையாய்ச் சொல்ல வேண்டும். எரேமியாவின் நாட்களில் கர்த்தருடைய வார்த்தையை உண்மையாய் சொல்லுகிற தீர்க்கதரிசிகளை விடப் பொய்யாய் சொல்லுகிறவர்கள் அனேகர் காணப்பட்டார்கள். உண்மையாய் கர்த்தருடைய வார்த்தையைச் சொன்ன எரேமியாவை விட, யூதாவின் ராஜாக்களும், குடிகளும் பொய்யாய் சொல்லுகிறவர்களைத் தான் சார்ந்து கொண்டார்கள். அதினிமித்தம் பாபிலோனியச் சிறையிருப்பின் கீழ் அடிமைகளாய் எழுபது வருஷங்கள் காணப்படவேண்டியதாயிற்று. இந்த கடைசி நாட்களிலும் அதே நிலைதான் காணப்படுகிறது. கர்த்தருடைய வார்த்தையை உண்மையாய் பேசுகிறவர்களை விட, சொப்பனங்களையும், தீர்க்கதரிசனங்களையும், வெளிப்பாடுகளையும், அற்புதங்களையும் நம்பி செல்லுகிற ஜனங்கள் அனேகர். ஆனால் வேதம் கோதுமைக்குமுன் பதர் எம்மாத்திரம் என்று கேட்கிறது. உண்மையாய் கர்த்தருடைய வார்த்தைகளைப் பேசுகிறவர்களைக் கோதுமை என்றும் மற்ற அத்தனை பேரையும் பதர் என்றும் வேதம் அழைக்கிறது.
என் வார்த்தை அக்கினியைப் போலவும், கன்மலையை நொறுக்கும் சுத்தியலைப் போலவும் காணப்படுகிறது என்று கர்த்தர் சொல்லுகிறார். ஆகையால் பதர், அக்கினிக்கு முன்பாக நிற்கமுடியாது, அதைச் சுட்டெரித்து சாம்பலாக்கி விடும். அதுபோல பதர், சுத்தியலுக்கு முன்பாக நிற்கமுடியாது, அதை நொறுக்கி தூளாக்கிவிடும். தேவனுடைய ஆலோசனைகள் ஒன்றையும் மறைத்து வைக்காமல் உண்மையாய் கர்த்தருடைய வார்த்தைகளை ஊழியர்கள் பேசும் போது உங்கள் வார்த்தைகள் புடமிடுகிற அக்கினியைப் போலவும், கல்லான இருதயங்களை நொறுக்கும் சுத்தியலைப் போலவும் காணப்படும். அப்போது கர்த்தருடைய கண்கள் உங்களைக் கோதுமை மணிகளாகப் பார்க்கும், இல்லையேல் பதராகக் காணப்படுவீர்கள். தேவ ஜனங்களும் கர்த்தருடைய வார்த்தைக்கு நேராகத் திரும்ப வேண்டும், அப்போது உங்கள் வழிகள் வாய்க்கும், உங்களுக்குக் காரியசித்தி உண்டாகும், நீங்கள் ஆசீர்வாதமாய் காணப்படுவீர்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar