கிருபாதாரபலியான இயேசு!

நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே,    நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல,    சர்வலோகத்தின்  பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார் (1 யோவான் 2:2).

இயேசு சர்வலோகத்தின் பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியாக கல்வாரிச் சிலுவையில் தன் ஜீவனைக் கொடுத்தார். கிருபாதார பலி என்பதின் பொருள்,    நம்மால் பாதிக்கப் பட்டு,    நம்மேல் கோபமாகக் காணப்படுபவரைச் சமாதானப்படுத்தி,    திருப்திப் படுத்தி,    அவரோடு ஒப்புரவாக்குதலாகும். பிதாவாகிய தேவன் மகா பரிசுத்தமுள்ளவர்,    பாவங்களைப் பாராத சுத்தக் கண்ணன். மனுகுலத்தின் பாவங்களினிமித்தம் நம்மேல் அவர் கோபமாகக் காணப்பட்டு,    நம்மை அழிக்கச் சித்தங்கொண்ட வேளையில்,    இயேசு கல்வாரிச் சிலுவையில் கிருபாதாரபலியாக தன் ஜீவனைக் கொடுத்து,    அந்த ஒரே  பலியினிமித்தம்  பிதாவாகி தேவனைச் சமாதானப்படுத்தி,    நம்மோடு ஒப்புரவாக்கினார். 

உதாரணமாக,    இஸ்ரவேல் ஜனங்களின் வனாந்தர பிரயாணத்தில்,    மோசே சீனாய் மலையிலிருந்து இறங்கிவரத்  தாமதிக்கிறதைக் கண்டபோது,     அவர்கள் ஆரோனிடத்தில் கூட்டங்கூடி,    எகிப்து தேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம்,    ஆதலால் நீர் எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை உண்டுபண்ணும் என்றார்கள். அதற்கு ஆரோன்,    உங்கள் மனைவிகள் குமாரர் குமாரத்திகளுடைய காதுகளில் இருக்கிற பொன்னணிகளைக் கழற்றி,    என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான். ஜனங்கள் எல்லாரும் தங்கள்  காதுகளிலிருந்த பொன்னணிகளைக் கழற்றி,    ஆரோனிடத்தில் கொண்டுவந்தார்கள். அவர்கள் கையிலிருந்து அவன் அந்தப் பொன்னை வாங்கி,    சிற்பக்கருவியினால் கருப்பிடித்து,    ஒரு கன்றுக்குட்டியை ஆரோன் வார்ப்பித்தான். அப்பொழுது ஜனங்கள் இஸ்ரவேலரே,    உங்களை எகிப்து தேசத்திலிருந்து  அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்று கூறி தகனபலிகளையும்,    சமாதான பலிகளையும் செலுத்தினார்கள். அப்பொழுது தேவனுடைய கோபம் அவர்கள் மேல் பற்றியெரிந்தது. எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து,    பார்வோனையும் அவன் ஜனங்களையும் பத்து வாதைகளால் வாதித்து,    தன் வல்லமையுள்ள கரத்தினாலும்,    ஓங்கிய புயத்தினாலும் விடுவித்த தன்னை மறந்து,    பொன் கன்றுக்குட்டியை ஆராதித்ததைக் கண்ட ஜனங்கள் மேல் கர்த்தர் உக்கிரக்கோபம் கொண்டார். அவர் மோசேயைப் பார்த்து,    இவர்களை அழித்து உன்னை ஒரு பெரிய ஜாதியாக்குவேன் என்றார். அப்பொழுது மோசே,    அவர்களை நிர்மூலமாக்கவும்,    அவர்களுக்குத் தீங்கு செய்யும்பொருட்டு அவர்களைப் புறப்படப்பண்ணினார் என்று எகிப்தியர் சொல்லுவானேன்? உம்முடைய கோபத்தின் உக்கிரத்தை விட்டுத் திரும்பி,    உமது ஜனங்களுக்குத் தீங்கு செய்யாதபடிக்கு,    அவர்கள்மேல் பரிதாபங்கொள்ளும். உமது தாசராகிய ஆபிரகாமையும் ஈசாக்கையும் இஸ்ரவேலையும் நினைத்தருளும என்று கெஞ்சிப் பிரார்த்தித்தான்.  அப்பொழுது கர்த்தர் தமது ஜனங்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்குப் பரிதாபங்கொண்டார். இயேசும் கூட பிதாவாகிய தேவனுடைய கோபம் நமக்கு எதிராக வெளிப்படவிருந்த வேளையில் நமக்காக கிருபாதாரபலியாக ஜீவனைக் கொடுத்தார்.

கர்த்தருடைய பிள்ளைகளே,    நாம் தேவனுடைய ஜனங்களாகக் காணப்பட்டிருந்தும்,    அனுதினமும் துணிந்து நாம் செய்கிற மீறுதல்கள்,    அக்கிரமங்கள்,    பாவங்கள் தேவனுடைய இருதயத்தை அதிகமாய் பாதிக்கிறது. சபைகளில் காணப்படுகிற உலகத்தின் காரியங்கள்,    மாம்சீக கிரியைகள்,    பரலோக மாதிரிக்கு ஒவ்வாத ஆராதனைகள் தேவனை துக்கப்படுத்துகிறது. ஊழியர்கள் தேவனுடைய பெயரை பயன்படுத்தில செய்கிற வியாபாரங்கள் அவரை அதிகமாய் கோபம் கொள்ளும் படிக்குச் செய்கிறது. பாவங்களைப் பாவமாய் பாராதபடி பலகீனம் என்று சொல்லித் தப்பிக்கிற பொல்லாத ஜனங்களை கர்த்தருடைய கண்கள் காண்கிறது. இவற்றின் நிமித்தம் தேவகோபம் பற்றியெரிந்து நம்மை ஏற்கனவே அழித்திருக்க வேண்டியது. ஆனாலும் நமக்காக கிருபாதாரபலியாக கல்வாரிச் சிலுவையில் மரித்து,    அடக்கம் பண்ணப்பட்டு,    உயிரோடு எழுந்து,    இன்று பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருந்து இயேசு நமக்காய் பரிந்து பேசுவதினாலே நாம் பிழைத்திருக்கிறோம் என்பதை மறந்து போகாதிருங்கள். ஆகையால் பாவஞ்செய்யாதபடிக்கு,    பரிசுத்தமாய் வாழ்வதற்குச் செய்வதற்கு உங்களை அர்ப்பணியுங்கள். உங்கள் நடக்கைகள் எல்லாவற்றிலும் பரிசுத்தம் காணட்டும். அப்பொழுது கர்த்தருடைய ஆசீர்வாதம் உங்களையும் உங்கள் சந்ததிகளையும் பின் தொடரும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *