எந்தப் பலியும் உப்பினால் உப்பிடப்படுவதுபோல, எந்த மனுஷனும் அக்கினியினால் உப்பிடப்படுவான் (மாற்கு 9:49).
பழைய ஏற்பாட்டின் பலிகள் உப்பினால் உப்பிடப்படும். நீ படைக்கிற எந்த போஜன பலியும் உப்பினால் உப்பிடப் படுவதாக என்று லேவி.2:13ல் எழுதப்பட்டிருக்கிறது, உப்பு சுவையைக் கூட்டும், சுத்திகரிக்கும், பாதுகாக்கும். அதுபோல எந்த மனுஷனும் அக்கினியினால் உப்பிடப்படுவான் என்று மேற்குறிப்பிட்ட வசனம் கூறுகிறது.
அக்கினி மனுஷனுடைய வாழ்க்கையின் எல்லா பகுதிகளையும் சோதித்து, சுத்திகரிப்பை உண்டாக்குகிறது. அசுத்தங்கள் எல்லாவற்றையும் சுட்டெரித்து, தரமான, பரிசுத்தமான, எஜமானுக்கு பிரயோஜனமுள்ள வாழ்க்கை வாழ உதவி செய்கிறது. கர்த்தர் புடமிடுகிறவனுடைய அக்கினியைப்போலவும், வண்ணாருடைய சவுக்காரத்தைப்போலவும் இருப்பார் என்று மல்கியா 3:2ல் எழுதப்பட்டிருக்கிறது. இயேசுவின் சீஷர்களுக்குள்ளாக யார் பெரியவன் என்ற போட்டி மூன்றரை வருட ஊழியத்தின் நாட்களிலும் காணப்பட்டது. ஆனால் பெந்தெகொஸ்தே என்னும் நாளில் ஆவியானவர் அக்கினியாய் இறங்கி அவர்களை அபிஷேகித்த பின்பு, போட்டி மனப்பான்மை அவர்களை விட்டு விலகினது. ஆவியானவருடைய அபிஷேக அக்கினி அவர்களுக்குள் சுத்திகரிப்பை உண்டாக்கினது. கர்த்தருடைய பிள்ளைகளே, அசுத்தமானதும் தீட்டுள்ள எதுவும் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதில்லை என்று வெளி.21:27ல் எழுதப்பட்டிருக்கிறது. பரலோக தேவனுடைய அக்கினி நம்மைச் சுத்திகரித்து, நம்மில் காணப்படுகிற தேவனுக்குப் பிரியமில்லாத எல்லாக் களிம்புகளையும் அகற்றிச் சுத்திகரிப்பதற்கு நம்மை அர்ப்பணிப்போம்.
அக்கினி நம்முடைய விசுவாசத்தைச் சோதிக்கும் என்று 1 பேதுரு 1:7ல் எழுதப்பட்டிருக்கிறது, அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும், அதைப்பாக்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும். அக்கினி போன்ற சோதனைகள் நம்முடைய விசுவாசத்தைச் சோதிக்கும் போது சோர்ந்து போகாதிருங்கள். மூன்று எபிரேய வாலிபர்கள், நேபுகாச்நேச்சார் நிறுத்தின பொற்சிலையை நாங்கள் பணிவதில்லை என்ற வேளையில், அக்கினி சூளையில் தள்ளப்படுவார்கள் என்பதை அறிந்தும், நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார், அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார். விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை என்கிறது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது என்று உறுதியாய் தங்கள் விசுவாசத்திற்காக நின்றார்கள். அவர்கள் விசுவாசத்தின் படியே கர்த்தர் அவர்களைத் தப்புவித்தார், அவர்களுக்கு கனமும், புகழ்ச்சியும் உண்டாகி சத்துருக்களின் நடுவில் அவர்கள் தலைகள் உயர்த்தப்பட்டது. கர்த்தருடைய பிள்ளைகளே, நீங்கள் அக்கினி போன்ற பாடுகளின் வழியாகக் கடந்து செல்லும் போது சோர்ந்து போகாதிருங்கள். நீங்கள் அக்கினியினால் உப்பிடப்பட்ட பின்பு காத்தர் உங்கள் தலையை உயர்த்துவார்.
கர்த்தருக்காக நாம் செய்கிற ஊழியத்தின் வேலைப் பாடு எத்தன்மை உடையது என்பதையும் கூட அக்கினி வெளிப்படுத்தும். அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறெ அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது. ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல், மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக் கட்டினால், அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும், நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியிலே வெளிப்படுத்தப்படும், அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும். அதன்மேல் ஒருவன் கட்டினது நிலைத்தால், அவன் கூலியைப் பெறுவான் (1 கொரி. 3:11-14). கர்த்தருக்காக ஊழியம் செய்வது நல்லது, நம்முடைய ஊழியங்களை அக்கினி உப்பிடும், அக்கினி பரிசோதிக்கும் வேளையில் உத்தமமானதாகக் காணப்பட வேண்டும், உண்மை உள்ளதாய் காணப்பட வேண்டும், அப்போது தான் கர்த்தரிடத்திலிருந்து கனத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar