முன்னே பிரயோஜனமில்லாதவன்,    இப்பொழுதோ பிரயோஜனமுள்ளவன்.

முன்னே அவன் உமக்குப் பிரயோஜனமில்லாதவன்,    இப்பொழுதோ உமக்கும் எனக்கும் பிரயோஜனமுள்ளவன் (பில. 1:11).

நம்முடைய தேவன்,    பிரயோஜனமில்லாதவர்களை,    பிரயோஜனமுள்ளவர்களாய் மாற்றுகிறவர்,    அற்பமாய் கருதப்பட்டவர்களை ஆசீர்வாதத்தின் பாத்திரங்களாய் மாற்றுகிறவர். 

ஒநேசிமு என்ற பிலமோனுடைய அடிமை அவனை விட்டு ஓடிவிட்டதினால் அவனுக்குப் பிரயோஜனமற்றவனாய் காணப்பட்டான். ஆனால்,    அவன் ஓடிச்சென்று ரோமாபுரியில் வீட்டுக் காவலில் காணப்பட்ட அப்போஸ்தலனாகிய பவுலோடு சேர்ந்தான். பின்னாட்களில் அவனைக் குறித்து பவுல் எழுதும் போது,    கட்டப்பட்டிருக்கையில் நான் பெற்ற என் மகனாகிய ஒநேசிமுக்காக உம்மை மன்றாடுகிறேன் என்று பிலமோனுக்கு கடிதம் எழுதினான். ஓடிச் சென்றவன் பவுலோடு சேர்ந்து,    அவனுக்கு உதவியாகக் காணப்பட்டதினால் அவனை தன் குமாரனாக பவுல் அன்பு பாராட்டினான். அவனைக்குறித்து தனக்குப் பிரியமுள்ளவனும்,    கர்த்தருக்கு உடன் வேலையாளுமாயிருக்கிற,    பிலேமோனுக்கு எழுதும் போது,    ஒநேசிமு எனக்கு பிரயோஜனமுள்ளவனாய் காணப்படுவதினாலே,    நாம் இரண்டு பேரும் கிறிஸ்துவுக்கு உடன் வேலையாட்களாய் காணப்படுவதினாலே,    உனக்கும் அவன் பிரயோஜனமுள்ளவன் என்று எழுதினான். ஒனேசிமு என்ற பெயரின் அர்த்தமும் பிரயோஜனமுள்ளவன்,    அவன் பெயரின்படியே பின்னாட்களில் அப்போஸ்தலர்களுக்குப் பிரயோஜனமுள்ள பாத்திரமாக அவன் காணப்பட்டான். 

மாற்குவை குறித்து பவுல் திமோத்தேயுவுக்கு எழுதும் போதும்,    அவனை உன்னோடே கூட்டிக்கொண்டுவா,    ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனமுள்ளவன் (1 தீமோத் 4:11) என்று எழுதினான்.  மாற்கு பர்னபாவின் உறவினன் என்று வேதம் கூறுகிறது. இவனிமித்தமாக பவுலும் பர்னபாவும் ஊழியத்தின் பாதையில் பிரிய வேண்டியது வந்தது. அப்போஸ்தலனாகிய பவுலின் முதல் மிஷனறி பயணத்தில்,    இவனுக்கும் பர்னபாவுக்கும் உதவியாக மாற்கு காணப்பட்டான். ஆனால் பாதி வழியிலேயே இவர்கள் இரண்டு பேரையும் விட்டு மாற்கு பிரிந்து சென்று விட்டான். முதல் மிஷனறி பயணத்தை முடித்து விட்டு பவலும்,    பர்னபாவும் அந்தியோகியாவுக்கு திரும்பி வந்த சிலநாளைக்குப் பின்பு பவுல் பர்னபாவை நோக்கி,    நாம் கர்த்தருடைய வசனத்தை அறிவித்திருக்கிற சகல பட்டணங்களிலுமுள்ள சகோதரர்கள் எப்படியிருக்கிறார்களென்று போய்ப்பார்ப்போம் வாரும் என்றான். அப்பொழுது பர்னபா மாற்குவை கூட அழைத்துக்கொண்டுபோகவேண்டும் என்றான். ஆனால் பவுலோ,    அவன் பம்பிலியா நாட்டிலே நம்மை விட்டுப் பிரிந்து நம்மோடே கூட ஊழியத்துக்கு வராததினாலே,    அவனை அழைத்துக்கொண்டு போகக்கூடாது என்றான். இதைப்பற்றி அவர்களுக்குள்ளே கடுங்கோபமூண்டபடியினால் அவர்கள் ஒருவரையொருவர் விட்டுப் பிரிந்தார்கள். ஆனால் அதே மாற்குவைக் குறித்து பின்நாட்களில் பவுல்; எழுதும் போது ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனமுள்ளவன் என்றான். ஒருகாலத்தில் பிரயோஜனமற்றவனாகக் காணப்பட்டவன் பின்நாட்களில் பிரயோஜனமுள்ளவனாக மாறினான். மாற்கு சுவிஷேசத்தை எழுதினவனும் இந்த மாற்குவாகக் காணப்படுகிறான். 

கர்த்தருடைய பிள்ளைகளே,    கிறிஸ்துவுக்குள் பிரயோஜனமற்றவர்கள் கூட பிரயோஜனமுள்ளவர்களாக மாறுவார்கள். ஆகையால் தேவனுடைய ராஜ்யத்திற்கு நான் பிரயோஜனமற்றவனாகக் காணப்படுகிறேன் என்று கர்த்தருடைய பணிகளில் ஒதுங்கிக் கொள்ளாமல்,    உங்களை தனக்குப் பிரயோஜனமுள்ள பாத்திரங்களாய் மாற்றின கர்த்தருக்காக எதையாகிலும் செய்ய உங்களை இன்றே அர்ப்பணியுங்கள்.  

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *