சங் 54:6. உற்சாகத்துடன் நான் உமக்குப் பலியிடுவேன்; கர்த்தாவே, உமது நாமத்தைத் துதிப்பேன், அது நலமானது.
சீப்பூரார் என்ற ஜனங்கள் சவுல் இராஜாவிடம் வந்து தாவீது தங்களிடம் ஒளித்துக்கொண்டிருக்கிறான் என்று சொன்னார்கள். நம் ஊர் மொழியில் சொல்லவேண்டுமானால் தாவீதை தேசத்தின் தலைவரிடம், உயர் அதிகாரியிடம் சென்று போட்டுக்கொடுத்துவிட்டார்கள். ஆகையால் தாவீது சொல்லுகிறான் அந்நியர் எனக்கு விரோதமாய் எழும்புகிறார்கள்; கொடியர் என் பிராணனை வாங்கத் தேடுகிறார்கள் என்பதாக. இப்படி நம்முடைய வாழ்க்கையிலும் அநேகர் அந்நியர்களாக, விரோதமாக எழும்புவார்கள். நமக்கே தெரியாமல் நம்முடைய மேல் அதிகாரியிடம் சென்று நம்மை பற்றி இகழ்வாக பேசிவிடுவார்கள். கூடவே இருந்து நல்வார்த்தைகளை பேசி, நயவஞ்சகமாக நமக்கு விரோதமாக அநேகர் எழும்பலாம். தாவீதின் வாழ்க்கை அப்படியாக இருந்தது. ஆகையால் தான் ஒருமுறை தாவீது சொல்லுவான் என்னை நிந்தித்தவன் சத்துரு அல்ல, அப்படியிருந்தால் சகிப்பேன்; எனக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டினவன் என் பகைஞன் அல்ல, அப்படியிருந்தால் அவனுக்கு மறைந்திருப்பேன். எனக்குச் சமமான மனுஷனும், என் வழிகாட்டியும், என் தோழனுமாகிய நீயே அவன் (சங் 55:13,14) என்பதாக. இயேசுவின் வாழ்க்கையிலும் கூடவே இருந்த யூதாஸ்காரியோத்து அவருக்கு விரோதமாக தன் குதிகாலை உயர்த்தினான்.
ஆனால் தாவீது, இப்படிப்பட்ட நபர்கள் தன்னை சூழ்ந்திருக்கையில், விரோதம் செய்கிறவர்கள் தன்னை சுற்றிலும் இருக்கையில் அவன் சொல்லுகிறான் நான் கர்த்தருக்கு உற்சாகத்துடன் பலியிடுவேன் என்பதாக. அவனுக்குள்ளாக இப்படி கடினமான சூழ்நிலையில் எப்படி உற்சாகம் காணப்பட்டது. அநேக வேலைகளில் சூழ்நிலைகளின் நிமித்தமாக நாம் உற்சாகத்துடன் கர்த்தருக்கு பலியிடுவதில்லை. சோர்வோடு, உடைந்த உள்ளதோடு, முறுமுறுப்போடு தான் கர்த்தருக்கு துதி பலிகளை, ஸ்தோத்திர பலிகளை, காணிக்கை பலிகளை செலுத்துகிறோம். அப்படியாக தேவ பிள்ளைகள் இருக்கலாகாது. தாவீதை போல எல்லா சூழ்நிலையிலும் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து உற்சாகத்துடன் கர்த்தரை துதிக்க வேண்டும். கர்த்தரை துதிக்கும் போது எப்பொழுதும் உள்ளத்தில் குதூகலமும், மகிழ்ச்சியும், சந்தோஷமும், உற்சாகமும் காணப்பட வேண்டும். கர்த்தரை எக்காலத்திலும் துதிப்பேன் என்ற நிலையில் தேவ ஜனங்கள் இருக்க வேண்டும். ஆதி அப்போஸ்தலர்களாகிய பவுலும் சீலாவும் தங்களுக்கு நேரிட்ட உபத்திரவத்தில் சந்தோசத்தோடு பாடினார்கள். இப்படி நமக்கு மேகம் போன்ற திரளான சாட்சிகள் இருக்கிறது.
தாவீது உற்சாக பலியிட்ட பிறகு என்ன நடந்தது? அடுத்த வசனம் சொல்லுகிறது அவர் எல்லா நெருக்கத்தையும் நீக்கி, என்னை விடுவித்தார்; என் கண் என் சத்துருக்களில் நீதி சரிக்கட்டுதலைக் கண்டது (சங் 54:7) என்பதாக. அதுபோல கர்த்தருடைய பிள்ளைகளாகிய நீங்கள் கடந்து செல்லுகிற எப்படிப்பட்டதான சூழ்நிலையாக இருந்தாலும் உற்சாகத்துடன் இருங்கள். பயப்படும் நாளில் கர்த்தரை நம்புங்கள். அவரே உங்களை ஆதரிக்கிறவர். உற்சாகத்துடன் அவருக்கு பலிகளை ஏறெடுங்கள். அப்பொழுது கர்த்தர் உங்களுக்கு இருக்கிற எல்லா நெருக்கத்தையும் நீக்குவார். விடுவிப்பார். உங்கள் சத்துருக்கள் நீதி சரிக்கட்டுதலை உங்கள் கண்கள் காணும்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org