நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன் (சங்கீதம் 56:3) .
கவலைகளில் இரண்டு வகை. அதில், ஒன்று அடிப்படை தேவை முதற்கொண்டு எல்லாவற்றிற்கும் கவலைப்படுவது. மற்றொன்று இழப்புகளாழலும், ஏமாற்றங்களாலும், தோல்விகளாலும் உண்டாகும் கவலைகள்.
முதல் வகை, என்னத்தை உண்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும், என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள். தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் தான் இப்படி கவலைப்படுகிறான். எனவே, அதை விட்டுவிடுங்கள்.
இரண்டாவது வகை கவலையை ஒருநாளும் வெல்ல முடியாது. அதை கடந்து மட்டுமே செல்ல முடியும். ஏனெனில் வாழ்க்கையில் இழப்புகள், தோல்விகளால் ஏற்படும் கவலைகளை கடந்து செல்வது,நெருப்பின் ஊடாக கடந்து செல்வது போல. எனவே, பொசுங்கி போகும் புல்லாவதும், புடமிடப்படும் பொன்னை போல மாறுவதும், உங்கள் நம்பிக்கை எதின் மேல் இருக்கிறது என்பதை பொறுத்தது. நீங்கள் எந்த அளவிற்கு வலிமையாக இருக்குறீர்கள் என்பதை அது வெளிப்படுத்தும். உங்கள் நம்பிக்கை, உங்கள் வலிமையை தீர்மானிக்கிற காரணியாக இருக்கிறது.
உதாரணமாக, மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்க முடியாது என்பர். அதற்கு அர்த்தம், மண் குதிரை என்பது குதிரையை குறிப்பிடுவது அல்ல. அது, ஆற்றில் ஆங்காங்கே திட்டு திட்டாக காணப்படும் மண் குவியல். இதை நம்பி, நீங்கள் காலை வைத்தால், உள்ளே புதைகுழிக்குள் சிக்கி விடுவீர்கள். ஆனால் அது மேலிருந்து பார்ப்பதற்கு, தரைபோல காட்சியளிக்கும். ஒருவேளை தண்ணீரில் அடித்து சென்றால் கூட சில நேரங்களில் தப்பி விடலாம். ஆனால் இந்த குவியலில் சிக்கி விட்டால் உயிர்தப்ப முடியாது. எனவே, மண் குவியலை நம்பி ஆற்றை கடந்து செல்ல ஒருநாளும் முயற்சி செய்யக்கூடாது. அதுபோலத்தான், இந்த உலகமும் ஒரு மண்குவியல். மேலிருந்து பார்ப்பதற்கு, அது உங்களை கவலையில் இருந்து தப்புவிப்பது போல காண்பித்து கடைசியில் உங்களை மூழ்கடிக்க செய்யும். இங்கே, மண் குவியலை உங்கள் நம்பிக்கைக்கும், ஆற்றை உங்கள் கவலைகளுக்கும் உவமையாக வைக்க விரும்புகிறேன்.
அதுமட்டுமல்லாமல் உங்கள் இருதயத்தையும் நம்பக்கூடாது. ஏனெனில், அநேக காரியங்களில் நாம் ஏமார்ந்து போவது, நம்முடைய இருதயத்தை நம்பித்தான். இதையே, தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன் என்று வேதம் சொல்கிறது.
அப்படியென்றால் யாரை நம்ப வேண்டும்? கர்த்தரை நம்புங்கள்; அவரே துணையும் கேடகமுமாயிருக்கிறார்.
கர்த்தரை நம்புகிற ஒருவன்மேலும் குற்றஞ்சுமராது.
கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்துகொள்ளும்.
கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்.
கர்த்தர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.
தம்மை நம்புகிறவர்களை கர்த்தர் அறிந்திருக்கிறார்.
கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான்.
நான் நம்புகிறது கர்த்தராலே வரும்.
எனவே, கர்த்தர்மேல் நம்பிக்கை வைத்து கவலைகளை கடந்து செல்ல முயற்சி செய்யுங்கள்.
அப்போது நீங்களும் நெருப்பை கடந்து மின்னுகிற பொன்னாக மாறுவீர்கள்.
கர்த்தரை நம்புகிறவன் பாக்கியவான்.
Regunath Durai
Word of God Church,
Doha – Qatar
www.wogim.org