அவர்கள் நடுவிலே நான் வாசம் பண்ண, எனக்கு ஒரு பரிசுத்த ஸ்தலத்தை உண்டாக்குவார்களாக. நான் உனக்குக் காண்பிக்கும் வாசஸ்தலத்தின் மாதிரியின் படியும், அதினுடைய எல்லாத் தட்டுமுட்டுகளின் மாதிரியின் படியும் அதைச் செய்வீர்களாக (யாத். 25:8ää9).
கர்த்தர் ஜனங்கள் நடுவில் வாசம் பண்ண, பரிசுத்த ஸ்தலத்தை உண்டாக்கும் படிக்கு மோசேக்கு சொன்னார். அந்த பரிசுத்த ஸ்தலமாகிய ஆசரிப்புக் கூடாரம் சீனாய் மலையில் அவர் மோசேக்கு காண்பித்த மாதிரியின்படி செய்யும்படிக்குக் கட்டளையிட்டார், அந்த மாதிரியின்படியே அவைகளைச் செய்ய எச்சரிக்கையாயிரு(யாத்.25:40) என்று எச்சரிக்கவும் செய்தார். மோசே ஆசரிப்புக் கூடாரத்தின் அளவு மற்றும் அதில் காணப்பட்ட ஒவ்வொரு பொருள்களையும் கூட, கர்த்தர் அவனுக்குக் கற்றுக்கொடுத்த மாதிரியின் படியே செய்தான். அப்படிச் செய்து பிரதிஷ்டை செய்த வேளையில் கர்த்தருடைய மகிமையின் பிரசன்னம் ஆசரிப்புக் கூடாரத்தை நிறைத்தது, கர்த்தர் அவர்கள் நடுவில் வாசம் பண்ணினார். பகலில் மேகஸ்தம்பமாகவும், இரவில் அக்கினி ஸ்தம்பமாகவும் அவர்களுக்கு முன்சென்றார், அவர்கள் பாளையம் இறங்கின இடத்தில் அவர்களோடு தங்கியிருந்தர். ஒரு எதிரிகளும் அவர்களுக்கு முன்பாக நிற்கமுடியவில்லை, ஒவ்வொரு நாளும் அவர்கள் தேவைகளைச் சந்தித்தார். அவர்களில் பலவீனப்பட்டவன் ஒருவனும் இருந்ததில்லை, அவர்கள் வஸ்திரம் பழையதாய்ப் போகவும் இல்லை, கால்கள் வீங்கவும் இல்லை, பாதரட்சைகள் பழையதாய்ப் போகவும் இல்லை. கர்த்தர் ஒருவரே அவர்களை நடத்தினார்.
தாவீது ராஜாவுக்குக் கர்த்தருக்கு ஒரு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்ற வாஞ்சைக் காணப்பட்டது. அதின் மாதிரியையும், அதில் செய்யவேண்டிய சகல வேலைகளையும் அவனுக்குத் தெரியப்படுத்த, கர்த்தருடைய கரத்தினால் அவனுக்கு எழுதிக்கொடுக்கப்பட்டது என்று 1 நாளா. 28:19ல் வாசிக்கிறோம். அவை ஒவ்வொன்றையும் தாவீது, அவன் குமாரனாகிய சாலொமோனுக்குக் கற்றுக் கொடுத்தான். சாலொமோன் அந்த மாதிரியின்படி ஆலயத்தைக் கட்டி முடித்தான். அதின் பிரதிஷ்டையின் நாளில் தேவமகிமை ஆலயத்தில் இறங்கினது, ஆசாரியர்கள் கூட நிற்கமுடியாத அளவிற்குத் தேவ பிரசன்னம் காணப்பட்டது. சாலொமோன் கர்த்தருடைய சமூகத்தில் எறெடுத்த விண்ணப்பத்தைக் கேட்டு, இரவிலே அவனுக்குத் தரிசனமாகி, நான் உன் விண்ணப்பத்தைக் கேட்டு, இந்த ஸ்தலத்தை எனக்குப் பலியிடும் ஆலயமாகத் தெரிந்துகொண்டேன். நான் மழையில்லாதபடிக்கு வானத்தை அடைத்து, அல்லது தேசத்தை அழிக்க வெட்டுக்கிளிகளுக்குக் கட்டளையிட்டு, அல்லது என் ஜனத்திற்குள் கொள்ளைநோயை அனுப்பும்போது, என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு ஷேமத்தைக்கொடுப்பேன். இந்த ஸ்தலத்திலே செய்யப்படும் ஜெபத்திற்கு, என் கண்கள் திறந்தவையும், என் செவிகள் கவனிக்கிறவையுமாயிருக்கும் என்று கர்த்தர் வாக்களித்தார். நோவா கூட கர்த்தர் அவனுக்குக் கட்டளையிட்டபடியே பேழையைக் கட்டினதினால் பெருமழை பொழிந்து, ஜலப்பிரளயம் நாற்பது நாள் பூமியன்மேல் உண்டானபோது, பேழை பூமிக்குமேல் உயர்ந்து ஜலத்தின்மேல் மிதந்தது. அவனும், அவனுடைய குடும்பமும் பாதுகாக்கப்பட்டது.
கர்த்தருடைய பிள்ளைகளே, நம்முடைய வாழ்க்கை கூட வேதம் காட்டுகிற மாதிரியின்படி காணப்பட வேண்டும். ஒவ்வொரு குடும்ப வாழ்க்கைகளும் கூட கர்த்தருடைய வார்த்தை கற்றுக்கொடுக்கிற மாதிரியின்படி காணப்பட வேண்டும். நீங்கள் அந்த மாதிரியின்படி உங்கள் வாழ்க்கையைக் கட்டி எழும்பும் போது தேவமகிமை உங்களை மூடும். கர்த்தர் உங்களுக்குள் வாசம் பண்ணுவார். அவர் உங்களோடு இருந்தால் எல்லா நன்மைகளும் கிருபைகளும் உங்களைத் தொடரும், அவர் சிறகின் கீழிருக்கிற ஆரோக்கியம் உங்களை மூடும். பாடுகளும், பிரச்சினைகளும் வரும் போது அதற்கு மேலே நீங்கள் காணப்படுவீர்கள். உங்கள் சத்துருக்கள் முன்பாக உங்கள் தலைகள் உயரும். அதுபோல எல்லா சபைகளும் பரலோக மாதிரியின் படியும், ஒவ்வொரு ஆராதனைகளும் பரலோக சாயலுக்கும், நிழலுக்கும் ஒத்ததாகவும் காணப்படும் பொழுது, தேவ மகிமை சபைகளை மூடும், கர்த்தர் சபை நடுவில் உலாவுவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar