நிச்சயமாகவே முடிவு உண்டு, உன் நம்பிக்கை வீண் போகாது (நீதி.23:18).
ஒரு புதிய மாதத்திற்குள்ளாய் தேவன் நம்மை நடத்திக் கொண்டுவந்தார், அவருடைய நாமத்திற்கே மகிமை உண்டாகட்டும். கர்த்தருடைய பிள்ளைகள் அனேக காரியங்களுக்காக வருஷத்தின் துவக்கத்திலிருந்து, இதுவரைக்கும் எதிர்பார்ப்போடு காத்திருக்கக் கூடும். எதிர்பார்த்த காரியங்கள் கைகூடிவராததினால் கலங்கிப் போன நிலையில்கூட காணப்படலாம். ஆனால் ஆண்டவர் கூறுகிறார் உங்களுக்கு ஒரு எதிர்காலம் உண்டு, உங்கள் காரியங்களுக்கு நிச்சயமான முடிவு உண்டு என்று, ஆகையால் சோர்ந்து போகாதிருங்கள்.
நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும் படிக்கு, கர்த்தர் உங்கள் பேரில் நினைத்திருக்கிற நினைவுள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே என்று எரே.29:11ல் எழுதப்பட்டிருக்கிறது. யூதாவின் ஜனங்கள் பாபிலோனில் அடிமைகளாய் காணப்பட்ட வேளையில் கர்த்தர் கொடுத்த வாக்குத்தத்தமாக இந்த வசனம் காணப்படுகிறது. அவர்கள் கர்த்தர் எங்களைக் கைவிட்டார், ஆண்டவர் என்னை மறந்தார் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள், ஆனால், நீங்கள் எதிர்பார்க்கும் முடிவை நான் உங்களுக்குக் கொடுப்பேன் என்று கர்த்தர் வாக்களித்தார். வார்த்தையில் உண்மையுள்ள தேவன், அப்படியே அவர்களை விடுவித்து, மீண்டும் யூதேயா தேசத்திற்கு அவர்களை அழைத்துக் கொண்டு வந்தார். கர்த்தருடைய பிள்ளைகளே, உங்கள் ஒவ்வொருவரையும் உள்ளங்கையில் வரைந்து வைத்திருக்கிறவர், உங்களைக் குறித்த நினைவாகவே இருக்கிறவர், உங்களை ஒருநாளும் மறப்பதில்லை.
ஆபிரகாம் கர்த்தரோடு சஞ்சரித்தவன், அவருடைய சினேகிதன் என்று அழைக்கப்பட்டவன், அனேக வாக்குத் தத்தங்களைக் கர்த்தர் அவனுக்குக் கொடுத்திருந்தார். அவைகள் நிறைவேறக் காலதாமதமான வேளையில், ஆண்டவரைப் பார்த்து, அடியேனுக்கு என்ன தருவீர்? நீர் எனக்குப் புத்திரசந்தானம் அருளவில்லை, என் வீட்டிலே பிறந்த பிள்ளை எனக்குச் சுதந்தரவாளியாய் இருக்கிறான் என்று சோந்து போய் அவநம்பிக்கையின் வார்த்தைகளைக் கர்த்தரோடு கூறினான். கர்த்தர்; அவனை வெளியே அழைத்து வந்து, நீ வானத்தை அண்ணாந்து பார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி, பின்பு அவனை நோக்கி, உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும் என்றார். ஆபிரகாம் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார். ஆகையால் வானத்தின் நட்சத்திரங்களைப் போலவும், பூமியின் தூளைப் போலவும், கடற்கரை மணலைப் போலவும் அவனுக்குத் திரளான சந்ததியைக் கொடுத்து, அவனுடைய எதிர்பார்ப்பைக் கர்த்தர் நிறைவேற்றி, அவனைப் பெருகப்பண்ணினார். கர்த்தருடைய பிள்ளைகளே, உங்கள் நம்பிக்கையை இழந்து போகாதிருங்கள், அவநம்பிக்கைக் கொள்ளாதிருங்கள். நீங்கள் காத்திருக்கும் காரியங்களுக்கு முடிவு வருகிறது.
துன்மார்க்கனுக்கு நல்முடிவு இல்லை, துன்மார்க்கனுடைய விளக்கு அணைந்துபோம் என்று நீதி.24:20ல் எழுதப்பட்டிருக்கிறது. துன்மார்க்கனுக்கு எதிர்காலம் இல்லை என்பது இந்த வசனத்தின் இன்னொரு அர்த்தமாகக் காணப்படுகிறது. ஆகையால் கர்த்தருடைய ஜனங்கள் எல்லா துன்மார்க்க கிரியைகளையும், பாவத்தின் கிரியைகளை விட்டு விலகிவிடுங்கள். இந்த பூமியின் ஜனங்களுக்கு ஒத்த வேஷங்களைத் தரித்துக் கொள்ளாதிருங்கள், அவர்களுடைய வழிகளைப் பின்பற்றிவிடாதிருங்கள். மாறாக, கர்த்தருக்குப் பயந்த ஜீவியம் செய்யுங்கள். பரிசுத்தமாய் வாழ உங்களை அர்ப்பணியுங்கள், சபை கூடிவருதலை விட்டு விடாதிருங்கள், அவருடைய வசனத்திற்கு நடுங்குங்கள், உள்ளத்தில் உண்மையாயிருங்கள், ஆவியானவரை ஒருநாளும் துக்கப்படுத்தாதிருங்கள். அப்போது கர்த்தர் உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி, எல்லாக் காத்திருப்புக்கும் ஒரு முடிவைக் கட்டளையிட்டு உங்களைக் கனப்படுத்தி ஆசீர்வதிப்பார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar