மத் 4:4. அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.
வார்த்தை என்பதற்கு எபிரேய மூல பதத்தில் இரண்டு அர்த்தங்கள் காணப்படுகிறது. லோகோஸ் (Logos) என்றும் ரேமா (Rhema) என்றும் காணப்படுகிறது. வேதாகமத்தில் ஆதியாகமம் முதல் வசனத்திலிருந்து வெளிப்படுத்தின விசேஷம் கடைசி வசனம் வரைக்கும் எழுதப்பட்ட அத்தனை வார்த்தைகளும் லோகோஸாக காணப்படுகிறது. நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் (Rhema) உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும் (யோவா 15:7) என்று வசனம் சொல்லுகிறது. விசுவாசம் கேள்வியினால் வரும், கேள்வி வசனத்தால் வரும். அந்த வசனம் தான் ரேமாவாக காணப்படுகிறது.
ஒரு ஊழியக்காரர் ரேமா வார்த்தைக்கும் லோகோஸ் வார்த்தைக்கும் வித்தியாசத்தை சொன்னார். பேசப்பட்ட வார்த்தை லோகோஸ் என்றும் பேசப்படுகிற வார்த்தை ரேமா என்றும் அழைக்கலாம் என்று சொன்னார். பால் யாங்கி சோ என்ற தேவ மனிதர் சொல்லுகிறார் ரேமா வார்த்தை என்பது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் குறிப்பிட்ட மனிதனுக்காக கொடுக்கப்படுகின்ற குறிப்பிட்ட தேவ வார்த்தையாகும் என்பதாக. தேவன் ஒருதரம் விளம்பினார் இரண்டு தரம் கேட்டிருக்கிறேன் என்று வசனம் சொல்லுகிறது. தேவன் குறிப்பிட்ட காரியத்தை இரண்டாம் முறை உறுதிப்படுத்துகிறாரென்றால் அது ரேமா வார்த்தையாக காணப்படுகிறது. இன்று ஒவ்வொருநாளும் ரேமா வார்த்தையை ஆண்டவரிடம் பெற்றுக்கொள்ள தாகம் உள்ளவர்களாய் காணப்படவேண்டும்.
எழுதப்பட்ட வார்த்தையாகிய லோகோஸ் எல்லாருக்கும் பொதுவானது. அது இந்தியர்கள், அமெரிக்கர்கள், சீனா தேசத்தை சேர்ந்தவர்கள் என்று பாரபட்சம் இல்லாமல் எல்லாருக்கும் உரியதாய் காணப்படுகிறது. எல்லாரும் லோகோசை அறிந்து தேவ அறிவை பெற்றுக்கொள்ளலாம். பிசாசும் இந்த லோகோஸ் என்னும் வார்த்தையை விசுவாசிக்கிறான். உலகத்தில் பிற மதத்தலைவர்களும் லோகோஸ் என்னும் வார்த்தையை படித்து அறிந்துகொள்ளுகிறார்கள். ஆனால் ரேமா எல்லாருக்கும் கொடுக்கப்படுவதில்லை. தேவனுடைய சமூகத்தில் பரிசுத்த ஆவியானவரால் லோகோஸ், ரேமாவாக உயிர்ப்பிக்கும் வரை காத்திருக்கும் குறிப்பிட்டவர்களுக்கு மாத்திரமே கொடுக்கப்படுகிறது. தேவனிடத்தில் காத்திருக்க நேரமில்லையென்றால் ரேமா வார்த்தையை பெற்றுக்கொள்ளமுடியாது. அவசர உலகில் அவசர உணவை போல, அவசரமாக தேவ வசனத்தை படித்துவிட்டு கடந்து செல்கிறவர்கள் தேவனிடத்தில் ரேமா வார்த்தையை பெற்றுக்கொள்ள முடியாது. மாறாக வசனத்தை அசைபோடுகிறவர்களாக, கர்த்தருக்கு காத்திருக்கிறவர்களாக, வாஞ்சையோடு பொறுமையாய் காத்திருப்பவர்களுக்கு ஆவியானவர் ரேமா வார்த்தையை உங்கள் சூழ்நிலைக்கேற்ப கொடுப்பார்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org