யாக் 1:2,3 என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்.
விசுவாச பரீட்சையில் நாம் எல்லாரும் வெற்றியுள்ள வாழ்க்கை வாழ வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். இயேசு கடல் மீது நடந்ததை பார்த்த பேதுரு தானும் கடலில் நடக்க வேண்டும் என்று விசுவாசத்துடன் நடந்தான். குறிப்பாக எப்பொழுது இயேசு நீயும் கடலில் நட என்று சொன்னாரோ அதன் பின்பு தான் அவன் விசுவாசத்துடன் கடலில் நடந்தான்.
தென் கொரியாவில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மிகவும் வெள்ளம் வந்தது. அதை கடக்க முயற்சி செய்த சில சகோதரிகள் பேதுரு கடலில் நடந்தது போல நாங்களும் நடக்கிறோம் என்று சொல்லி அந்த வெள்ளத்தில் நடந்தார்கள். கடைசில் அந்த வெள்ளம் அவர்களை வாரிக்கொண்டு போய் விட்டது.
அதுபோல ஒரு விசுவாசியின் மகன் சிறு வயதில் வியாதிபட்டு மரித்தான். அதை பார்க்க வந்த அநேக ஜனங்களுக்கு முன்பாக அந்த விசுவாசி லாசருவை உயிரோடு எழுப்பினீரே, என் பிள்ளையை எழுப்பும் என்று ஜெபித்தார். கடைசியில் ஒன்றும் ஆகவில்லை.
இப்படிப்பட்டதான செயல்கள் விசுவாசத்தில் பெலவீனம் இல்லை அறிவின்மை என்றே சொல்லலாம். மாறாக அது இயேசுவுக்கும் அவமதிப்பை கொண்டு வரும் என்று கர்த்தருடைய பிள்ளைகள் அறிந்துகொள்ள வேண்டும்.
வேதத்தில் எழுதப்பட்ட எல்லா வார்த்தைகளும் லோகோஸ் (Logos) என்று அழைக்கப்படுகிறது. ஆனால் குறிப்பிட்ட வசனத்தை குறிப்பிட்ட நேரத்தில் கர்த்தர் உங்கள் இருதயத்தில் பேசுவது ரேமாவாக (Rhema) காணப்படுகிறது. ரேமா வெளிப்படாமல் நீங்கள் ஏதாவது காரியங்களை செய்வீர்களென்றால் அது ஒன்றும் பிரயோஜனமாக இராது. ஆகையால் எதை செய்தாலும் கர்த்தருடைய வசனத்தை பெற்றுக்கொண்ட பிறகு விசுவாசத்தில் காலை எடுத்து வையுங்கள்.
ஆபிரகாமிடம் ஆண்டவர் நான் உனக்கு காண்பிக்கும் தேசத்திற்கு வா என்று சொன்ன பிறகு தான் ஆபிரகாம் விசுவாசத்துடன் கடந்து சென்றான். உங்கள் விசுவாசத்தை கிரியைகளினால் காண்பிப்பதற்கு முன்பாக கர்த்தரிடம் வார்த்தையை பெற்றுக்கொள்ள வேண்டும். சோதனைகள் வரும்போது பொறுமையாக கர்த்தரிடம் வார்த்தை பெற்றுக்கொள்வதற்கு அவர் சமூகத்தில் காத்திருங்கள். விசுவாசத்தின் பரீட்சை உங்களுக்கு பொறுமையை உண்டாக்கும்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org