நான் ஆண்டவருக்கு அடிமை.

அதற்கு மரியாள்: இதோ,    நான் ஆண்டவருக்கு அடிமை,    உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள். அப்பொழுது தேவதூதன் அவளிடத்திலிருந்து போய்விட்டான் (லூக்கா 1:38).

காபிரியேல் தூதன்,    மரியாளிடம் நீ கர்த்தருடைய கண்களில் கிருபை பெற்றாய்,    ஆகையால்,    நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய்,    அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக என்றான். மரியாள் தேவதூதனை நோக்கி,    இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்ற வேளையில் பரிசுத்த ஆவி உன்மேல் வரும்,    உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்,    ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளவர் தேவனுடைய குமாரன் என்னப்படுவார் என்றும்,    உனக்கு இனத்தாளாயிருக்கிற எலிசபெத்தும் தன் முதிர்வயதிலே ஒரு புத்திரனைக் கர்ப்பந்தரித்திருக்கிறாள்,    அவளுக்கு இது ஆறாம் மாதம் என்றும்,    தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை என்றும் கூறினான். அதற்கு மரியாள்,    நான் ஆண்டவருக்கு அடிமை,    உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்று தன்னை பூரணமாய் அர்ப்பணித்தாள்.

மரியாள்,    ஏற்கனவே  யோசேப்பிற்கு  நியமிக்கப்பட்டவள்.  இஸ்ரவேலில்  விவாக நியமனம் என்பது மிகவும் முக்கியமானது. அது மரணத்தின் மூலம்  அல்லது சட்டப்படி விவாகரத்தின் மூலம் மட்டும் ரத்து செய்யமுடியும். ஆனால் மரியாள் அதைக்குறித்து யோசிக்காதபடிக்கு,    சமுதாயம் என்ன நினைக்கும் என்றும் கவலைப்படாதபடி,    ஆண்டவர் தன்னைக் குறித்து கொண்ட சித்தத்தைத் தேவதூதன் மூலம் அறிந்த உடன்,    அவருக்குத் தன்னை அடிமையாக ஒப்புக் கொடுத்து,    அவருடைய வார்த்தைக்கு தன்னை முழுவதும் அர்ப்பணித்தாள். உம்முடைய வார்த்தையின் படி எனக்கு ஆகட்டும் என்று அறிக்கையிட்டு தன் விசுவாசத்தையும் வெளிப்படுத்தினாள். ஆகையால் இன்றும் மரியாளைக் கிருபை பெற்ற பாத்திரமாய்,    பாக்கியவதியாக நாம் பார்க்கிறோம். 

கர்த்தருடைய பிள்ளைகளே,    நம்முடைய தேவன் பேசுகிறவர். உலகத்தில் காணப்படுகிற மற்ற புஸ்தகங்களுக்கும்,    வேதப் புத்தகத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால்,    கர்த்தருடைய வார்த்தையில் அவருடைய ஜீவன் காணப்படுகிறது. ஆகையால்,    வேதவார்த்தைகள் நம்மோடு பேசும். வேதத்தை வாசிக்கும் போதும்,    செய்திகள் கேட்கும் போதும்,    பாடல்கள் மூலமும்,    சூழ்நிலைகள் மூலமும்,    மற்றும் பலவிதங்களில் கர்த்தர் நம்மோடு பேசி,    உணர்த்துகிறவர். கர்த்தருடைய வார்த்தைக்கு உங்களை அர்ப்பணித்து ஜீவிக்கப் பழகுங்கள். வேதம் சான்று அளிக்காத எந்த காரியங்கயையும் செய்யாதிருங்கள். கர்த்தருடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும் எனக்காகவும்,    என் பிள்ளைகளுக்காகவும் கொடுக்கப்பட்டிருக்கிறது என்ற சிந்தை உங்களுக்குள் காணட்டும்.  அவருடைய சத்தத்தைக் கேட்கும் போது,    இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தினது போல உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதேயுங்கள். மரியாள்,    ஆண்டவருடைய வார்த்தைக்குத் தன்னை ஒப்புக் கொடுத்ததைப் போல,    அவருடைய வார்த்தைக்கு உங்களைப் பூரணமாய் ஒப்புக் கொடுங்கள். அப்போது கர்த்தர் உங்களையும் பாக்கியவான்களாகவும்,    பாக்கியவதிகளாகவும் மாற்றுவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *