1 நாளா 29:14. இப்படி மனப்பூர்வமாய்க் கொடுக்கும் திராணி உண்டாவதற்கு நான் எம்மாத்திரம்? என் ஜனங்கள் எம்மாத்திரம்? எல்லாம் உம்மால் உண்டானது; உமது கரத்திலே வாங்கி உமக்குக் கொடுத்தோம்.
தாவீதுராஜா சபையார் எல்லாரையும் நோக்கி சொல்லுகிறான் நாமெல்லாரும் இணைந்து செய்யவேண்டிய வேலையோ பெரியது. அது மனிதனுக்கல்ல தேவனுக்கு கட்டும் அரண்மனை என்று சொல்லுகிறான். அதுபோல தான் இன்றைக்கும் கர்த்தருடைய பிள்ளைகள் எல்லாரும் செய்ய வேண்டிய வேலை பெரியதாய் இருக்கிறது. கர்த்தருடைய இராஜ்ஜியத்தை கட்டவேண்டிய மிக பெரிய பொறுப்பில் ஒவ்வொருவரும் காணப்படுகிறோம். எழுப்புதல் சமீபத்தில் வந்திருக்கிறதை நாமெல்லாரும் காண்கிறோம். ஆவியானவர் எழுப்புதலை அனுப்பும் போது ஜனங்கள் எல்லாரும் சபையை தேடி ஓடி வருவார்கள். அப்பொழுது இடம் பற்றாக்குறை காணப்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். அதை முன்னறிந்து கர்த்தருடைய பிள்ளைகள் கர்த்தருக்கென்று அரண்மனையை கட்டவேண்டும் என்ற பெரிதான வேலையைகுறித்த பாரமும் தரிசனமும் உடையவர்களாக காணப்படவேண்டும்.
இந்த பெரிதான வேலையை குறித்து தாவீது ஜனத்துக்கு சொன்னவுடன், ஜனங்கள் ஆர்வத்தோடு பொன்னையும், வெள்ளியையும், இரும்பையும், மரத்தையும், கற்களையும், சகலவித ரத்தினங்களையும், கோமேதக கற்கைகளையும் காணிக்கையாக கொடுத்தார்கள்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தாவீது சொல்லுகிறான் இப்படி மனப்பூர்வமாய்க் கொடுக்கும் திராணி உண்டாவதற்கு நான் எம்மாத்திரம்? என் ஜனங்கள் எம்மாத்திரம்?. முதலாவதாக கர்த்தருடைய பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் கர்த்தருடைய பணிக்கு கொடுக்கும் திராணியை கொடுத்திருக்கிறார் என்பதை கண்டுகொள்ள வேண்டும். ஒருவரும் சொல்லமுடியாது எனக்கு திராணி இல்லை என்று. எவ்விதத்திலும் கொடுக்கும் திராணியை கர்த்தர் கொடுத்திருக்கிறார். ஏழை விதவை ஆலயத்தில் காணிக்கை செலுத்தியதை இயேசு மெச்சிக்கொண்டார். இப்படி திராணி இருக்கும்போது அநேகருக்கு இந்நாட்களில் மனப்பூர்வம் இல்லை என்பது தான் கேள்விக்குறியாக காணப்படுகிறது.
மாத்திரமல்ல, தாவீது சொல்லுகிறான் உமது கரத்திலே வாங்கி உமக்குக் கொடுத்தோம் என்பதாக. நாம் சேலைசெய்து, தொழில் செய்து சம்பாதிக்கும் சம்பாத்தியம் நம்மால் உண்டானதல்ல; நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனம் உங்களுக்கு சம்பளம் கொடுக்கிறது என்பதை காட்டிலும், கர்த்தருடைய கரத்திலிருந்து நீங்கள் வாங்குகிறீர்கள் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். அவர் கையில் வாங்கி அவருக்கு திரும்ப கொடுத்தாலும், நாம் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறோம் என்று வசனம் சொல்லுகிறது. இப்படி இருக்கையில் மனப்பூர்வமாய் கொடுக்கிற உங்களுக்கு திரும்ப பல மடங்கு கர்த்தர் கர்த்தர் கொடுத்து உயர்த்தாமல் இருப்பாரோ? நிச்சயம் உயர்த்துவார்.
செய்ய வேண்டிய வேலை பெரியது என்பதை அறிந்து உங்கள் பிள்ளைகளுக்கும், பிள்ளைகளுடைய பிள்ளைகளுக்கும் சொல்லி கர்த்தருக்கு கொடுக்கவேண்டிய முக்கியத்துவத்தை சொல்லிக்கொடுங்கள். கர்த்தர் நிச்சயமாய் உங்களை ஆசிர்வதித்து உயர்த்துவார்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org