சங் 80:1. இஸ்ரவேலின் மேய்ப்பரே, யோசேப்பை ஆட்டுமந்தையைப்போல் நடத்துகிறவரே, செவிகொடும்; கேருபீன்கள் மத்தியில் வாசம்பண்ணுகிறவரே, பிரகாசியும்.
நீங்களெல்லாரும் ஒரு காலத்தில் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் (மத் 9:36) காணப்பட்டீர்கள். காணாமற்போன ஆடுகளை போல் இருந்தீர்கள் (மத் 10:6). இப்படியிருக்க இயேசு காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டார் என்று வசனம் சொல்லுகிறது (மத் 15:24). திரளான ஆடுகளை கிராமப்புறங்களில் மேய்ப்பன் நடத்துவதை அநேகர் கண்டிருக்கலாம். நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான ஆடுகளை நடத்தும்போது ஒருசில ஆடுகள் இங்கும் அங்குமாக தவறிப்போகும்போது மிகவும் கவனத்துடன் அந்த ஆட்டை தன் மந்தைக்குள் சேர்க்க மேய்ப்பன் பிரயாசப்படுவான். ஒரு மனுஷனுக்கு நூறு ஆடுகளிருக்க, அவைகளில் ஒன்று சிதறிப்போனால், அவன் மற்றத் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைகளில் விட்டுப் போய்ச் சிதறிப்போனதைத் தேடாமலிருப்பானோ? (மத் 18:12) என்று இயேசு உவமையின் மூலம் பேசினார்.
இப்படித்தான் கடந்த வருடங்களில் வழித்தப்பி திரிந்தவர்களாக ஒருவேளை காணப்பட்டிருக்கலாம். ஆனால் புதிய வருடத்தில் உங்களை இயேசுவே உங்கள் அனைவரையும் நடத்துவார். காரணம் நல்ல மேய்ப்பனாகிய இயேசு உங்களுக்காக ஜீவனை கொடுத்திருக்கிறார். இயேசு சொன்னார் நானே நல்ல மேய்ப்பன்: நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான் (யோவா 10:11). ஜீவனை கொடுத்து இரட்சித்தவர் உங்களை நடத்தாமல் இருப்பாரா ? நிச்சயம் நடத்துவர். ஆனால் இயேசு ஒன்றை உங்கள் அனைவரிடமும் எதிர்பார்க்கிறார். என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது (யோவா 10:27) என்ற வசனத்தின்படி நீங்கள் அனைவரும் இயேசுவின் சத்தத்தை அறிந்து அவருக்கு பின் செல்லவேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார். என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். ஆகையால் எப்பொழுதும் இயேசுவின் சத்தத்தை கேட்க ஆயத்தமாய் இருங்கள். அவர் உங்களை நடத்துவார்.
மாத்திரமல்ல, நீங்களும் அநேகரை தொழுவத்திற்குள் (சபைக்குள்) கொண்டு வர வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார். இயேசு பேதுருவிடம் சொல்லுவார் நீ என் ஆடுகளை மேய்ப்பாயாக என்று மீண்டும் மீண்டும் சொல்லுவதை பார்க்கிறோம். அதுபோல தான் சிதறியிருக்கிற, வழிதப்பிப்போன, தொழுவத்திலில்லாத நபர்களை நாம் கண்டு சந்தித்து இயேசுவின் நற்செய்தியை அறிவித்து அவர்களை தொழுவத்திற்குள் அழைத்துக்கொண்டு வர வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார். காரணம் எல்லாருக்காகவும் இயேசு மரித்தார். நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார் (ஏசா 53:6) என்று வசனம் சொல்லுகிறது.
சிதறுண்ட ஆடுகளைப்போலிருந்தீர்கள்; இப்பொழுதோ உங்கள் ஆத்துமாக்களுக்கு மேய்ப்பரும் கண்காணியுமானவரிடத்தில் திருப்பப்பட்டிருக்கிறீர்கள் (I பேதுரு 2:25) என்பதை அறிந்து உற்சாகத்துடன் இருங்கள். இயேசு உங்களுக்கு பெரிய மேய்ப்பராக (எபி 13:20) இருந்து உங்களை நடத்துவார்.
கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org