உண்மையுள்ள மனுஷன்.

உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான், ஐசுவரியவனாகிறதற்குத் தீவிரிக்கிறவனோ ஆக்கினைக்குத் தப்பான் (நீதி. 28:20).

உண்மையுள்ள மனுஷர்களுக்குக் கர்த்தர் பரிபூரண ஆசீர்வாதங்களை வாக்களித்திருக்கிறார், உண்மையாய் நடக்கிறவர்கள் அவருக்குப் பிரியம். தனிப்பட்ட ஜீவியங்களிலும்,    குடும்ப வாழ்க்கைகளிலும்,    ஊழியத்திலும் ஆசீர்வாதங்களை விரும்பாதவர்கள் யாரும் இருப்பதில்லை. நாம் கையிடுகிற வேலைகள்,       எடுக்கிற பிரயாசங்கள்  எல்லாம் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். கர்த்தருடைய ஜனங்கள் உண்மையுள்ளவர்களாக இருந்தால் அதை உங்களுக்குக் கர்த்தர் கட்டளையிடுவார்.

மோசே கர்த்தருடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாகக் காணப்பட்டான் (எபி. 3:2). கர்த்தர் கொடுத்த பணியை உத்தமமாகச் செய்தான்,    அவன் ஜனங்களிடத்திலிருந்து ஒரு கழுதையை முதலாய் எடுத்துக்கொள்ளவில்லை,    அவர்களில் ஒருவனுக்கும் யாதொரு பொல்லாப்பு செய்யவும் இல்லை (எண். 16:15). கர்த்தர் அவனோடு முகமுகமாக பேசினார்,    அவன் மரித்த வேளையில் கர்த்தரே அவனை அடக்கம் செய்தார்,    மறுரூப மலையில் இயேசுவுடனே கூட பேசுகிற பாக்கியத்தையும் பெற்றான். ஒரு கனத்திற்குரிய பாத்திரமாக இன்றும் கருதப்படுகிறான். சாமுவேல் தீர்க்கதரிசியும் கூட,    ஜனங்களைப் பார்த்து,     கர்த்தரின்  சந்நிதியிலும்  அவர்  அபிஷேகம்பண்ணிவருக்கு முன்பாகவும் என்னைக் குறித்துச் சாட்சி சொல்லுங்கள்,    நான் யாருடைய எருதை எடுத்துக்கொண்டேன்? யாருடைய கழுதையை எடுத்துக் கொண்டேன்? யாருக்கு  அநியாயஞ்செய்தேன்? யாருக்கு இடுக்கண்செய்தேன்? யார் கையில் பரிதானம் வாங்கிக்கொண்டு கண்சாடையாயிருந்தேன்? சொல்லுங்கள்,    அப்படியுண்டானால் அதை உங்களுக்குத் திரும்பக்கொடுப்பேன் (1 சாமு. 12:3) என்ற வேளையில் இஸ்ரவேல் ஜனங்கள்,    நீர் எங்களுக்கு  அநியாயஞ்செய்யவும் இல்லை,    எங்களுக்கு இடுக்கண் செய்யவும் இல்லை,    ஒருவர் கையிலும் ஒன்றும் வாங்கவும் இல்லை என்றார்கள். தாண்முதல் பெயர்செபா மட்டும் சாமுவேல் கர்த்தருடைய தீர்க்கதரிசி என்று அறியப்பட்டிருந்தான்,    அவனுடைய வார்த்தைகளில் ஒன்றையும் கர்த்தர் கீழே விழ விடவில்லை,    அத்தனையையும் நிறைவேற்றினார். அப்போஸ்தலனாகிய பவுலும் கூட,    எபேசு சபை மூப்பர்களைப் பார்த்து,    ஒருவனுடைய  வெள்ளியையாகிலும்  பொன்னையாகிலும் வஸ்திரத்தையாகிலும் நான் இச்சிக்கவில்லை. நீங்கள் அறிந்திருக்கிறபடி,    எனக்கும்  என்னுடனேகூட  இருந்தவர்களுக்கும் வேண்டியவைகளுக்காக இந்தக் கைகளே வேலைசெய்தது என்றான்(அப். 20:33). அவனை உண்மையுள்ளவன் என்று கருதி கர்த்தர் கனமான ஊழியத்தை அவனுக்குக் கொடுத்தார். அனேகரை கர்த்தரண்டை நடத்தவும்,     சபைகளை ஸ்தாபிக்கவும்,    அனேக  நிருபங்களை எழுதவும் கர்த்தர் அவனுக்குக் கிருபை பாராட்டி ஆசீர்வதித்தார்.

கர்த்தருடைய பிள்ளைகளே,    உண்மையுள்ளவர்கள்  மனுப்புத்திரரில்  குறைந்திருக்கிற காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்,    அக்கிரமங்கள் எங்கும் பெருகியிருக்கிறது. யாரை வீழ்த்தியாகிலும்,    கொள்ளையிட்டாகிலும் தாங்கள் ஐசுவரிய வான்களாக வேண்டும் என்று ஓடுகிற ஜனங்கள் திரளாய் காணப்படுகிறார்கள். விசுவாசிகளும் ஊழியக்காரர்களும் கூட இதற்கு விதிவிலக்கல்ல. இப்படிப்பட்ட பொல்லாத நாட்களில் கர்த்தருடைய பங்காய் காணப்படுகிற நாம் எப்படி வாழப் போகிறோம்,    எப்படிப்பட்ட மாதிரியை வைக்கப் போகிறோம். யோபு கூறினதைப் போல,    என் ஆவி பிரியுமட்டும் என் உத்தமத்தை என்னை விட்டு  விலக்கேன்  என்றும்,  சுமித்திரையான  தராசிலே தேவன் என்னை நிறுத்தி,    என் உத்தமத்தை அறிவாராக என்றும் கூறியதைப் போல,     நாமும் சாட்யுள்ளவர்களாய் காணப்படுவோம். உண்மையும்,    உத்தமமும் உள்வர்களாய் காணப்பட்டால் கர்த்தர்  உங்களுக்குப் பரிபூரண ஆசீர்வாதங்களைத் தந்து உங்களையும்,    உங்கள் சந்ததிகளையும் ஆசீர்வதிப்பார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *