லுக் 12:49. பூமியின்மேல் அக்கினியைப் போட வந்தேன், அது இப்பொழுதே பற்றி எரியவேண்டுமென்று விரும்புகிறேன்.
அறியாத உஹான் என்னும் பட்டணத்தில் கடந்த 2019ல் கொரோனா வைரஸ் கிருமி உண்டானது. அது ஒருவரிடம் பரவி பின்பு பலபேரிடம் பரவியது. ஒரு பட்டணத்திலிருந்து மறுபட்டணத்திற்கும் பரவியது. மாநிலம் தாண்டி மாநிலம் பரவி பின்பு தேசம் விட்டு தேசம் தீவிரமாக பரவ ஆரம்பித்தது. உலக நாட்டின் தலைவர்கள் அதை தடுக்க பல முயற்சிகளை மேற்கொண்டார்கள் ஆனால் ஒன்றும் பலனளிக்கவில்லை. ஒரு நாட்டிலிருந்து மறு நாட்டிற்கு செல்ல பல விமான சேவைகளை நிறுத்தினார்கள். அநேக பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தினார்கள். ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்கள். இப்படி பல முயற்சிகளை மேற்கொண்டும் இந்த தொற்றானது உலகம் முழுவதும் பரவியது. இதை கண்களால் பார்த்து இன்று எல்லோரும் நம்புகிறார்கள் இந்த கிருமி வேகமாக தொற்றும் வியாதி என்பதாக.
ஆனால் இதைக்காட்டிலும் உண்மையான சம்பவம் இனி சம்பவிக்க போகிறது. உங்கள் மேல் பரிசுத்த ஆவியானவர் போடும் அக்கினி உலகமெங்கும் பரவப்போகிறது. பல தீர்க்கதரிசிகள் சொல்லுவது போல தென் இந்தியாவிலிருந்து ஆவியானவர் அக்கினியை ஊற்றப்போகிறார். தேசத்தின் தலைவர்கள், அதிகாரிகள் இதை தடுப்பதற்கு பல முயற்சி செய்தாலும், அக்கினி பற்றி பிடித்து எரியும். ஏனென்றால் இது இயேசுவின் விருப்பமாய் காணப்படுகிறது.
இயேசு இந்த உலகத்திற்கு எதற்காக வந்தார் என்று கேட்டால், பல காரணங்களை வேதம் சொல்லுகிறது. பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு இந்த உலகத்திற்கு வந்தார். இழந்து போனதைத் தேடவும், இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்தார். பிசாசின் கிரியைகளை அழிக்கும்படி வந்தார். சத்தியத்தை குறித்து சாட்சி கொடுக்க வந்தார். நித்திய ஜீவனைத் தந்தருள வந்தார். இப்படியிருக்க இதை காட்டிலும் ஒரு மிக முக்கியமான காரியத்திற்கு வந்தார். என்ன அது? பூமியின்மேல் அக்கினியைப் போட வந்தேன் என்று இயேசு சொன்னார். என் ஜனங்கள் பூமிக்கு வெளிச்சமாய் இருக்க, எரிந்து பிரகாசிக்கிற விளக்காய் இருக்கும்படி பூமியில் அக்கினியை போட வந்தேன் என்று இயேசு சொன்னார்.
நீங்கள் ஆண்டவருக்காக அக்கினி ஜுவாலையாக இருக்கும்படி இயேசு விரும்புகிறார். நீங்கள் அக்கினியாக இருந்தால் தான் புறஜாதி மக்களிடம் சவால் விட்டு சொல்லமுடியும் கர்த்தரே தேவன் என்று. நீங்கள் அக்கினியாக இருந்தால் தான் மந்திரவாதிகளுக்கு சவால் விட முடியும். நீங்கள் அக்கினியாக இருந்தால் தான் பாவத்தின் மேல் ஜெயமெடுத்து கறைதிரை அற்ற பரிசுத்த ஜீவியம் செய்ய முடியும். ஆதி அப்போஸ்தல நாட்களில் ஆவியானவர் அக்கினியாக ஊற்றப்பட்டபோது அந்தியோகிய, ஆசிய, ஐரோப்பா மற்றும் உலக நாடுகளில் அக்கினி பற்றி பிடித்தது. அதுபோன்ற இந்நாட்களில் ஆவியானவர் உங்கள் மேல் அக்கினி அபிஷேகத்தை ஊற்றுவாரென்றால், அந்த அக்கினி நீங்கள் போகிற எவ்விடத்திலும் பற்றி பிடித்து எரியும். அக்கினியாக இருக்க தேவனுடைய சமூகத்தில் இடைவிடாது வேத தியானிப்பிலும், ஜெபத்திலும் மூழ்கி நீச்சல் அனுபவத்திற்குள்ளாக கடந்து செல்லுங்கள். உங்கள் மேல் இருக்கும் அக்கினி பற்றியெரியும்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org