ஏசா 4:3. அப்பொழுது ஆண்டவர், சீயோன் குமாரத்திகளின் அழுக்கைக் கழுவி, நியாயத்தின் ஆவியினாலும், சுட்டெரிப்பின் ஆவியினாலும், எருசலேமின் இரத்தப்பழிகளை அதின் நடுவிலிருந்து நீக்கிவிடும்போது,
நம்முடைய தேசத்தில் சில புறஜாதி ஜனங்கள் குறிப்பிட்ட நாளில் பழைய காரியங்களை சுட்டெரிப்பார்கள். வேண்டாத உடைகள், வேண்டாத பொருட்களை கொண்டு சென்று எரித்து விடுவார்கள். நம்முடைய அரசாங்கமும் பட்டணத்திலிருக்கும் எல்லா குப்பைகளையும் எடுத்து பட்டணத்திற்கு வெளியே கொண்டு சென்று அதை சுட்டெரிப்பார்கள். காரணம் அவைகள் அனைத்தும் குப்பை. அதுபோல தான் நமக்குள்ளாக இருக்கும் மாம்சத்தின் கிரியைகள், பாவங்களை, அழுக்கை சுட்டெரிக்க நம்மை நாமே பலிபீடத்தில் வைக்கிறவர்களாக காணப்பட வேண்டும்.
நாம் சிலுவையண்டை வரும்போது நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுகிறது. என்றாலும் பாவ சுபாவங்கள் தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கிறது. நம்மை பாவத்தில் வீழ்த்த அது தொடர்ந்து வறுகிறதாய் காணப்படுகிறது. இப்போராட்டத்திலிருந்து விடைதலையடைய ஒவ்வொருநாளும் சுட்டெரிக்கும் அக்கினியால் நிரப்ப பட வேண்டும். என்னால் இந்த பாவத்தை விடமுடியவில்லையே ? இந்த பாவத்தை விடவேண்டும் என்று எவ்வளவோ முயற்சித்தும் விட முடியவில்லையே ? என்று நினைக்கிறீர்களா. அப்படியென்றால் பரலோக அக்கினி உங்களை இடைவிடாமல் நிரப்ப இடம்கொடுங்கள். உங்களுடைய பெருமை, மூர்க்கம், இச்சைகள், கோபங்கள், வேசித்தனம், குடிவெறி போன்ற பாவங்களிலிருந்து விடப்பட ஒவ்வொருநாளும் ஆவியானவரிடம் கேளுங்கள்.
என்றைக்கோ பெற்ற அபிஷேகத்தை வைத்து நான் ஆவியானவரால் நிரப்பபட்டிருக்கிறேன் என்று இறுமாப்பு அடைந்துவிடாதிருங்கள். தேவனுடைய ஊழியக்காரனாகிய தாவீது தேவ ஆவியினால் நிரப்பப்பட்டிருந்தும், அஜாக்கிரதையாய் உப்பரிகையில் உலாவினபோது, அவன் பாவத்தில் விழுந்தான். தேவனால் தாயின் வயிற்றிலே தெரிந்துகொள்ளப்பட்ட சிம்சோன் தன்னுடைய அழைப்பின் மேன்மையை உணராமல் வேசியின் மடியில் படுத்து பின்பு கண்கள் பிடுங்கப்பட்டவனாக மாறினான். நீங்கள் இந்த உலகத்தில் வாழும்வரைக்கும் பாவ சோதனைகள் வந்துகொண்டே தான் இருக்கும். அதிலிருந்து விடுபட, அதை மேற்கொள்ள சுட்டெரிப்பின் அக்கினியால் நீங்கள் ஒவ்வொரு நாளும் நிரப்பப்பட உங்களை விட்டுக்கொடுங்கள்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org