உம்முடைய பிரமாணங்கள் என்னுடைய கீதம்.

நான் பரதேசியாய்த் தங்கும் வீட்டிலே உமது பிரமாணங்கள் எனக்குக் கீதங்களாயின (சங். 119:54).

கர்த்தருடைய வார்த்தைகள்,    சங்கீதக்காரனுடைய சங்கீதங்களின் பொருளாகக் காணப்பட்டது,    அவன் பரதேசியாய் எங்குத் தங்கினாலும் கர்த்தருடைய பிரமாணங்களே அவனுடைய பாடலாகவும் காணப்பட்டது. பாடல்கள் தேவனை ஆராதிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இயேசுவும் தன்னுடைய சீஷர்களோடு சேர்ந்து ஸ்தோத்திரப் பாட்டைப் பாடினார் (மத். 26:30). பூமியின் குடிகள் எல்லாரும்  கர்த்தருக்குப்  புதுப்பாட்டைப் பாடவேண்டும் என்றும்,    பரிசுத்தவான்களின் சபையில் அவருடைய துதி விளங்கவேண்டும் என்றும் வேதம் கூறுகிறது. நாம் ஆவியினாலே நிறைந்து,   சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும்  ஞானப்பாட்டுகளினாலும் நம் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம் பண்ணவேண்டும். பரலோகத்தில் கூட  ஜெயங்கொண்டவர்கள்  மோசேயின் பாட்டையும்,    ஆட்டுக்குட்டியானவருடைய பாடலையும் பாடினார்கள் என்று வேதம் கூறுகிறது.

பூமியில் நாம் பரதேசிகளாகக் காணப்படுகிறோம். ஒரு  பிரயாணிணைப்  போல நம்முடைய வாழ்க்கைக் காணப்படுகிறது, நம்முடைய சுயதேசம் பரலோக ராஜ்யம். அந்த பரம கானானை நோக்கி நாம் பிரயாணம் செய்யும் போது,    கர்த்தருடைய பாடல்கள்  நம்முடைய பிரயாணத்தை இலகுவாக்கும்,    பாடுகளையும் கஷ்டங்களையும் மறக்கும் படிக்குச் செய்யும்,    நம்பிக்கையை நமக்குள் உண்டாக்கும். தாவீது கூட சவுலுக்குப் பயந்து ஓடின நாட்களில்,    மலைகளையும் குகைகளையும் தன்னுடைய வீடாக்கிக் கொண்டான். அந்த வேளைகளிலும் கூட சங்கீதங்களைப் பாடி கர்த்தருக்குள் மகிழ்கிறவனாகவும்,    அதினிமித்தம் தன் உபத்திரவங்களை மறக்கிறவனாகவும் காணப்பட்டான். அப்போஸ்தலனாகிய பவுலும் சீலாவும் சிறைச்சாலையில் கட்டுகளும் உபத்திரவங்களும் அனுபவித்த போது,    கர்த்தரைப் பாடித் துதித்தார்கள்,    அது அவர்கள் பாடுகளை மறக்கும் படிக்குச் செய்தது. சங்கீத புஸ்தகத்தில் காணப்படுகிற பதினைந்து சங்கீதங்கள் ஆரோகண சங்கீதங்களாகும் (120-134). ஆரோகணம் என்பதற்கு ஏறுதல் என்று அர்த்தம். இஸ்ரவேல் ஜனங்களும்,    லேவியர்களும்  தேவனை  ஆராதிக்கும் படிக்கு மோரியா மலையில் காணப்பட்ட  எருசலேம்  தேவாலயத்திற்குப் போகும் போது,    கடினமான பாதைகளை இலகுவாக்கிக் கொள்ளும் படிக்குக் கர்த்தரைப் பாடிக்கொண்டே ஏறிச் செல்வார்கள். பாடல்களின் சுருதி ஏறிக்கொண்டே போகும் போது,    அவர்களுடைய மலையேறுதலும் எளிதாகி விடும்.  நீங்களும் பாடி கர்த்தரை மகிமைப் படுத்தும் போது உங்களுடைய கஷ்டங்களும் பாடுகளும் மாறும்,    உங்கள் நித்தைகளைக் கர்த்தர் புரட்டிப் போடுவார். நீதிமான் பாடி மகிழ்கிறான்,    அவனுடைய கூடாரமாகிய சரீரத்தில் இரட்சிப்பின் கெம்பீர சத்தம் எப்பொழும் உண்டு என்று வேதம் கூறுகிறது.

கர்த்தருடைய பாடல்கள் எல்லாம் கர்த்தருடைய வார்த்தையிலிருந்து ஏற்றப்பட்டதாக காணப்பட்டால் நலமாயிருக்கும். இந்நாட்களில் கிறிஸ்தவ பாடல்கள் பல விதங்களிலும்,    பல மெட்டுகளிலும் வெளிவருகிறது,    நலமானதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஒரு விசை நான்கு வாலிபர்கள் கர்த்தருடைய பாடலை சபையில் பாடினார்கள்,    அதில் சுருதி,    ராகம் ஒன்றும் அவ்வளவு சரியாகக் காணப்படவில்லை,    ஆகையால் மக்கள் அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. இவர்கள் சோர்ந்து போய் கடற்கரையில் அமர்ந்து கொண்டிருந்த வேளையில் கருப்பு குதிரையில் ஒருவன் வந்தான்,    அவன் அவர்களுடைய சோர்ந்து போன சூழ்நிலையைப் பயன்படுத்தி சில சுருதிகளையும் ராகங்களையும் இந்த வாலிபர்களுக்குக் கொடுத்தான். அவற்றைக் கற்ற வாலிபர்கள்,    அவைகளிலிருந்து  ராக் மீயுசிக்கை (Rock Music) இயற்றினார்கள். கறுப்புக் குதிரையில் வந்தவன் லூசிபர்,    பழைய பாம்பாகிய வலுசர்ப்பம். ராக் மீயுசிக் அனேகரைப் பாவத்திற்குள்ளாகவும்,    பிசாசின் பிடிக்குள்ளாகவும்,    பாதாளத்திற்கு நேராகவும் கொண்டு சென்றது.  இப்படிப்பட்ட கவர்ச்சிகரமான பாடல்களை இயற்றுகிறவர்களுக்கு நீங்கள் வாழ்த்துதல் சொல்லும் போதும்,    அவர்களை அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளும் போது,   அவர்களுடைய  துர்க்கிரியைகளுக்கும் நீங்களும் பங்குள்ளவர்களாகுகிறீர்கள் (2 யோவான் 1:10,   11).  அதற்குப்  பதிலாக  கர்த்தருடைய வார்த்தைகளை நீங்கள் பாடலாகப் பாடும் போது,    உங்கள் உதடுகள் மாத்திரமல்ல,    மீட்கப்பட்ட உங்கள் ஆத்துமாக்களும் கெம்பீரத்து மகிழும்.  அது உங்கள் வாழ்க்கையில் அனேக நன்மைகளையும்,    ஆசீர்வாதங்களையும்,    விடுதலையையும் கொண்டுவரும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *