ஏசா 6 :6,7. அப்பொழுது சேராபீன்களில் ஒருவன் பலிபீடத்திலிருந்து, தன் கையிலே பிடித்த குறட்டால் ஒரு நெருப்புத் தழலை எடுத்து, என்னிடத்தில் பறந்து வந்து, அதினால் என் வாயைத் தொட்டு: இதோ, இது உன் உதடுகளைத் தொட்டதினால் உன் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவிர்த்தியானது என்றான்.
ஏசாயா ஒரு ஊழியக்காரனாக இருந்தபோதும் அவனுக்குள்ளாக ஒரு அசுத்தம் காணப்பட்டது. அசுத்த உதடுகள் உள்ளவர்கள் மத்தியில் வசித்துவந்தான். அசுத்த உதடுகள் அவனுக்கு காணப்பட்டது. சேராபீன்களில் ஒருவன் நெருப்பு தழலைத் எடுத்து அவன் வாயை தொட்டபோது அவனுடைய அக்கிரமம் நீங்கியது. அவன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது. இன்றைக்கும் அநேகர் விழுவது நாவினால் வரும் பாவமாக காணப்படுகிறது. ஆகையால் தான் தாவீது சொல்லுகிறான் கர்த்தாவே, என் வாய்க்குக் காவல் வையும்; என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும் (சங் 141:3). பேதுரு எந்த நாவினால் இயேசுவை மறுதலிக்கமாட்டேன் என்று சொன்னானோ அதே நாவினால் இயேசுவை சபிக்கவும் தொடங்கினான். இப்படியாக நாவினால் பாவம் செய்கிறவர்களாக தேவ ஜனங்கள் காணப்படலாகாது. துதித்தலும் சபித்தலும் ஒரே நாவிலிருந்து வரலாகாது.
சேராபீன்களில் ஒருவன் பலிபீடத்திலிருந்து குறடை எடுத்து வந்தான். அந்த பலிபீடம் கல்வாரி சிலுவையில் இயேசு தன்னை தானே ஜீவ பலியாக ஒப்புக்கொடுத்ததற்கு அடையாளமாக காணப்படுகிறது. இன்றும் பரிசுத்தமாக வாழவேண்டும் என்று விரும்புகிறவர்கள் ஒவ்வொருவரும் முதலாவது கல்வாரி சிலுவைக்கு நேராக வரவேண்டும். இரட்சிக்கப்படுவதற்கு, பரிசுத்தமான ஜீவியம் செய்வதற்கு சிலுவையில் அறையப்பட்ட இயேசுவை தவிர வேறு வழியும் மார்க்கமும் இல்லை. அந்த தூதன் தன் கையிலிருக்கும் குறட்டால் ஒரு நெருப்பு தழலை கொண்டு வந்தான். நெருப்புத்தழல் ஆவியானவருக்கு அடையாளமாக காணப்படுகிறது. அந்த நெருப்புத்தழல் ஏசாயாவின் நாவை தொட்டபோது அவன் பரிசுத்தமாக்கப்பட்டான். அதே ஆவியானவரின் நெருப்புத்தழல், ஆவியானவரின் அக்கினி ஒவ்வொருவரையும் தொட அனுமதிக்க வேண்டும்.
உடலிலிருக்கும் அழுக்குகளை நீக்க சோப்பை பயன்படுத்துகிறோம். வீட்டில் கழிவறைகளை சுத்தம் செய்ய டெட்டால் போன்றவற்றை பயன்படுத்துகிறோம். அதுபோல நம்முடைய பாவ கறைகளை நீக்க சுத்திகரிக்கும் அக்கினி ஒவ்வொருவரையும் ஆக்கிரமிக்க வேண்டும். ஆகையால் எல்லாரும் ஆண்டவரிடம் கேளுங்கள், ஆண்டவரே சுத்திகரிக்கும் அக்கினி என் மேல் வந்திறங்கட்டும் என்று. ஏசாயாவை தொட்டவர் உங்களையும் தொடுவார்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org