1 யோவா 1:1. ஆதிமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக்குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்.
ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது (யோவா 1:1). அந்த வார்த்தையாகிய தேவன் இயேசுவாக மாம்சத்தில் வெளிப்பட்டார். அவரை ஜீவவார்த்தை என்று யோவான் அழைக்கிறான். இயேசுவுக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. இயேசுவைக்குறித்து சொல்லும்போது அவர் ஆதியிலிருந்து இருக்கிறார் என்றும், அவரை கண்களால் கண்டும், கைகளினால் அவரை தொட்டும், நோக்கிப்பார்த்தும் இருக்கிறோம் என்று சொல்லுகிறான். இயேசுவின் வாயிலிருந்து புறப்பட்ட அத்தனை வார்த்தைகளும் ஜீவவார்த்தையாக இருந்ததை யோவான் கண்டான்.
உலகத்தில் பழமொழிகள் அநேகம் காணப்படுகிறது. அநேக கவிதைகளை அநேகர் எழுதியிருக்கிறார்கள். உலகத்தில் இலட்சக்கணக்கான, கோடிக்கணக்கான புத்தகங்கள் காணப்படுகிறது. ஒரு அரசியல்வாதி சொன்னார் நான் இரண்டாயிரத்திற்கும் அதிகமான புத்தகங்களை படித்திருக்கிறேன் என்று. சிலர் கட்டு கதைகளை படிக்க ஆர்வம் கொள்ளுவார்கள். சிலர் வரலாறு போன்ற புத்தகங்களை வாசிக்க விருப்பப்படுவார்கள். ஆனால் வேதாகமத்திலிருக்கும் வார்த்தைகள் மாத்திரம் தான் மனிதனுடைய வாழ்வில் ஜீவனை கொடுக்கும். உலகத்திலிருக்கும் வேறெந்த புத்தகமும் ஜீவனை கொடுக்காது. சமயத்துக்கேற்ற வார்த்தைகள் வேதாகமத்திலுள்ளது. அந்த வார்த்தை சோர்வுற்றோர்களை உயிர்ப்பிக்கும், பெலவீனமுள்ளவர்களை பெலனடைய செய்யும். அற்புதத்திற்காக காத்திருந்தவர்களுக்கு அற்புதம் செய்யும். வியாதியஸ்தர்களுக்கு சுகத்தை கொடுக்கும். பாவத்திலிருப்பவர்களுக்கு இரட்சிப்பை கொடுக்கும்.
இயேசு சொன்னார் மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார் (மத் 4:4). இயேசு ஒரு வார்த்தை சொன்னபோது நூற்றுக்கதிபதியின் வேலைக்காரன் சொஸ்தமடைந்தான். அசுத்த ஆவிகளைத் தமது வார்த்தையினாலே துரத்தி, பிணியாளிகளெல்லாரையும் சொஸ்தமாக்கினார். ஆகையால் தான் யோவான் இயேசுவை ஜீவவார்த்தை என்று அழைக்கிறான். குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன் என்று வசனம் சொல்லுகிறது. இந்த ஜீவவார்த்தையாகிய இயேசுவை ஒவ்வொருநாளும் அறிந்துகொள்ள, அவரோடுகூட நடக்க வேதாகமம் வாசிப்பதில் அதிக நேரத்தை செலவிடுங்கள்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org