1 யோவா 1:5. தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு, உங்களுக்கு அறிவிக்கிற விசேஷமாயிருக்கிறது.
1 யோவா 4:8. அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார்.
யோவான் இந்த நிருபங்களை அவன் மரிக்கிறதற்கு சில வருடங்களுக்கு முன்பாக எழுதினான் என்றும் அவன் சுமார் 95 வயது இருக்கும்போது எழுதினான் என்றும் வேத வல்லுநர்கள் சொல்லுகிறார்கள். சுமார் 65 வருடங்களுக்கு முன்பாக பெந்தேகோஸ்தே நாளின் போது பரிசுத்த ஆவியினால் நிரப்பட்டான் என்று சொல்லுகிறார்கள். அவனுடைய 65 வருட ஊழியப்பாதையில் சபை தோற்றுவிக்கப்பட்டதையும், சபை கடந்து சென்ற எல்லா கடினமான பாதைகளையும் நன்றாய் பார்த்து அறிந்தவன். 65 வருடங்கள் இயேசுவோடு நடந்த ஒரு முதிர்ச்சியடைந்த தேவ மனிதன். ஒரு சிறு குழந்தை செய்கிற காரியம் குழந்தை தனமாக இருக்கும். இளைஞன் செய்கிற காரியம் அவசரமாக எடுக்கிற அரை குறை காரியமாக இருக்கும். ஆனால் வயது சென்றவர்கள் தங்கள் அனுபவத்தில் முதிர்ச்சியடைந்த நல்ல காரியத்தை, ஆலோசனையை சொல்லுவார்கள். அப்படியாக யோவான் தன்னுடைய மரணத்திற்கு முன்பாக சில காரியங்களை எழுதினான். அவனோடு இருந்த எல்லா சீடர்களும் இரத்த சாட்சியாக மரித்த பிறகு இவன் மட்டும் உயிரோடு இருக்கும்போது முக்கியனமான, பிரதானமான காரியங்களை வலியுறுத்த வேண்டும் என்று நினைத்து சொல்லுகிறான் தேவன் ஒளியாகவும் அன்பாகவும் இருக்கிறார் என்று. இந்த பிரதான சத்தியத்தை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்ற வாஞ்சை அவனுக்குள்ளாக இருந்தது.
தேவன் மனிதர்களுக்குள்ளே ஒளியாக வாசம் செய்ய விரும்புகிறார். இருளிலிருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தை அடைய வேண்டும் என்று விரும்புகிறார். அவரில் எவ்வளவேனும் இருள் இல்லை என்று வசனம் சொல்லுகிறது. சத்துரு இருக்கிற இடம் இருளாகவே இருக்கும். பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது என்று வசனம் சொல்லுகிறது. அப்பொழுது தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று. வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார். ஆகையால் தேவ ஜனங்கள் எப்பொழுதும் வெளிச்சத்தின் பிள்ளைகளாய் இருக்க வேண்டும் என்று கர்த்தர் விருப்பமுடையவராய் காணப்படுகிறார்.
மாத்திரமல்ல, தேவன் அன்பாயிருக்கிறார். தன்னுடைய ஒரே பேரான குமாரனை இந்த உலகத்திற்கு கொடுத்ததால் அவர் மனுக்குலத்தின் மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது. குமாரனாகிய இயேசுவை கொடுத்து தேவன் இவ்வளவாய் அன்பு கூர்ந்தார். மாயமல்லாத கபடற்ற அன்பை அவர் வெளிப்படுத்தினார். அதுபோல நாமும் பிறர் மீது அன்பாக இருக்க வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். அன்பு சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் சகிக்கும். அன்பு தன்னலம் கருதாது. இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது (1 கொரி 13:13) என்று வசனம் சொல்லுகிறது. நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் (யோவா 13 : 35 ) என்று இயேசு சொன்னார். அதுபோல எல்லாரிலும் அன்பு கூறுங்கள்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org