நீ பயப்படுகிற மனுஷரின் கையிலே ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை:-

எரே 39 : 17. ஆனால் அந்நாளிலே உன்னைத் தப்புவிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நீ பயப்படுகிற மனுஷரின் கையிலே ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை.

ஆண்டவர், மேல் அதிகாரத்திலுள்ள யாவருக்கும் கீழ்ப்படிய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். ஆகையால் நாம் அதிகாரத்திலுள்ளவர்களுக்கு கீழ்ப்படிந்து அடங்க வேண்டும். அதேவேலையில் நாம் எந்த மனிதருக்கும் பயப்படக்கூடாது என்று கர்த்தர் சொல்லுகிறார். நம்மை சுற்றிலும் அநேக மனிதர்கள் உண்டு. அவர்களில் சிலரை சுலபமாக கையாளுவோம். சில மனிதர்கள் நம்மை பயப்படுத்துகிறவர்களாக காணப்படுவதுண்டு. அதிகாரம் படைத்தவர்கள், அரசியல் செல்வாக்குள்ளவர்கள், பண பலமுள்ளவர்கள், பதவி ஆசையுள்ளவர்கள், துன்மார்க்கமுள்ளவர்கள், மூர்க்கமுள்ளவர்கள், கோபமுள்ளவர்கள் யாராக இருந்தாலும் சரி, கர்த்தர் சொல்லுகிறார் நீ பயப்படுகிற மனுஷரின் கையிலே ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை.

யேசபேல் அதிகாரம் படைத்தவளாக இருந்தாள். அவளால் எலியாவை ஒன்றும் செய்ய முடியவில்லை. பார்வோன் தேசத்தின் அதிபதியாக இருந்தான். ஆனால் மோசேயை ஒன்றும் செய்ய முடியவில்லை. கர்த்தர் அவருடைய பிள்ளைகளை ஒருபோதும் சத்துருவின் கையில் ஒப்புக்கொடுப்பதில்லை. உங்களுக்கு எதிராக ஆயிரம் பேர் வந்தாலும், அவர்களை உங்கள் கண்களால் மாத்திரமே காண்பீர்கள். கர்த்தருடைய கட்டளையை மீறி ஒருவனும் உங்களை தொட முடியாது. காரணம் உங்களை சுற்றிலும் அக்கினி மதிலாய் கர்த்தர் இருப்பார்.

இயேசு சொன்னார் உங்களை பெயல்செபூல் என்று சொல்பவர்களுக்கு பயப்படாதிருங்கள். (மத் 10:26). கர்த்தருடைய பிள்ளைகளாகிய உங்களுக்கு விரோதமாக இப்படி அநேகர் பெயல்செபூலை சேர்ந்தவன், அல்லேலூயா கூட்டத்தை சேர்ந்தவன், இயேசு இயேசு என்று சொல்லி ஜனங்களை வஞ்சிப்பவன் என்றெல்லாம் சொல்லி உங்களுக்கு விரோதமாக எழும்பலாம். அப்படிப்பட்டவர்களுக்கு பயப்படாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள் (மத் 10:28) என்று இயேசு சொன்னார்.

ஆகையால் மனிதர்களுக்கு பயப்படாதிருங்கள். காரணம் கர்த்தர் உங்களை அவர்கள் கையில் ஒப்புக்கொடுப்பதில்லை.

கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *