அப்பொழுது இயேசு, என்னைத் தொட்டது யார் என்று கேட்டார். எங்களுக்குத் தெரியாதென்று எல்லாரும் சொன்னபோது, பேதுருவும் அவனுடனே கூட இருந்தவர்களும்: ஐயரே, திரளான ஜனங்கள் உம்மைச் சூழ்ந்து நெருக்கிக் கொண்டிருக்கிறார்களே, என்னைத் தொட்டது யார் என்று எப்படிக் கேட்கிறீர் என்றார்கள் (லூக்கா 8:45).
யவீரு என்ற ஜெப ஆலயத் தலைவனுடைய ஒரே மகள் மரண அவஸ்தையாயிருந்தபடியால் தன் வீட்டிற்கு வரும்படிக்கு இயேசுவை வருந்திக் கேட்டுக்கொண்டான். இயேசு அவன் வீட்டிற்குப் போகையில் திரள் கூட்ட ஜனங்கள் அவரை நெருக்கினார்கள். அப்பொழுது பன்னிரண்டு வருஷமாய் பெரும்பாடுள்ளவளாயிருந்த ஒரு ஸ்திரீ, தன் ஆஸ்திகளையெல்லாம் வைத்தியர்களுக்குச் செலவழித்த பின்பும் அவர்களால் ஒரு விடுதலையும் கிடைக்காததினால், இயேசுவின் பின்னாக வந்து அவரது வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள். பிரமாணங்களின் படி அவள் யாரையும் தொடலாகாது, தொட்டால் தீட்டாகிவிடும். ஆகிலும் அவளுடைய வேதனையின் நிமித்தமும், அந்த தருணம் மீண்டும் அவளுக்கு மீண்டும் கிடைக்காது என்று கருதியும், இயேசுவைத் தொட்டால் தனக்கு விடுதலைக் கிடைக்கும் என்ற விசுவாசத்தோடும் அவரைத் தொட்டாள். உடனே அவளுடைய பெரும்பாடு வியாதி நின்று போனது. கர்த்தருடைய பிள்ளைகளே, உங்கள் விசுவாசம் உங்கள் வாழ்க்கையில் அற்புதங்களைக் கொண்டு வரும், வியாதிகளிலிருந்து விடுதலையைக் கொண்டுவரும். சந்தேகப்படாத கடுகு அளவு விசுவாசம் மலைகளைப் போன்ற உங்கள் தடைகளை விலக்கிவிடும். ஆனால் விசுவாச தடுமாற்றம் இந்நாட்களில் எங்கும் காணப்படுகிறது. மனுஷகுமாரன் வரும் போது பூமியில் விசுவாசத்தைக் காண்பாரோ என்று ஆண்டவர் கேட்டார். விசுவாசம் நமக்குள்ளாக வளர, கர்த்தருடைய வார்த்தையை அதிகமாய் வாசித்துத் தியானிக்க வேண்டும். விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்(ரோமர் 10:17) என்று வேதம் கூறுகிறது. விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
இயேசு, என்னைத் தொட்டது யார் என்று கேட்டார். எங்களுக்குத் தெரியாதென்று எல்லாரும் சொன்னபோது, பேதுருவும் அவனுடனே கூட இருந்தவர்களும், ஐயரே, திரளான ஜனங்கள் உம்மைச் சூழ்ந்து நெருக்கிக் கொண்டிருக்கிறார்களே, என்னைத் தொட்டது யார் என்று எப்படிக் கேட்கிறீர் என்றார்கள். அதற்கு இயேசு, என்னிலிருந்து வல்லமை புறப்பட்டதை அறிந்திருக்கிறேன், ஆதலால் ஒருவர் என்னைத் தொட்டதுண்டு என்றார். பலர் ஆண்டவரை நெருக்கி தொட்டுக் கொண்டிருந்தாலும், விசுவாசத்தோடு தொட்டது ஒருத்தியாகக் காணப்பட்டாள். அவளுக்கு அவருடைய அற்புத வல்லமை வெளிப்பட்டதை இயேசு அறிந்தார். ஆகையால்தான் என்னைத் தொட்ட அந்த குறிப்பிட்ட நபர் யார் என்று கர்த்தர் கேட்டார். இந்நாட்களிலும் திரளான ஜனங்கள் விடுதலைக்காக ஆண்டவரண்டை வந்தாலும், விசுவாசத்தோடு ஆண்டவரைத் தேடுகிறவர்களுக்கு மட்டும் அவருடைய வல்லமை வெளிப்படும், அவர்கள் அற்புத சுகத்தைப் பெற்றுக் கொள்ளுவார்கள்.
அந்த ஸ்திரீ தான் மறைந்திருக்கவில்லையென்று கண்டு, நடுங்கிவந்து, அவர் முன்பாக விழுந்து, தான் அவரைத் தொட்ட காரணத்தையும் உடனே தான் சொஸ்தமானதையும் எல்லா ஜனங்களுக்கும் முன்பாக அவருக்கு அறிவித்தாள். என்னைத் தொட்டது யார் என்று எல்லாவற்றையும் அறிந்த ஆண்டவர் கேட்டதற்கு வேறொரு காரணமும் காணப்பட்டது, விடுதலையைப் பெற்றவள் அதை அறிக்கையிட வேண்டும் என்றும் கர்த்தர் எதிர்பார்த்தார். நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கை பண்ணப்படும்(ரோமர் 10:10) என்று வேதம் கூறுகிறது. அவள் அறிக்கையிட்ட உடன், இயேசு அவளைப் பார்த்து, மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார். இயேசு இந்த ஸ்திரீயைத் தவிர வேறு யாரையும் மகளே என்று வேதத்தில் அழைக்கவில்லை. ஆகையால் இவள் ஒரு விஷேசித்த நபராக மாறினாள். கர்த்தருடைய பிள்ளைகளே, உங்கள் விசுவாச தொடுதல், ஆண்டவருடைய மனதுருக்கத்தை உங்களுக்கு வெளிப்படுத்தும். தாயுள்ளத்தோடு உங்களை மகனே, மகளே என்று அழைத்து, ஆறுதல் படுத்தி, அவர் உங்களுக்கு அற்புதங்களைச் செய்வார். இயேசு வண்டை நம்பிக்கையோடு வந்த யாரையும் அவர் புறம்பே தள்ளினதில்லை. அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது. ஆகையால் உங்கள் கடினமான நேரங்களில் விசுவாசத்தை இழந்துபோய் விடாதிருங்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar