லூக்கா 7:47,48 ஆதலால் நான் உனக்குச் சொல்லுகிறேன்: இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது; இவள் மிகவும் அன்புகூர்ந்தாளே. எவனுக்குக் கொஞ்சம் மன்னிக்கப்படுகிறதோ, அவன் கொஞ்சமாய் அன்புகூருவான் என்று சொல்லி; நோக்கி: உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றார்.
பாவியாகிய ஸ்திரீ இயேசுவினிடத்தில் வந்து அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள். அதை பார்த்த பரிசேயன் இவள் பாவியாயிருக்கிறாளே என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான். அந்த நேரத்தில் இயேசு ஒரு உவமையை கூறினபிறகு சொன்னார் இவள் செய்த அநேக பாவங்கள் என்று சொல்ல ஆரம்பிப்பார். இயேசுவின் சமூகத்தில் வந்த ஸ்திரீ ஒரு சில பாவங்களை செய்துவிட்டு வரவில்லை. அவள் செய்த பாவம் அநேகமாயிருந்தது.
ஒரு சகோதரன் ஒருவன் தன்னுடைய கோபத்தின் மூலம் மற்றொருவனை அடித்து கொன்றுவிட்டான். பிறகு அவன் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டான். அவன் வாழ்க்கையே இருள் சூழ்ந்ததாக காணப்பட்டது. சிறைச்சாலையில் நாள் தோறும் துன்புறுத்தப்பட்டான். அவன் மனது மிகவும் பாதிப்படைந்தது. தன் குடும்பத்தை, உறவினர்களை, நண்பர்களை பார்க்க முடியவில்லை. என் வாழ்க்கையே அவ்வளவுதான் என்று அழுதுகொண்டிருந்தான். அப்பொழுது சிறைச்சாலையில் ஊழியம் செய்ய சிலர் வந்து இயேசுவை குறித்து பிரசங்கித்து கொண்டிருந்தார்கள். இயேசுவை குறித்து அறிய முன்வந்து அவரை குறித்து அநேக காரியங்களை கேட்டான். அவனுக்கு இந்த பாவியாகிய ஸ்திரீயை குறித்து பேசியபோது அவன் உள்ளத்தில் ஒரு தேறுதல் உண்டானது. உலகத்தில் என் பாவங்களை இரட்சிக்க இயேசு இருக்கிறார் என்ற நிச்சயத்தை அடைந்து பின்பாக ஒவ்வொருநாளும் ஜெபிக்க ஆரம்பித்தான். இயேசு அவன் செய்த எல்லா பாவங்களையும் சிலுவையில் சுமந்து தீர்த்தார் என்ற விசுவாசம் அவனுக்குள்ளாக வந்தது. பின்னாட்களில் அவன் விடுதலையான பிறகு இயேசுவுக்கென்று ஓடுகிற சுவிசேஷகனாக மாறிவிட்டான்.
இயேசு அந்த ஸ்திரீயை பார்த்து இவள் செய்த அநேக பாவங்கள் என்று சொல்லிவிட்டு அப்படியே போகவில்லை. இயேசு சொன்னார் உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது. அவள் செய்த அநேக பாவங்களை இயேசு ஒரே நேரத்தில், ஒரே சந்தர்ப்பத்தில், ஒரே இடத்தில் மன்னித்தார். காரணம் அவள் இயேசுவின் மீது விசுவாசத்தோடு, கண்ணீரோடு வந்து அன்பு கூர்ந்தாள். இதை வாசிக்கின்ற யாராக இருந்தாலும் நான் செய்த பாவங்கள் அநேகம், ஏராளம் என்று குற்ற மனசாட்சியோடு ஜீவித்துக்கொண்டிருக்கிறீர்களா? இயேசுவினிடம் வந்துவிடுங்கள். அவர் எல்லா பாவங்களையும், அநேக பாவங்களையும் ஒரே நேரத்தில் மன்னித்துவிடுவார். உங்கள் பாவங்கள் சிவேரென்று இருந்தாலும் அதை பஞ்சை போல வெண்மையாக்குவார். நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார் (1 யோவா 1:9).
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org