இரண்டத்தனையாக தந்தருளுகிற கர்த்தர்.

யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது,     கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார். யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப்பார்க்கிலும் இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார் (யோபு 42:10).

யோபு உத்தமனும்,     சன்மார்க்கனும்,     தேவனுக்குப் பயந்து,     பொல்லாப்பிற்கு விலகி,     நீதிக்குரிய வாழ்க்கை வாழ்ந்தவன். என் தாசனாகிய யோபு என்று கர்த்தர் அவனை அழைத்தார். அவனுடைய  சரித்திரம் அனேக பாடங்களை நமக்கு கற்றுத் தருகிறது. நாம் அறியாத மண்டலங்களில் நமக்கு விரோதமான யுத்தம் ஒன்று நடக்கிறதையும்,     கர்த்தருடைய பிள்ளைகள்மேல் குறி வைத்து,     அவர்களைக் குற்றப்படுத்துகிற பொல்லா சத்துரு ஒருவன் காணப்படுகிறான் என்றும்,      கர்த்தருடைய அனுமதி இல்லாதபடி அவருடைய பிள்ளைகளுடைய பொருளாதாரத்தையோ,     சரீரத்தையோ பிசாசு தொடமுடியாது என்பதையும் அறிந்துகொள்ளமுடிகிறது. நாம் ஏன் என்று கேட்கும் போதும்,      அவிசுவாச வாதைகளைப் பேசும் போதும், கர்த்தர் அமைதியாயிருக்கிறார்.  யோபு 3ம் அதிகாரத்திலிருந்து 37ம் அதிகாரம் வரையும் யோபுவும்  அவனுடைய நான்கு நண்பர்களும் பேசுவதைக் குறித்து எழுதப்பட்டிருக்கிறது. அவனின் மூன்று நண்பர்களும்  யோபுவின்  பாவத்தின் நிமித்தம்தான் கர்த்தர் பாடுகளையும் வேதனையையும் அனுமதித்தார் என்று குற்றம் சாட்டினார்கள். இளைஞனாகிய எலிகூ,     யோபு இன்னும் தன்னைத் தாழ்த்தவேண்டும்,     அவனுடைய மேட்டிமையின் நிமித்தம் இப்படிப்பட்ட பாடுகள் வந்தது என்றும் கூறினான். அவர்களுக்கு தன்னுடைய நீதியைக் குறித்து யோபு பதில் கொடுக்கிறவனாகக் காணப்பட்டான். இவர்க்கள் ஐந்து பேருடைய உரையாடல்கள் சுமார் 35 அதிகாரங்களில் எழுதப்பட்டிருக்கிறது. கர்த்தருடைய சந்நிதியில் தீர்மானிக்கப்பட்ட சம்பவங்கள்  யோபுவின் வாழ்க்கையில் நடந்தது,     ஆனால் மனிதர்கள் அதை அறியாதபடிக்கு அறிவீனமாக வார்த்தைகளை அலப்பின வேளையில்,     கர்த்தர் பெருங்காற்றிலிருந்து பேசி,     கேள்விகளைக் கேட்டார். அப்போது யோபு   என் கையினால் வாயைப் பொத்திக் கொள்ளுகிறேன்,     இனி நான் பேசுவதில்லை என்று கூறினான். அனேக வேளைகளில் பல காரியங்களைக் குறித்து ஊழியர்களும்,     விசுவாசிகளும்,     இந்நாட்களில் குறிப்பாக ஊடகங்களில் அதிகமாகப் பேசி,     ஒருவருக்கொருவர் குற்றம்சாட்டுகிறார்கள். பெருங்காற்றிலிருந்தும் இடிமுழக்கத்திலிருந்தும் கர்த்தர் பேசுகிற சத்தத்தைக் கேட்டால் இவர்கள் எல்லோரும் வாயைப் பொத்திக் கொண்டு காணப்படுவார்கள், கர்த்தருடைய சத்தம் வல்லமையுள்ளது.

கர்த்தர் யோவுவின் நண்பர்களைப் பார்த்து உங்கள் மேல் எனக்குக் கோபம் மூளுகிறது.  ஆதலால் நீங்கள் ஏழு காளைகளையும்,     ஏழு ஆட்டுக்கடாக்களையும் தெரிந்துகொண்டு,     என் தாசனாகிய யோபினிடத்தில் போய்,     உங்களுக்காகச்  சர்வாங்கதகனபலிகளை  இடுங்கள்,     என் தாசனாகிய  யோபும்  உங்களுக்காக வேண்டுதல் செய்வான்,     நான் அவன் முகத்தைப் பார்த்து,     உங்களை உங்கள் புத்தியீனத்துக்குத்  தக்கதாக  நடத்தாதிருப்பேன் என்றார். கர்த்தர் சொன்னபடி யோவுவின் நண்பர்கள் செய்தார்கள்,     அப்போது யோபு அவர்களுக்காக ஜெபித்தான். அந்த வேளையில் இரண்டு காரியங்கள் யோபுவின் வாழ்க்கையில் நடந்தது. அவனுடைய வியாதி என்ற சிறையிருப்பைக் கர்த்தர் மாற்றினார்,     அதுபோல அவனுக்கு முன்னிருந்த எல்லாவற்றைப்  பார்க்கிலும்  இரண்டத்தனையான ஆசீர்வாதங்களைக் கர்த்தர் அவனுக்கு  தந்தருளினார்.  அதனிமித்தம்  அவன்  முன்னிலைமையைப்  பார்க்கிலும் பின்னிலைமை அதிக ஆசீர்வாதமாயிருந்தது. 

கர்த்தருடைய பிள்ளைகள்,     மற்றவர்களுக்காகவும்,     தேசங்களுக்காகவும் அதிகமாய் ஜெபிக்க வேண்டிய நாட்களாய் இந்நாட்கள் காணப்படுகிறது. அப்போஸ்தலனாகிய பவுல்  பிரதானமாய்ச் சொன்ன புத்தியென்னவெனில்,     நாம் எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்,      எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு,     ராஜாக்களுக்காகவும்,     அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும்,     நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது (1 தீமத். 2:1-3) என்று. நாம் மற்றவர்களுக்காக ஜெபிக்கும் போது,     கர்த்தர் உங்கள் சிறையிருப்பை மாற்றுவார். வியாதி,     தரித்திரம்,     சமாதானக்கேடு,     என்று சத்துரு கொண்டுவருகிற எல்லா சிறையிருப்புகளையும் கர்த்தர் மாற்றுவார். அத்துடன் உங்களை இரண்டத்தனையாய் ஆசீர்வதித்து உயர்த்துவார். ஆனால் இந்நாட்களில் மற்றவர்களுக்காக ஜெபிக்கிற நேரங்கள் குறைந்து போனது. சபைகளில் ஜெப நேரங்கள் குறைந்து போனது,     ஆராதனைகளுக்கு வருகிற விசுவாசிகள் ஜெபங்களுக்கு வருவதும் இல்லை. கர்த்தருடைய பிள்ளைகள் மற்றவர்களுக்காகவும்,     தேசங்களுக்காகவும் திறப்பிலே நிற்க நம்மை அர்ப்பணிப்போம். அப்போது கர்த்தர் உங்களுக்கு இரண்டத்தனையான பலன்களைத் தந்து, வாழ்ந்து செழித்திருக்கும் படிக்குச் செய்வார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *