கொலோசெயர் 1:18 அவரே சபையாகிய சரீரத்துக்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர்.
ஆபிரகாம் விசுவாசத்தோடு ஒரு காரியத்தை செய்தான். மரித்தோரிலிருந்து எழுப்ப தேவன் வல்லவராயிருக்கிறாரென்றெண்ணி, தனக்கு ஒரேபேறானவனையே பலியாக ஒப்புக்கொடுத்தான். அதுபோல தேவனோ இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினார் (அப் 13:30). இயேசு மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர் என்று வசனம் சொல்லுகிறது. இயேசு இருந்த காலத்தில் லாசரு என்பவன் மரித்தான், பின்பு, இயேசுவே அவனை உயிரோடு எழுப்பினார். யவீருவின் மகள் மரித்துப்போனால், பின்பு, இயேசு அவளையும் உயிரோடே கூட எழுப்பினார். நாயீன் ஊரிலிருந்த விதவையின் மகன் மரித்தபோது, இயேசு மனதுருகி அந்த பாடையை தொட்டு அவனை உயிரோடு எழுப்பினார். பழைய ஏற்பாட்டில் பார்க்கும்போது சாறிபாத் ஊரை சேர்ந்த விதவையின் மகனை எலியா உயிரோடு எழுப்பினான். சூனேமியாலின் மகன் மரித்த போது எலிசா அவனை மேற்வீட்டில் அழைத்து உயிரோடு எழுப்பினான்.
இப்படி அநேகர் இயேசுவுக்கு முன்பு மரித்து உயிரோடு எழுந்திருக்கும்போது, எப்படி இயேசு மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர் என்ற அழைக்கமுடியும்? யோவான் வெளிப்படுத்தின விசேஷத்தில் சொல்லும்போதும் கூட இயேசு மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவரும் (வெளி 1:5) என்று சொல்லுவதை பார்க்கலாம். காரணம் என்னவென்றால், இயேசுவுக்கு முன்பாக மரித்து உயிரோடு எழுந்தவர்கள் எல்லாரும் மீண்டும் தங்களுடைய மரணத்தை சந்தித்தார்கள். ஆனால் இயேசு ஒருவர் மாத்திரமே அவர் மரித்து, மூன்றாம் நாள் உயிரோடு எழுந்த பிறகு, அவர் மீண்டும் மரணத்தை சந்திக்கவில்லை. மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து இனி மரிப்பதில்லையென்று அறிந்திருக்கிறோம்; மரணம் இனி அவரை ஆண்டுகொள்வதில்லை (ரோம 6:9) என்று வசனம் சொல்லுகிறது. ஆகையால் தான் இயேசு மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர் என்று அழைக்கப்படுகிறார். மரித்தேன், ஆனாலும் இதோ சதாகாலமும் உயிரோடு இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
நீங்கள் ஆராதிக்கிற இயேசு உயிரோடு இருக்கிறவர். ஒரு நாள் வரும் அப்பொழுது நாம் ஒவ்வொருவரும் நாம் இருக்கிறவண்ணமாக உயிரோடு எழுந்தவரை தரிசிப்போம். அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார் (ரோம 8:11).
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org