வெளி 2:26. ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு, நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/4X-FFAEml5E
தியத்தீரா சபைக்கு ஆவியானவர் கொடுக்கிற வாக்குத்தத்தம் ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன் என்று சொல்லுகிறார். இந்த சபை மக்கள் தாங்கள் முன்பு செய்த கிரியைக்காட்டிலும் பின்பு அதிகமான கிரியை செய்தார்கள். ஆனால் அவர்களிடம் ஒரு குறையை சுட்டிக்காட்டினார். அவர்கள் யேசபேல் என்னும் வேசிக்கு இடம்கொடுத்தார்கள். சபையில் பெண் அதிகாரம் செலுத்துவதற்கு கர்த்தர் இடம் கொடுக்கவில்லை. புருஷனே ஸ்திரீக்கு தலையானவன் என்றும் ஆண்களை கர்த்தர் “புருஷராயிருங்கள்” (1 கொரி 16:13) என்றும் சொல்லுகிறார். எலியாவின் நாட்களில் ஆசாப் பெயரளவில் தான் இராஜாவாக இருந்தான். முழு அதிகாரத்தையும் யேசபேல் என்னும் ஸ்திரீக்கு அவன் கொடுத்துவிட்டான். ஆனால் எலியா சிறிதளவும் அவளுக்கு பயப்படாமல் அவளுடைய கள்ள தீர்க்கதரிசிகளை கொன்றுபோட்டான். பாகாலுக்கு முழங்கால் படியிடாத 7000 பேர் இருந்தாலும், யேசபேல் எலியா என்னும் ஒருவனுக்கு மாத்திரம் பயப்பட்டாள். காரணம் அந்த ஏழாயிரம் பேரும் ஒழிந்து தான் இருந்தார்கள். இன்று சபையில் எலியாவை போல யேசபேலுக்கு இடம்கொடுக்காத ஜனங்களாய் நாம் ஒவ்வொருவரும் காணப்பட வேண்டும். இருந்தாலும் கர்த்தர் அவருடைய அலாதி அன்பினிமித்தம் யேசபேல் போன்றோர்கள் கூட மனம் திரும்ப தவணை கொடுக்கிறார். எப்படி கடன் கொடுத்தவன் கடன் பெற்றவனுக்கு, அவனுடைய கடனை செலுத்த தவணை கொடுக்கிறானோ அதுபோல கர்த்தர் நமக்கும் மனம் திரும்ப தவணை கொடுக்கிறார்.
எந்த ஒரு உபதேசம் பாவம் செய்வதற்குரிய பயத்தை நம் நெஞ்சில் இருந்து நீக்குகிறதோ, அந்த உபதேசம் கள்ள உபதேசம் என்றும் அது சாத்தானின் ஆழங்கள் என்றும் கர்த்தருடைய ஜனங்கள் கண்டுகொள்ள வேண்டும். இப்படிப்பட்ட சாத்தானின் ஆழங்கள் என்று சொல்லக்கூடிய கள்ள உபதேசத்தை நிராகரிக்கிறவர்களுக்கு கர்த்தர் கொடுக்கும் வாக்குத்தத்தம் என்னவென்றால் உங்கள் மேல் நான் வேறொரு பாரத்தையும் சுமத்தமாட்டேன் என்று சொல்லுகிறார்.
இப்படி சாத்தானின் ஆழங்களை கைக்கொள்ளாமல், யேசபேலுக்கு எதிர்த்துநின்று ஜெயங்கொள்ளுகிறவர்களுக்கு, ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பார். ஜாதிகள் மேல் அதிகாரம் என்றால் உலகத்தில் மற்றவர்கள் மீது ஜனங்கள் ஆதிக்கம் செலுத்துவதல்ல. வசனம் சொல்லுகிறது நீர் உம்முடைய குமாரனுக்குத் தந்தருளின யாவருக்கும் அவர் நித்தியஜீவனைக் கொடுக்கும்பொருட்டு மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரம் கொடுத்தீர் (யோவா 17:2) என்பதாக. அதுபோல ஆண்டவர் நமக்கு எதற்காக அதிகாரம் கொடுக்கிறார் என்றால் ஜனங்கள் யாவரும் நித்திய ஜீவனை கண்டடையும் படிக்கு மாத்திரமே என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும். ஆம் நீங்கள் ஒவ்வொருவரும் ஜாதிகள் மேல் அதிகாரம் பெற்றவர்கள்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org