அவர்கள் தேசத்திலே நாட்டுவேன்:-

ஆமோஸ் 9:15. அவர்களை அவர்கள் தேசத்திலே நாட்டுவேன்; நான் அவர்களுக்குக் கொடுத்த தேசத்திலிருந்து அவர்கள் இனிப் பிடுங்கப்படுவதில்லையென்று உன் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/CvkGEjqgXjk

பல ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு சிறுவன் தன்னுடைய கிராமத்து ஜனங்கள் எவ்வளவாய் கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள் என்பதை கவனித்து பார்த்தான். விவசாயம் செய்கிற ஆண்கள் கடினமான வெயிலின் மத்தியில் வேலை செய்து மிகவும் களைப்படைந்து வீட்டிற்கு திரும்புவதை பார்த்தான். அவர்கள் வேலை செய்யும்போது உணவு நேரத்தில் நிம்மதியாக ஓய்வு எடுப்பதற்கு கூட நல்ல இடம் இல்லாததை பார்த்தான். ஆகையால் அந்த இடத்தில எல்லாருக்கும் பயனளிக்கும்வண்ணம் ஒரு ஆலமரத்தை நட வேண்டும் என்று பிரயாசப்பட்டு, சிறு விதையை விதைத்தான். பொதுவாக ஆலமரத்தின் வேர் மிகவும் வலிமையுள்ளதாகவும், மிகவும் ஆழமாகவும் இருக்கும். அதை சுலபமாக யாராலும் பிடுங்க முடியாது. மிகவும் தடிமனாகவும், அடர்த்தியாகவும் ஆலமரமானது வளரும். அவன் நாட்டின அந்த ஆலமரம், இன்றும் நூற்றாண்டுகளாகியும் பல்வேறு மனிதர்களுக்கு பலனளிக்கிறது. அந்த ஆலமரம் பலவருடமாகியும் கீழே விழவில்லை. பலவருடமாகியும் இன்னும் அநேகருக்கு நிழலை கொடுத்துக்கொண்டிருக்கிறது.

அதுபோல தான் கர்த்தர் சொல்லுகிறார் நான் உங்களை உங்கள் தேசத்தில் நாட்டுவேன். கர்த்தர் யாரையெல்லாம் நாட்டுகிறாரோ அவர்கள் அனைவரும் நிச்சயம் கனிகொடுக்கிற பாத்திரமாக இருப்பார்கள். யோசேப்பு கனிதரும் செடி; அவன் நீர் ஊற்றண்டையிலுள்ள கனிதரும் செடி; அதின் கொடிகள் சுவரின்மேல் படரும் (ஆதி 49:12) என்ற வசனைத்தை போல கர்த்தரால் நாட்டப்படுபவர்கள் கனிதரும் செடியாய் இருப்பார்கள்.

மாத்திரமல்ல, ஆண்டவர் சொல்லுகிறார் நான் அவர்களுக்குக் கொடுத்த தேசத்திலிருந்து அவர்கள் இனிப் பிடுங்கப்படுவதில்லையென்று. எப்படி ஆலமரத்தை பிடுங்கமுடியாதோ, அதுபோல கர்த்தரால் நாட்டப்பட்டவர்கள் கர்த்தர் அவர்களுக்கு கொடுத்த தேசத்தில் பிடுங்கப்படுவதில்லை. சத்துரு பலவகையில் உங்களை பிடுங்கிப்போட வேண்டும் என்று எத்தனித்தாலும், கர்த்தருடைய வார்த்தை சொல்லுகிறது நீங்கள் பிடுங்கப்படுவதில்லை. தேவரீர் உம்முடைய கையினாலே ஜாதிகளைத் துரத்தி, இவர்களை நாட்டி; ஜனங்களைத் துன்பப்படுத்தி, இவர்களைப் பரவப்பண்ணினீர் (சங் 44:2) என்று வசனம் சொல்லுகிறது. ஆலமரம் எப்படி பெரியதாக பரவுமோ, அதுபோல நீங்கள் கர்த்தர் உங்களுக்கு கொடுத்த தேசத்தில் பரவுவீர்கள். சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான் என்பது கர்த்தருடைய வாக்கு. ஆகையால் கர்த்தர் உங்களை தேசத்தில் நாட்டுவார். நீங்கள் கனிதரும் செடியாய் இருப்பீர்கள்.

கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *