நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும் படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார், அவருடைய தழும்புகளால் குணமானீர்கள் (1 பேதுரு 2:24).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/XQyVr-uywqY
இயேசுவின் சிலுவை மரணம் நம்முடைய பாவங்களிலிருந்து நமக்கு விடுதலையைத் தந்தது. அவர் சிலுவை மரத்தில் நமக்காக ஜீவனைக் கொடுக்கவில்லையென்றால், இன்றும் பாவத்தின் சுமையை நாம் சுமக்கிறவர்களாகக் காணப்பட்டிருப்போம். பழைய ஏற்பாட்டின் நாட்களில் போக்காடு ஒன்று இஸ்ரவேல் ஜனங்களுடைய பாவத்தைச் சுமந்து கொண்டு வனாந்தரத்தில் செல்லும், அதுபோல இயேசு சர்வ லோகத்தின் பாவத்தைச் சுமந்துகொண்டு கொல்கொதா என்னும் மலைக்குச் சென்றார். முதன்முதலாக லூசிபர் தேவனுக்கு மேலாகத் தன்னை உயர்த்தியதால் பாவம் செய்தான். பின்பு அவன் ஆதாம் ஏவாளை வஞ்சித்து அவர்களைத் தேவர்களைப் போல ஆகலாம் என்று ஆசைகாட்டி பாவம் செய்யும் படிக்குத் தூண்டினான். பின்பு ஆதாமுக்குள் பிறக்கிற அத்தனை பேரும் பாவத்தில் பிறக்கும் படிக்குச் செய்தான். இன்று பிறக்கிற குழந்தை கூட ஆதாமின் மீறுதலின் பாவத்தைச் சுமக்கிறது. ஆகையால் தான் எல்லாருக்கும் பாவத்திலிருந்து விடுதலை அவசியமாகும். பாவத்தோடு நாம் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது. பாவத்தின் சம்பளம் மரணம் என்றும் பாவம் செய்கிற ஆத்துமா சாகும் என்றும் வேதம் எச்சரிக்கிறது. ஆகையால் நம்மைப் பாவங்களிலிருந்து விடுவிப்பதற்காக இயேசு நமக்காகக் கல்வாரி சிலுவையில் நம்முடைய பாவங்களைச் சுமந்தார். பாவ மன்னிப்பின் நிச்சயத்தைப் பெறாத அத்தனை பேரும் சிலுவையண்டை இன்றே வந்து விடுகள். அவருடைய தழும்புகளிலிருந்து பாய்ந்து வருகிற ரத்தம் உங்களை பாவங்களற கழுவி சுத்திகரிக்க வல்லமையுள்ளது.
இயேசு சிலுவையில் நம்பாவங்களை சுமந்து தீர்த்ததின் காரணம், கர்த்தருடைய ஜனம் பாவங்களுக்குச் செத்த ஒரு ஜீவியம் செய்ய வேண்டும் என்பதற்காக. அப்போஸ்தலனாகிய பவுல் கூறினார், நான் இயேசுவோடு கூட சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன், இனி ஜீவிப்பது நானல்ல, கிறிஸ்து என்னில் ஜீவிக்கிறார் என்று. பாவங்கள் எப்போதும் கவர்ச்சிக்கும், ஆனால் நீங்கள் யோசேப்பை போல் பாவங்களுக்கு விலகி ஓடவேண்டும், பாவஞ் செய்கிற சூழ்நிலைகளைத் தவிர்க்கவேண்டும். யோபு தன் கண்களோடு உடன்படிக்கைச் செய்ததினால் எந்த கன்னிகைகள் மேலும் அவன் நினைவாயிருக்கவில்லை. கபடமற்ற உத்தம இஸ்ரவேலனாக நாத்தான்வேல் காணப்பட்டான். பாவமன்னிப்பின் நிச்சயத்தைப் பெற்ற நாம் பாவங்களுக்குச் செத்த ஒரு ஜீவியம் செய்வதற்குப் பதிலாக, மீண்டும் மீண்டும் பாவம் செய்து நம்மைப் பரிசுத்தம் செய்த இயேசுவின் ரத்தத்தை அசுத்தம் என்று கருதக் கூடாது, இயேசுவைக் காலின் கீழ் போட்டு மிதிக்கிற பாத்திரங்களாகக் காணப்படாதிருங்கள். ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம ஈவை ருசி பார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசி பார்த்தும், மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம் என்று வேதம் எச்சரிக்கிறது.
நாம் நீதிக்குரிய ஜீவியம் செய்வதற்காகவும் இயேசு சிலுவையில் நம்முடைய பாவங்களைச் சுமந்தார். ஆகையால் நீதிக்குரிய ஜீவியம் செய்ய உங்களை அர்ப்பணியுங்கள். யாருக்கும் எப்போதும் இடறலாகக் காணப்படாதிருங்கள். மற்றவர்கள் பாவம் செய்வதற்குக் கர்த்தருடைய ஜனங்கள் காரணமாகிவிடக் கூடாது. அநீதி எல்லாம் பாவம் என்று வேதம் கூறுகிறது. இயேசுவின் ரத்தம் நம்மை நீதிமான்களாக்குகிறது. ஒவ்வொரு நாளும் அதில் ஸ்நானம் செய்யுங்கள். அவருடைய தழும்புகளிலிருந்து பாயும் ரத்தம் உங்களைக் கழுவி, உங்கள் ஆவிக்குரிய ஜீவியத்தைக் குணப்படுத்தி, பாவங்களுக்கு மரித்து, நீதியின் ஜீவியம் செய்யும்படிக்குச் செய்யும்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar