சக 11:12. உங்கள் பார்வைக்கு நன்றாய்க் கண்டால், என் கூலியைத் தாருங்கள்; இல்லாவிட்டால் இருக்கட்டும் என்று அவர்களோடே சொன்னேன்; அப்பொழுது எனக்குக் கூலியாக முப்பது வெள்ளிக்காசை நிறுத்தார்கள்.
For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/Dnudpn3C0Mg
யூதாஸ்காரியோத்தை குறித்து சகரியா தீர்க்கதரிசி சுமார் கிறிஸ்துவுக்கு 500 வருடங்களுக்கு முன்பாக சொல்லுகிற வார்த்தையாய் இந்த வசனம் காணப்படுகிறது. வெறும் முப்பது வெள்ளிக்காசுக்கு ஆசைப்பட்டு யூதாஸ் இயேசுவை காட்டிக்கொடுக்க உடன்பட்டான். பஸ்கா நாளின்போது இயேசு தன்னுடைய சீஷர்களுடன் சொன்னார், உங்களிலொருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று. அங்கே இருந்த பன்னிரண்டு சீஷர்களும் நானோ நானோ என்று ஒவ்வொருவராய் கேட்டார்கள். அப்பொழுது அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவரை நோக்கி: ரபீ, நானோ? என்றான்; அதற்கு அவர்: நீ சொன்னபடிதான் என்றார்.
முப்பது வெள்ளிக்காசு என்பது அடிமைக்கு கொடுக்கக்கூடிய பணமாய் காணப்படுகிறது (யாத் 21:32). சாதாரண அந்த முப்பது வெள்ளிகாசிற்கு தன்னுடைய எஜமானனை காட்டிக்கொடுக்க யூதாஸ் முன்வந்தான். பணத்திற்கு ஆசைப்பட்டு இயேசுவை காட்டிக்கொடுத்தான். இன்றும் பணத்திற்கு ஆசைப்பட்டு இயேசுவை காட்டிக்கொடுக்கிற பொல்லாத ஊழியக்காரர்கள், விசுவாசிகள் இந்நாட்களில் காணப்படுகிறார்கள். கள்ள தீர்க்கதரிசனம், பொய் உபதேசம், இயேசு சொல்லாததை இயேசு சொன்னார் என்று சொல்லி ஜனங்களை வஞ்சித்து பணம் சம்பாதிக்கும் ஊழியக்காரர்கள், இன்றும் யூதாசை போல இயேசுவை காட்டிக்கொடுப்பதற்கு ஒப்பாக காணப்படுகிறார்கள். எங்கே பணம் வருகிறதோ அங்கே ஓடி சென்று கைககளை தூக்கு, சத்தமிடு என்று சொல்லி வீண் வார்த்தைகளால் நிரப்பி இயேசுவை காட்டிக்கொடுக்கிற ஊழியக்கார்கள் பெருகி இருக்கிறார்கள். பண ஆசையினிமித்தம் இயேசு போக சொல்லாத இடத்திற்கு கடந்து சென்று இயேசு இந்த நாட்டிற்கு வரச்சொன்னார் என்று பொய்ச்சொல்லுகிற திரளான ஊழியக்காரர்கள் பெருகியிருக்கிறார்கள். அதற்கு உடந்தையாக விசுவாசிகளும் பக்கபலமாக நிற்பதை நாம் இந்நாட்களில் பார்க்கிறோம். இயேசுவின் உள்ளம் இன்றும் காயப்பட்டுக்கொண்டு தான் காணப்படுகிறது. மீண்டும் மீண்டும் இயேசுவை நாம் காசுக்காக காட்டிக்கொடுத்துக்கொண்டே காணப்படுகிறோம். இயேசுவை காட்டிலும் பணத்தை நேசிக்கிற அநேகர் அவர்களுக்கு தெரியாமலே இயேசுவை முத்தத்தினால் காட்டிக்கொடுக்கிறார்கள். பணம் எல்லா தீமைக்கும் வேர். அநியாய சம்பாத்தியம் வேண்டாம் என்று வேதம் கூறுகிறது. நமக்கு இன்னது தேவை என்பதை பிதா அறிந்திருக்கிறார். பணத்திற்கு பின்பாக அலைந்து இயேசுவை விட்டுவிடாதிருங்கள். பணம் சம்பாதிக்க வேண்டும் என்று சபைக்கு கடந்து செல்லுவதை நிராகரித்துவிடாதிருங்கள். அது இயேசுவை காட்டிக்கொடுப்பதற்கு சமமாக காணப்படுகிறது.
சாதாரண வேலைஸ்தலங்களில், வேலைக்கு எடுத்த தன் எஜமானனுக்கு உண்மாயாய் வேலை செய்யவேண்டும் என்று சொல்லக்கூடிய நபர்கள் உண்டு. ஆனால் யூதாஸ் விசுவாச துரோகம் செய்தான். பண ஆசையினிமித்தம், பன்னிரண்டு சீஷர்களில் யூதாஸ் ஒருவன் மாத்திரம் பரலோகத்தை இழந்தான். அப்படிப்பட்ட சூழ்நிலையில் கர்த்தருடைய பிள்ளைகள் ஒருநாளும் இருக்கலாகாது.
யூதாஸ் இயேசுவை பணத்திற்கு ஆசைப்பட்டு, முத்தத்தினால் காட்டிக்கொடுத்தும், இயேசு அவனை பார்த்து, சிநேகிதனே, என்று சொல்லி அழைத்தார். யூதாஸ் மனம் திரும்பி இயேசுவிடம் சென்றிருந்தால் அவன் பாவமன்னிப்பை பெற்றிருப்பான். மாறாக, அவன் மனிதர்களை நோக்கி நான் பாவம் செய்தேன் என்று சொன்னான். ஒருவேளை இதுவரைக்கும் இயேசுவுக்கு மேலாக பணத்தை சிநேகிதிருந்தால், இயேசு நம்மையும் பார்த்து சிநேகிதனே என்று அழைக்கிறார். அவருடைய சத்தத்தை கேட்டு மனம் திரும்பி மனிதர்களிடம் செல்லாமல், இயேசுவிடம் செல்வோமென்றால், நம்மை மீண்டும் புதுப்பித்து, புது சிருஷ்டியாக மாற்றி, அவருக்கு உகந்த பாத்திரமாய் நம்மை வனைவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org