பாடுபட்டு மாதிரியை பின்வைத்துபோனார்.

இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள், ஏனெனில்,    கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு,    நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார் (1 பேதுரு 2:21). 

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/t3GpvrRsevA

இயேசுவின் வாழ்க்கையும்,    ஊழியமும் மாத்திரமல்ல,    அவருடைய பாடுகளும் மரணமும் கூட நமக்கு மாதிரியாகக் காணப்படுகிறது. ஒரு மனிதனுடைய உண்மையான சுபாவம் அவனுடைய பாடுகளின் மத்தியில் தான் வெளிப்படும்.  கெத்சமனே  துவங்கி  கொல்கொதா வரைக்கும் இயேசு கடந்து சென்ற பாடுகளின் பாதையை பேதுரு நன்கு அறிந்திருந்தான்.  கெத்சமனேயில் ஆண்டவர் இரத்தமும் வேர்வையும் சிந்தி ஜெபித்த வேளையிலிருந்து,    அவர் அநியாயமாய் சிலுவை மரணத்திற்கு ஒப்புக் கொடுத்த காரியங்களையும்,    அவர் தன்னுடைய சிலுவையைச் சுமந்து கொண்டு கடந்து சென்ற காட்சிகள் எல்லாவற்றையும் பேதுரு கண்கூடாகக் கண்டவன்.  அவரடைந்த  பரிகாசங்கள்,    அவமானங்கள் எல்லாவற்றையும் தெளிவாக அறிந்திருந்தான். அந்தப் பாடுகளின்  சூழ்நிலையிலும்  இயேசு  பாவஞ்செய்யவில்லை,    அவருடைய வாயில் வஞ்சனை காணப்படவில்லை,    அவர் வையப்படும் போது பதில் வையவில்லை,    அவரைப் பாடுபடுத்தியவர்களைப் பயமுறுத்தவில்லை. ஆகையால் தான் அவருடைய பாடுகளின் பாதையும் நமக்கு மாதிரியாகக் காணப்படுகிறது.

இயேசு,    கடைசி ஜெபத்தை  சீஷர்களுக்காக  ஏற்றெடுப்பதற்கு  முன்பு அவர்களுக்குக் கடைசியாகக் கொடுத்த போதனை என்னவென்றால் உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு,    ஆனாலும் திடன்கொள்ளுங்கள்,    நான் உலகத்தை ஜெயித்தேன் என்று. நமக்கு ஏன் உபத்திரவங்கள் என்றால்,    நம்முடைய எஜமான் கடந்து சென்ற பாதை அதுவாய் காணப்படுகிறது. பிசாசு கடைசியாய் அக்கினி கடலில் தள்ளப்படும் மட்டும் மனுகுலத்திற்கு உபத்திரவத்தைக் கொடுக்கிறவனாகக் காணப்படுவான். வறுமையினாலும்,    வியாதிகளினாலும்,    நெருக்கங்களினாலும்,    கண்ணீரினாலும்,    வேதனையினாலும் உபத்திரவங்களைக் கொடுப்பான். அவனால் ஏவப்பட்ட ஜனங்கள் நம்முடைய தலையின்மேல் நடப்பதைப் போன்ற சூழ்நிலைகள் காணப்படும். ஆனாலும் நீங்கள் திடன்கொள்ளுங்கள்,    சந்தோஷமாயிருங்கள் என்று இயேசு சொல்லுகிறார்,    காரணம் அவர் உலகத்தை ஜெயித்தார். தன்னுடைய வாழ்க்கையிலும் மரணத்திலும் முழுவதுமாக ஜெயம் கொள்ளுகிறவராகக் காணப்பட்டார். மோசே வளர்ந்து  பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்து,     அநித்தியமான  பாவசந்தோஷங்களை  அநுபவிப்பதைப்பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அனுபவிப்பதையே தெரிந்துகொண்டு,     இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து,    எகிப்திலுள்ள  பொக்கிஷங்களிலும்  கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான். ஆகையால் தான் இயேசுவோடு மறுரூப மலையில் காணப்படுகிற பாக்கியம் கிடைத்தது,    வெளிப்படுத்தலில் வெளிப்படப் போகிற இரண்டு சாட்சிகளில் ஒருவனாகக் காணப்படுகிற கிருபைக் கிடைத்தது. 

கர்த்தருடைய பிள்ளைகளே,    இக்காலத்துப் பாடுகள் இனி வருகிற மகிமைக்கு ஒப்பானது அல்ல. ஆகையால் பாடுகளின் பாதையில் சோர்ந்து போய்விடாதிருங்கள். அவைகள் மத்தியிலும் உங்கள் சாட்சியை இழந்து போய்விடாதிருங்கள். பாடுகளின் மத்தியில் கர்த்தரை இன்னும் அண்டிக்கொள்ளுங்கள். சிலுவையில்லையேல் சிங்காசனமில்லை என்பதையும்,    பாடுகள் இல்லையேல் ஆளுகையில்லை என்பதையும் அறிந்து,    தொடர்ந்து ஜெயமாக முன்னேறிச் செல்லுங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *