லுக் 23:46. இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனைவிட்டார்.
For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/UM3lEMCyEzE
இயேசு சிலுவையில் சுமார் 6 மணி நேரம் தொங்கிக்கொண்டிருந்தார். அப்பொழுது அவர் சிலுவையிலிருக்கும்போது ஏழு வார்த்தைகளை சொன்னார்.
இவற்றில் இரண்டு வார்த்தைகள் குறிப்பிட்ட நபர்களை பார்த்து கூறினார். அவைகள்: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று கள்ளனை பார்த்தும் (லுக் 23:43), தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றும், பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றும் (யோவா 19:26,27) சொன்னார்.
இரண்டு வார்த்தைகள் பொதுவாக எல்லாருக்கும் தெரியும்படியாக சொன்னார். அவைகள்: தாகமாயிருக்கிறேன் (யோவா 19:28) என்றும், முடிந்தது (யோவா 19:30) என்றும் சொன்னார்.
மீதமுள்ள மூன்று வார்த்தைகள் பிதாவாகிய தேவனை நோக்கி சொன்ன வார்தைகளாகும். அவைகள் இயேசுவின் விண்ணப்பமாகவும், கூக்குரலாகவும் காணப்படுகிறது. அவைகள்: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே (லுக் 23:34) என்றும், என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் (மத் 27:46, மாற் 15:34) என்றும், பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டார் (லுக் 23:46) என்றும் வசனம் சொல்லுகிறது.
இயேசு சிலுவையில் சொன்ன கடைசி வார்த்தையாய் இந்த வசனம் காணப்படுகிறது. இயேசு அவருடைய ஜீவனை அவராகவே விட்டார். எந்த மானிடமும் சொல்லமுடியாத வார்த்தையை இயேசு சொன்னார்; அது என்னவென்றால்: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்பதாய் காணப்படுகிறது. இயேசு கடைசி மூச்சுவரை பிதாவை மாத்திரம், பிதாவின் சித்தம் செய்வதை மாத்திரமே தன் குறிக்கோளாக வைத்திருந்தார். இயேசு தன் சிறு வயதில் நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்கவேண்டியதென்று அறியீர்களா என்று சொன்னார். தன் மலை பிரசங்கத்தில் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பான் என்று சொன்னார். சீஷர்களுக்கு ஜெபம் செய்ய கற்றுக்கொடுக்கும்போது பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே என்று சொல்லி ஜெபிக்கும்படி கற்று கொடுத்தார். ஊழியப்பாதையில் எங்கு சென்றாலும் தன் பிதாவை மகிமை படுத்துவதே தன் நோக்கமாக வைத்திருந்தார். கடைசியில் அவருடைய மூச்சு நிற்கும் போதும் பிதாவே என்று உரிமையோடு அழைத்தார். பிதாவானவர் தன்னை இப்படிப்பட்ட கடினமான பாதையில் நடத்தினார் என்று சிறிதேனும் கோபமோ, வருத்தமோ இயேசுவுக்கு இல்லை. ஆகையால் தான் மூச்சு நிற்கும்போதும் அவரை பார்த்து உரிமையாக பிதாவே என்று அழைத்தார். அதன் பின்பு மகா சத்தமாய் தன் ஆவியை பிதாவின் கரங்களில் ஒப்புவிப்பதாக கூறினார். பிதாவின் சித்தத்தின்படி இந்த உலகத்திற்கு இயேசு வந்தார்; பிதாவின் சித்தத்தின்படி சிலுவைபாதையை ஏற்றுக்கொண்டார்; கடைசியாக பிதாவின் கையில் தன் ஆவியை ஒப்புக்கொடுத்தார்.
இயேசுவின் சிலுவையை நினைவுகூருகிற இந்நாட்களில், நாமும் கடைசிமட்டும் இயேசுவின் சித்தம் செய்கிறவர்களாக, வாழ்ந்தாலும் மரித்தாலும் இயேசுவுக்காக வாழவும், மூச்சு நிற்கும்வரை இயேசுவின் சித்தம் செய்கிறவர்களாக காணப்படுவோம். அப்பொழுது நமக்கு பரலோகத்தில் மிகுந்த பலனை அவர் கொடுப்பார். மாத்திரமல்ல, அநேக கிரீடங்களை நமக்கு அணிவித்து மகிழ்விப்பார்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org