ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார், அவர் மாமிசத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார். அந்த ஆவியிலே அவர் போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார். அந்த ஆவிகள், பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம் பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, கீழ்ப்படியாமற்போனவைகள், அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப்பேர்மாத்திரம் காக்கப்பட்டார்கள் (1 பேதுரு 3:18-20).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/gJRwLgRZKE0
பஸ்கா பண்டிகையின் நாளில் கல்வாரிச் சிலுவையில் மாலை மூன்று மணிக்கு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, இயேசு ஆவியைப் பிதாவின் கையில் ஒப்புக்கொடுத்தார். யூதர்களுடைய ஓய்வுநாளும் அதேநாளில் சாயங்காலம் ஆறு மணிக்குத் துவங்குவதால், அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பும், நிக்கொதேமுவுமாகச் சேர்ந்து அவசரமாய் இயேசுவின் உடலைப் புதிதாய் வெட்டின கல்லறையில் அடக்கம் செய்து, ஒரு பெரிய கல்லைப் புரட்டி, வாசலில் வைத்தார்கள். இயேசுவின் சரீரம் கல்லறையில் காணப்பட்டது, ஆனால் அவருடைய ஆவி எங்கே கடந்து சென்றது. மூன்று நாளைக்குப் பின்பு, இயேசுவின் ஆவி அவருடைய சரீரத்தோடு இணைந்து மீண்டும் அவர் உயிர்த்தெழவேண்டும்.
இயேசு கல்வாரிச் சிலுவையில் தொங்கின வேளையில், அவரோடு இரண்டு கள்ளர்கள், இயேசுவின் இரண்டு பக்கங்களிலும் சிலுவையில் அறையப்பட்டார்கள். அவர்களில் ஒருவன், ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது என்னை நினைத்தருளும் என்று வேண்டினான். இயேசு சிலுவையில் தொங்கும் போது அவருக்கு ஒரு ராஜ்யம் உண்டென்பதையும், அந்த ராஜ்யத்தின் ராஜா இயேசு என்பதையும் அறிந்து, அவரை தன்னுடைய ஆண்டவராக ஏற்றுக் கொண்டான். இன்னொருவன் நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தான். இப்படிப்பட்ட இரண்டுவிதமான ஜனங்கள் இன்றும் காணப்படுகிறார்கள். இயேசு அந்த வேளையில், தன்னை ஆண்டவராக ஏற்றுக் கொண்ட கள்ளனை நோக்கி, இன்றைக்கு என்னோடு கூட நீ பரதீசியில் இருப்பாய் என்றார். அதிலிருந்து மரித்த இயேசுவின் ஆத்துமா, அந்த இரட்சிக்கப்பட்ட கள்ளனோடு பரதீசியில் இளைபாறுதலின் இடத்திற்குக் கடந்து சென்றது என்பதை அறியமுடிகிறது. இயேசுவின் வாயிலிருந்து இந்த வார்த்தை வந்ததினால், மிகவும் உறுதிப்படுத்தப்பட்டதாய் இது காணப்படுகிறது.
இயேசுவின் சரீரம் அடக்கம்பண்ணப் பட்ட வேளையில், அவருடைய ஆவியிலே போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார். அந்த ஆவிகள், பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம் பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, கீழ்ப்படியாமற்போனவைகள் (1 பேதுரு 3:18-20) என்று எழுதப்பட்டிருக்கிறது. நோவா பேழையைக் கட்டின வேளையில், வெள்ளத்தினால் வரப்போகிற அழிவைக் குறித்து, ஜனங்களுக்கு பிரசங்கித்தான். ஆனால் அவனுடைய குடும்பத்தின் உறுப்பினர்களாகிய எட்டு பேரைத் தவிர, வேறொருவரும் கீழ்ப்படிந்து பேழைக்குள் வரவில்லை. அவர்கள் எல்லாரும் வெள்ளத்தினால் அழிந்து போனார்கள். மரித்துப்போன அந்த ஜனங்கள் பிரமாணத்தின் நாட்களுக்கு முன்பு மரித்ததினால், எதைச் செய்யலாம் எதைச் செய்யக் கூடாது என்பதை அறிவதற்கு முன்பு மரித்ததினால், காவலில் காணப்பட்ட அவர்களுடைய ஆவிகளுக்கு, இயேசு ஒருவேளை கடந்து சென்று பிரசங்கித்திருக்கக் கூடும்.
எபேசு சபைக்கு அப்போஸ்தலனாகிய பவுல் எழுதும் போது, இயேசு உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கிக் கொண்டுபோய் மனுஷர்களுக்கு வரங்களை அளித்தார் என்றும், ஏறினார் என்பதினாலே அவர் அதற்கு முன்னே பூமியின் தாழ்விடங்களில் இறங்கினார் என்று விளங்குகிறதல்லவா? இறங்கினவரே எல்லாவற்றையும் நிரப்பத்தக்க தாக, எல்லா வானங்களுக்கும் மேலாக உன்னதத்திற்கு ஏறினவருமாயிருக்கிறார் (எபே. 4:8-10) என்று சஙகீதத்தின் வார்த்தைகளை(சங். 68:18) மேற்கோள் காட்டி எழுதினார். இயேசு இளைப்பாறுதலின் ஸ்தலத்தில் காணப்பட்ட நம்முடைய முற்பிதாக்களாகிய ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, தாவீது மற்றும் அனேக பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்களை, பரதீசியிலிருந்து பரலோகத்திற்கு அழைத்துக் கொண்டு சென்றார் என்றும் கருதலாம்.
மேற்குறிப்பிட்ட மூன்று காரியங்களிலிருந்து, இயேசு சிலுவையில் மரித்த பின்பும், அவருடைய ஆவியில் செயல்படுகிறவராகக் காணப்பட்டார் என்பதை புரிந்து கொள்ளமுடிகிறது. அவர் சிலுவை மட்டும் அல்ல, அதன்பின்பும் சிறைப்பட்டவர்களை விடுதலையாக்குகிறவராகக் காணப்பட்டார். இன்றும் பிதாவின் வலது பாரிசத்திலிருந்து நமக்காகப் பரிந்து பேசுகிறார். கர்த்தருடைய பிள்ளைகளே, மரணத்துக்கு ஒப்புவிக்கப்பட்டவர்களையும், கொலையுண்ண போகிறவர்களையும் விடுவிக்கக்கூடுமானால் விடுவி (நீதி.24:11) என்று வேதம் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறது. எப்படியாயினும் சிலருக்கு இரக்கம் பாராட்டி, சிலரை அக்கினியிலிருந்து இழுத்துவிட்டு, பயத்தோடே இரட்சிக்கிறவர்களாக நாம் வாழ்ந்திருக்கிற நாட்களில் காணப்படுவோம் (யூதா 1:22). அதற்குரிய கிருபைகளைக் கர்த்தர் உங்கள் ஒவ்வொருவருக்கும் தந்தருளுவாராக.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar