அவர் நடந்தபடியே  நடக்கவேண்டும்.

அவருக்குள்  நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன்,     அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும் (1 யோவான் 2:6).

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/kVzUiN_545k

இயேசுவில் நிலைத்திருப்பது என்பது அவருக்குள் ஆழமாய் வேரூன்றி அனுதினமும் வாழ்வதும்,     தொடர்ந்து ஆயுள் முழுவதும் அவரை மையப்படுத்தி ஜீவிப்பதுமாகும். அவரில் நிலைத்திருப்பதைக் குறித்து யோவான் அப்போஸ்தலன் அதிகமாக எழுதியிருப்பதை அவருடைய நிருபங்களிலும்,     சுவிஷேசத்திலும்  வாசிக்கமுடியும்.  யோவான்   கடைசிமட்டும் ஆண்டவரோடு காணப்பட்ட உறவில் நிலைத்திருந்தார். ஆகையால் தன்னைப் போல இயேசுவைப் பின்பற்றுகிறவர்களும் அவரில் நிலைத்திருந்து கனிகொடுக்க வேண்டும் என்று விரும்பினார். இயேசுவும் தன்னைக் குறித்துக் கூறும்போது,     நான் மெய்யான திராட்சை செடியென்றும்,     ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால் அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான் என்றும் கூறினார்;. அவருடைய சீஷர்களாகிய நாம் கொடிகளாய் அவரில் நிலைத்திருக்க வேண்டும்,     அப்போது மட்டும் தான் நாம் கனிகொடுக்க முடியும். அவரில் நிலைத்திராவிட்டால் வெளியே எறியுண்ட கொடியைப் போல உலர்ந்து பிரயோஜனமற்றவர்களாய் காணப்படுவோம்.

இயேசுவில் நிலைத்திருக்கிறோம் என்பதை நாம் எப்படிக் கண்டுபிடிக்க முடியும்? இயேசு நடந்தது போல நாமும் நடக்க வேண்டும் என்று 1 யோவான் 2:6ல் எழுதப்பட்டிருக்கிறது. அவரைப் போல நீதிக்குரிய ஜீவியம் செய்யவும்,     அவரில் காணப்பட்ட சுபாவங்களை  வெளிப்படுத்தவும் வேண்டும் என்பதாகும். அதின் அர்த்தம் பாவமே செய்யாமல் காணப்படுவோம் என்றல்ல,     நமக்குப் பாவமில்லையென்போமானால்,     நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம்,     சத்தியம் நமக்குள் இல்லை என்றும் யோவான் எழுதினார். பாவங்கள்,     மீறுதல்கள் வந்தாலும் அவற்றை அறிக்கையிட்டு விட்டுவிடுகிறவர்களாய் காணப்பட வேண்டுமே ஒழிய,     அவற்றைத் தொடர்ந்து செய்கிறவர்களாய் காணப்படலாகாது. இயேசு நமக்கு முன்பு நல்ல முன்மாதிரியை வைத்துச் சென்றிருக்கிறார்,     அவருடைய வாழ்க்கையைக் கவனித்துப் பார்த்து அவருடைய பாதச்சுவடுகளை பின்பற்றுவோம். உலகம் காட்டுகிற மாதிரிகளைப் பின்பற்ற விசுவாசிகளும்,     ஊழியர்களும் விரும்புகிற இந்நாட்களில்,     இயேசுவில் நிலைத்திருக்கிற நீங்கள் அவருடைய மாதிரியைப் பின்பற்றுங்கள்.

ஆண்டவரில் நிலைத்திருக்கிறேன் என்று சொல்லுகிறவர்கள்,     அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ள வேண்டும் என்று 1 யோவான் 3:24ல் எழுதப்பட்டிருக்கிறது. இயேசு எப்படி பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பில் நிலைத்திருந்தாரோ,     அதுபோல் நாமும் அவருடைய வசனங்களைக் கைக்கொண்டு ஜீவிக்கவேண்டும். அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனமும் நமக்கு உண்டு,     பொழுது விடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும் என்று 2 பேதுரு 1:19ல் எழுதப்பட்டிருக்கிறது. கர்த்தருடைய பிள்ளைகளே வசனத்தைக் கவனித்து,     அதைக் கைக்கொண்டு ஜீவியுங்கள்,     அதிலிருந்து தான் நீங்கள் இயேசுவில் நிலைத்திருக்கிறவர்கள் என்பதை அறியமுடியும். அதுபோல 1  யோவான் 4:13 கூறுகிறது,     அவர் தம்முடைய ஆவியில் நமக்குத் தந்தருளினதினாலே நாம் அவரிலும் அவர் நம்மிலும் நிலைத்திருக்கிறதை அறிந்திருக்கிறோம் என்று. நாம் அவராலே பெற்ற அபிஷேகம் நம்மில் நிலைத்திருக்கிறது,     அந்த அபிஷேகம் சகலத்தையும் குறித்து நமக்குப் போதிக்கிறது. இயேசுவின் பிரசன்னத்தில் எப்பொழுதும் காணப்படுவது,     நாம் அவரிலும் அவர் நம்மிலும் நிலைத்திருப்பதை வெளிப்படுத்துகிறது. மோசே தேவனுடைய சமூகத்தை வாஞ்சித்தது போல இந்நாட்களில் நீங்களும் வாஞ்சியுங்கள்,     எப்பொழுதும் அவருடைய பிரசன்னத்தில் ஜீவியுங்கள்.

கர்த்தருடைய பிள்ளைகளே,     நீங்கள் இயேசுவிலும் அவருடைய  வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால்,     நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும். உங்கள் விண்ணப்பங்களை எல்லாம் கர்த்தர் கேட்டு உங்களுக்கு பதில் செய்வார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *