ஒருவன் உங்களிடத்தில் வந்து இந்த உபதேசத்தைக் கொண்டுவராமலிருந்தால், அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள். அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய துர்க்கிரியைகளுக்கும் பங்குள்ளவனாகிறான் (2 யோவான் 1:10, 11).
For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/QWSw4m2d7sk
நாம் ஒருவரையொருவர் பார்க்கும் போது வாழ்த்துதல் சொல்லுவது வழக்கம். தங்கள் கலாச்சாரத்திற்கு தக்கதாக வாழ்த்துதல் சொல்லுகிறவர்களும் உண்டு. வேதத்தில் எழுதப்பட்ட அனேக நிருபங்களும் வாழ்த்துதலோடு துவங்குகிறதை வாசிக்கும் போது புரிந்துகொள்ளலாம். ஆனால் ஒரு கூட்டத்திற்கு மட்டும் வாழ்த்துதல் சொல்லக் கூடாது என்றும், அவர்களை வீடுகளில் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்றும், யோவான் தன்னுடைய வயோதிப நாட்களில், கிறிஸ்துவுக்கு பின் சுமார் 85 முதல் 95ம் வருட வாக்கில், சபைக்கு நிருபங்களை எழுதும்போது, ஆலோசனையாகவும் எச்சரித்தும் எழுதினார். அவர்கள் யார் என்று பார்க்கும் போது, வேதவசனங்களுக்குப் புறம்பான வியாக்கியானங்களையும், அப்போஸ்தலர்கள் கொடுத்த உபதேசத்தைத் தவிர்த்து வேறு விதமான உபதேசங்களையும் கொண்டுவருகிறவர்களைக் குறித்து அவ்வாறு எழுதினார். அதற்குக் காரணம், யோவானுடைய நாட்களிலேயே சபைக்கு ஒருபுறம் உபத்திரவங்கள் காணப்பட்டாலும், மறுபுறத்தில் அனேக கள்ளப்போதகர்களும், கள்ளத்தீர்க்கதரிசிகளும், அந்திக்கிறிஸ்துகளும் எழும்பி சபையைக் கறைப்படுத்தினார்கள். அப்படிப்பட்டவர்களை வீட்டிலே ஏற்றுக்கொள்ளக் கூடாது, இங்கு வீடு என்பது, நாம் வசிக்கிற வீட்டையும், தேவனுடைய வீடாகிய சபையையும் குறிக்கிறது. அப்படிப்பட்டவர்களுக்கு வாழ்த்துதல் சொல்லவும், அவர்களுக்கு விருந்தோம்பல் செய்யவும் கூடாது.
கர்த்தருடைய பிள்ளைகளே, நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அவைகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்து அறியுங்கள், அதைப் போல எல்லா ஊழியர்களையும் நம்பாமல் அவர்கள் தேவனால் அழைக்கப்பட்டவர்களா என்று சோதித்து அறியுங்கள். இந்நாட்களில் வேறொரு இயேசு எங்கும் பிரங்கிக்கப்படுகிறார், வேறொரு ஆவியில் ஜனங்கள் களிகூருகிறார்கள், வேறொரு சுவிஷேசம் எங்கும் காணப்படுகிறது. அப்போஸ்தலனாகிய பவுல், எபேசு சபை விசுவாசிகளுக்குப் பிரயோஜனமான ஒன்றையும் மறைத்து வைக்காதபடிக்கு, தேவனுடைய சகல ஆலோசனைகளையும் கற்றுக் கொடுத்தார். ஆனால் இந்நாட்களில் கிருபையின் உபதேசங்களும், செழிப்பின் உபதேசங்களும் எங்கும் காணப்படுகிறது, வேதவசனங்களின் ஒருபகுதியை மாத்திரம் ஜனங்களுக்குக் காட்டி, மற்ற ஆலோசனைகளை மறைத்து விடுகிறார்கள். வேதவாக்கியங்கள் எல்லாம் தேவ ஆவியினால் நமக்கு அருளப்பட்டிருக்கிறது என்று வேதம் கூறுகிறது. இந்தப் புத்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது, ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளைத் தேவன் அவன்மேல் கூட்டுவார். ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கைத் தேவன் எடுத்துப்போடுவார் என்று வெளி. 22:18, 19ல் எழுதப்பட்டிருக்கிறது. ஆகையால் வேதவசனத்தைக் கூட்டியோ, குறைத்தோ போதிப்பதும், கற்றுக்கொள்ளுவதும், பரலோகத்திற்கும் பாதாளத்திற்கும் உள்ள வித்தியாசமாகக் காணப்படுகிறது. ஆகையால் கர்த்தருடைய ஜனங்கள் மிகக் கவனமாகக் காணப்பட வேண்டிய நாட்கள் இது.
கடைசிநாட்களில் நீங்கள் உங்களைக் காத்துக் கொள்ளவேண்டும் என்றால் பெரேயா பட்டணத்து ஜனங்களைப் போலக் காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று எல்லாருடைய உபதேசங்களையும் வேதவாக்கியங்களோடு ஒப்பிட்டுச் சோதித்துப் பாருங்கள். நீங்கள் அவர்களுக்கு வாழ்த்துதல் சொல்லி அவர்களை உங்கள் வீடுகளில் ஏற்றுக் கொள்ளும் போது, அவர்களுடைய துர்க்கிரியைகளுக்கு பங்குள்ளவர்களாகிறீர்கள், அவர்களுடைய பாவங்களில் பங்குபெறுகிறீர்கள். மரம் அதின் கனிகளினால் அறியப்படும், நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும், கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும், ஆகையால் ஒரு மரத்திலிருந்து கனிகளைப் பெறுவதற்குச் சிலகாலம் காத்திருப்பதைப் போல, எந்த ஊழியர்களையும் உடனடியாக ஏற்றுக்கொள்ளாதபடி, அவர்களுடைய நடக்கையையும், வாழ்க்கையையும் சோதித்து அறிந்த பின்பு ஏற்றுக்கொள்ளுங்கள். யோசபாத் ராஜா, ஆகாபோடும், அவன் குமாரனோடும் தோழமை பாராட்டி, அவர்களுக்கு வாழ்த்துதல் கூறி, அவர்களை விசாரித்து, அவர்களோடு சேர்ந்து கப்பல் தொழில் செய்தான், ஆகையால்; அவன் யுத்தத்தில் மரிக்க வேண்டிய சூழ்நிலை வந்தபோது கர்த்தர் அவனைக் கிருபையாய் காப்பாற்றினார், அவனுடைய கையின் பிரயாசங்களைக் கூட கர்த்தர் முறித்துபோட்டார். துர்உபதேசங்களையும், நூதனமான வியாக்கியானங்களையும், கவர்ச்சிக்கிற பேச்சு மற்றும் ஆடை அலங்காரங்களோடு வருகிறவர்களை இனம்கண்டு ஒதுக்கித்தள்ளுங்கள். அப்படிப்பட்டவர்கள் தேவனிடத்திலிருந்து உங்களுக்கு வருகிற நன்மையைக் கூட கெடுத்துவிடுவார்கள். உங்கள் கைகளின் பிரயாசத்தைக் கர்த்தர் முறித்துப் போடுவதற்குக் காரணமாயிருந்து விடுவார்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar