நான் ஆதாமைப்போல என் மீறுதல்களை மூடி, என் அக்கிரமத்தை என் மடியிலே ஒளித்துவைத்தேனோ? (யோபு 31:33).
For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/RInHB60g36I
யோபுவுக்கு ஆறுதல் கூறும்படிக்கு வந்த நண்பர்கள், வெளிப்புறமாக யோபு நீதிமானாய் காணப்பட்டாலும், அவன் பாவங்களைச் செய்து அதை மறைக்கிறான், ஆகையால் தான் இப்படிப்பட்ட கஷ்டங்கள் அவனுடைய வாழ்க்கையில் வந்தது என்று குற்றம்சாட்டினார்கள். அவர்களுக்குப் பதில் சொல்லுகையில், நான் ஆதாமைப் போல என் மீறுதல்களையும், அக்கிரமத்தையும் மறைத்து வைத்தேனோ என்று யோபு வருத்தத்தோடு கேட்டான். யோபுவை, தேவனுடைய கண்கள் உத்தமனும், சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகக் கண்டது. ஆனால் அவனுடைய நண்பர்களின் கண்கள் அவனைக் குற்றவாளியாகப் பார்த்தது. கர்த்தருடைய பிள்ளைகளே, உபத்திரவங்களும், பாடுகளும் உங்கள் வாழ்க்கையில் வரும் போதுதான் உங்களுடைய நண்பர்கள், உறவினர்கள் யார் என்று அறிந்து கொள்ள முடியும். ஆகையால் மற்றவர்கள் உங்களைக் குற்றவாளியாகக் கருதினாலும், ஆண்டவருடைய பார்வையில் உத்தமனாகக் காணப்படுங்கள்.
விலக்கப்பட்ட விருட்சத்தின் கனியை ஆதாம் புசித்த வேளையில், அவனுடைய கண்கள் திறக்கப்பட்டு, நிர்வாணி என்று உணர்ந்தான். அப்போது பகலின் குளிர்ச்சியான வேளையில் தோட்டத்தில் உலாவுகிற கர்த்தருடைய சத்தத்தைக் கேட்டு, தேவனை விட்டு விலகிச் சென்று விருட்சங்களுக்குள்ளே ஒளிந்து கொண்டான். ஆதாமே நீ எங்கே இருக்கிறாய் என்று தேவன் கேட்ட போது, நான் உம்முடைய சத்தத்தைக் கேட்டு, நிர்வாணியாயிருப்பதானதால் ஒளிந்துகொண்டேன் என்றான். நீ நிர்வாணி என்று உனக்கு அறிவித்தவன் யார்? புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தாயோ என்று கர்த்தர் கேட்ட வேளையில், என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரீயானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள், நான் புசித்தேன் என்றான். தன் மீறுதலையும், குற்றத்தையும் தன் மனைவியின் மேல் சுமத்தினான். மேலும் தன் பாவத்தை மன்னிப்பதற்குத் தேவனிடத்தில் இரக்கம் கேட்பதற்குப் பதிலாக அத்தியிலைகளைத் தைத்து, அரைக்கச்சைகளை உண்டாக்கி சுயநீதியினால் பாவங்களை மறைக்க முயன்றான். யோபு, ஆதாமைப் போலப் பாவம் செய்யவுமில்லை, அதை மறைக்க முயலவுமில்லை. கர்த்தர் அவன் வழிகளைப் பார்த்து, அவன் நடைகளையெல்லாம் எண்ணுகிறார் என்பதை அறிந்திருந்தான், ஆகையால் கர்த்தருக்குப் பயந்து, பாவங்களுக்கு விலகி அனுதினமும் ஜீவித்தான்.
கர்த்தருடைய பிள்ளைகளே, மீறுதல்களையும், அக்கிரமங்களையும் ஆதாமைப் போல ஒருபோதும் மறைத்து வைக்காதிருங்கள். பொதுவாக நாம் பாவம் செய்தோம் என்பதை ஒருநாளும் ஏற்றுக் கொள்ளுவதில்லை, அதை மறைக்க முயற்சி செய்வதுண்டு. நம்முடைய கண்களில் உத்திரத்தை வைத்துக் கொண்டு மற்றவர்கள் கண்களிலிருக்கிற துரும்பைப் பார்ப்பவர்களாகக் காணப்படுவதுமுண்டு. தன் பிழைகளை உணருகிற மனுஷன் யார் என்று வேதம் கேட்கிறது. பாவங்களை மறைக்கிறவனுக்கு வாழ்வு இல்லை, அதை அறிக்கைச் செய்து விட்டுவிடுகிறவனுக்கு மாத்திரமே இரக்கம் உண்டு. ஆகையால் பாவங்களை ஒளித்து வைக்காமல், அவற்றை அறிக்கைச் செய்து விட்டுவிடுங்கள். ஒருநாளும் குற்ற மனசாட்சியோடு கர்த்தருடைய ஜனங்கள் காணப்படலாகாது. ஆதாமைப் போலப் பாவங்களை மறைக்கிறவர்களாய் அல்ல, யோபுவைப் போல நல்மனசாட்சி உடைய ஜீவியம் செய்யக் கர்த்தர் நம் ஒவ்வொருவருக்கும் உதவி செய்வாராக.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar