I கொரிந்தியர் 4:10 நாங்கள் கிறிஸ்துவினிமித்தம் பைத்தியக்காரர், நீங்கள் கிறிஸ்துவில் புத்திசாலிகள்; நாங்கள் பலவீனர், நீங்கள் பலவான்கள்; நீங்கள் கனவான்கள், நாங்கள் கனவீனர்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/ylCVNtKdlBM
இவ்வுலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாயிருக்கிறது (1 கொரி 3:19) என்றும் ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார் (1 கொரி 1:27) என்றும் வேத வசனம் சொல்லுகிறது. இப்படியிருக்க பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிக்கிறவர்களை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று (1 கொரி 1:21). உலகத்தின் ஜனங்களுக்கு சிலுவை பைத்தியமாய் இருக்கலாம்; ஆனால் நமக்கு அது தேவ பெலன் என்று வசனம் சொல்லுகிறது.
ஒரு ஊரில் ஒரு தேவபிள்ளை தினந்தோறும் தன் முன்பக்கத்திலும் பின்பக்கத்திலும் வேத வசனத்தை எழுதி தெருக்களில் நடந்துசெல்வான். அதை கண்ட ஜனங்கள் அவனை பார்த்து இகழ்ந்தார்கள், பரியாசம்பண்ணினார்கள். மேற்படிப்பு படித்து முட்டாளாக காணப்படுகிறான் என்று எல்லாருடைய வசைச்சொல்லுக்கு அந்த தேவபிள்ளை ஆளானான். ஆனால் அவனோ இவைகளெல்லாவற்றிலும் கலக்கமடையவில்லை. ஒரு வருடம் கழித்து அந்த தேவபிள்ளை எப்பொழுதும் போல போடும் வசனத்திற்கு மாறாக வேறொரு வாசகத்தை எழுதி தெருவில் நடந்துவந்தான். அவனுடைய முன்புறத்தில் நான் கிறிஸ்துவினிமித்தம் பைத்தியக்காரன் என்று எழுதி இருந்தான். அதை கண்ட ஜனங்கள் அவனுக்கு பின்னால் என்ன எழுதியிருக்கிறது என்று ஆவலோடு பார்த்தார்கள். அவனுக்கு பின்னால் நீங்கள் யாருக்கு பைத்தியக்கார்கள் என்று எழுதி இருந்தது. இதை படித்த அநேக ஜனங்களுடைய உள்ளமும் குத்துண்டது.
நாம் யாரினிமித்தம் பைத்தியக்காரர்களாக இருக்கிறோம் என்ற கேள்வியை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். நாம் சினிமாவிற்கும், சினிமா பாட்டிற்கு பைத்தியமா ? சில கிறிஸ்தவர்களுக்கு சினிமா பாடல் கேட்கவில்லை என்றால் தூக்கமே வராது. நாம் உலகத்தின் பொல்லாத தலைவருக்கு பைத்தியமா? அவர்களுக்காக கோஷமிட்டு நம்முடைய வாழ்நாளை வீணாக்குகிறோமா? நாம் போதை பொருளுக்கு பைத்தியமா? நாம் வேசித்தனம் விபச்சாரத்திற்கு பைத்தியமா? நாம் வேண்டாத நட்புகளுக்கு பைத்தியமா? நாம் புறம்பான ஆடை அலங்காரங்களுக்கு பைத்தியமா? இந்த உலகத்திற்கு பைத்தியமா? சாத்தானுக்கு பைத்தியமா? இவைகளுக்கு பைத்தியமாக இருப்போமென்றால், வாழ்நாளின் கடைசியில் இவைகளினிமித்தம் என்ன பயனடைய போகிறோம் என்ற கேள்வியை கேட்டு பார்க்க வேண்டும். மாறாக, நான் கிறிஸ்துவினிமித்தம் பைத்தியக்காரன் என்று அறியப்பட, சொல்லப்பட வெட்கப்படாதிருங்கள்.
கர்த்தரை நேசிக்கிற ஒரு தம்பதியினருக்கு திருமணமாகியும் அநேக நாட்கள் குழந்தை இல்லாமல் இருந்தது. அவர்கள் வருடம் தோறும் வளைகுடா நாட்டில் வேலை செய்து விடுமுறைக்காக சொந்த தேசத்திற்கு கடந்து செல்வார்கள். அப்பொழுது அந்த தம்பதியினர் கிறிஸ்த்துவுக்காக எதையாகிலும் செய்ய வேண்டும் என்று முயற்சிப்பதையும், சபை கூட்டங்களில் கலந்து கொள்வதையும் கண்ட அவர்களுடைய உறவினர்கள் அந்த தம்பதியினரை வாயின் வார்த்தையால் தாக்கினார்கள். விடுமுறைக்கு வந்தாவது வேண்டிய சிகிச்சை எடுக்கவோ, அதைக்குறித்து முயற்சிக்கவோ எந்தவொரு நடவடிக்கைகளும் எடுக்காமல், ஏன் இயேசு இயேசு என்று இப்படி செல்கிறாய்? என்ற கேள்வியோடும், ஒருவேளை நீ இயேசுவை பின்பற்றுவதால் தான் இன்னும் உனக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்றும் சொல்லி பரியாசம் பண்ணினார்கள். ஆனால் அந்த குடும்பமோ இயேசுவுக்காக சிலுவை சுமக்க தங்களை ஆயத்தமாக்கி கொண்டார்கள். வருடங்கள் கடந்தது இப்பொழுது கர்த்தர் அந்த குடும்பத்திற்கு இரண்டு குழந்தைகளை கொடுத்து ஆசிர்வதித்திருக்கிறார். கிறிஸ்துவினிமித்தம் உங்களை பைத்தியக்காரர் என்று சொல்லப்படுவீர்களென்றால், அதற்கான பலனை நிச்சயம் அடைவீர்கள். என் நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள். முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான் (மாற் 13:13) என்று இயேசு சொன்னார். ஆகையால் பவுல் சொல்லுவது போல நாங்கள் கிறிஸ்துவினிமித்தம் பைத்தியக்காரர் என்று சொல்ல வெட்கப்படாதிருங்கள்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org