பேச்சில் கவனம் :-

மத் 12:36. மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்புநாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/2EfUgEX5VCI

பேசும்போது சிலர் மற்றவர்களை காயப்படுத்தி பேசிவிட்டு விளையாட்டுக்காக தான் சொன்னேன் என்று சாதாரணமாக சொல்லுவதுண்டு. மற்றவர்களை காயப்படுத்தும் எந்தவொரு கேலி, கிண்டல் போன்ற நகைச்சுவையும் நாம் தவிர்க்கவேண்டும். அது மாத்திரமல்ல நாவினால் மற்றவர்களை புறங்கூறாமல் இருக்கவேண்டும் என்று வசனம் சொல்லுகிறது (சங் 15:3). உலகத்தார் தான் மற்றவர்களை புறனி பேசி, தாக்கி பேசுகிறார்கள் என்றால் இன்று சபை விசுவாசிகளும் மற்ற சக விசுவாசிகளை தாக்கி பேசுவது சாதாரணமாகிவிட்டது. வரும் ஆபத்துகளை சபை ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும். நாம் நியாயத்தீர்ப்பு நாளில் வீணான வார்த்தைகள் யாவைக்கும் கணக்கு ஒப்புவிக்க வேண்டும்.

உன் வாய் அல்ல, புறத்தியானே உன்னைப் புகழட்டும்; உன் உதடு அல்ல, அந்நியனே உன்னைப் புகழட்டும் (நீதி 27:2). விசுவாசிகள் தங்களை தானே புகழ்ந்துகொள்ள எத்தனிக்கக்கூடாது. இது ஊழியக்காரர்களுக்கும் பொருந்தும். ஒரு ஊழியக்காரர் சொல்லுவார் நான் நாடுகள் பல பயணித்திருக்கிறேன், என் பிரசங்கம் அநேகருக்கு பிடிக்கும், என்னுடைய பாடல்கள் அநேகருக்கு பிடிக்கும், நான் ஜெபம்செய்யும்போது ஜனங்கள் நீங்கள் நன்றாக ஜெபிக்கிறீர்கள் என்று சொல்லுவார்கள் என்று தற்பெருமை கொண்டவராக காணப்பட்டார். ஊழியக்காரர், விசுவாசிகள், உலகத்தின் தலைவர்கள் யாராக இருந்தாலும் வீண் புகழ்ச்சிக்கு இடம்கொடுக்கலாகாது. நேபுகாத்நேச்சார் தன்னை தானே புகழ்ந்து வீழ்ச்சியை அடைந்தான் என்பதை தேவ ஜனங்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்; அப்பொழுது நீங்களும் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதிருப்பீர்கள்; மற்றவர்களை ஆக்கினைக்குள்ளாகும்படி தீர்க்காதிருங்கள், அப்பொழுது நீங்களும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதிருப்பீர்கள் (லுக் 6:37). மற்றவர்களை பற்றி முழு விவரமும் தெரியாமல் இவன் இந்த பாவத்தை செய்தான் என்று இலகுவாக குற்றவாளி என்று நியாயம் தீர்த்து விடாதிருங்கள். நியாயம் செய்கிறவர் ஒருவரே. ஆகையால் யாரையும் ஆக்கினைக்குள்ளாக தீர்க்காதிருங்கள்.

உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும் (மத் 5:37). வாயைத்திறந்தால் எப்பொழுதும் பொய் பேசுகிறவர்களாக காணப்படலாகாது. ஜெப கூடுகைக்கு ஏன் வரவில்லை என்றோ, சபைக்கு ஏன் வரவில்லை என்றோ போதகர் கேட்டால், உண்மையை பேசுங்கள். உண்மைக்கு மாறாக எனக்கு தலைவலி, காய்ச்சல் என்று பொய் பேசுகிறவர்களாக காணப்படலாகாது. உங்களிடம் இல்லாத திறமையை எனக்கு இருக்கிறது என்று சொல்லாதிருங்கள். உள்ளதை உள்ளதென்று சொல்லுங்கள்.

உங்களில் ஒருவன் தன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை வஞ்சித்து, தன்னை தேவபக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும் (யாக் 1:26). ஆகையால், என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக (சங் 19:14) என்று சொன்ன பக்தனை போல நம் வாயின் வார்த்தைகள் உலகத்தின் ஜனங்கள் யாருக்கு பிரியமாய் இருக்கிறதோ இல்லையோ, கர்த்தருக்கு பிரியமாய் இருக்கிறதா என்று சோதித்து பார்க்க வேண்டும். உங்கள் வார்த்தைகள் அன்பினாலும் கிருபையினால் நிறைந்து இருக்கட்டும் (கொலோ 4:6).

கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *