சங் 149:5. பரிசுத்தவான்கள் மகிமையோடே களிகூர்ந்து, தங்கள் படுக்கைகளின்மேல் கெம்பீரிப்பார்கள்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/TQJupQw2R-Y
149வது சங்கீதத்தை யார் எழுதினார்கள் என்பதை குறித்து வேதாகமத்தில் குறிப்பிடப்படவில்லை. எழுதின சங்கீதக்காரன் தன்னுடைய படுக்கையிலும் ஆண்டவரை துதித்து, அவருக்குள் களிகூர்ந்து, கெம்பீரிக்கிறதை பார்க்கமுடிகிறது. சங்கீதக்காரனாகிய தாவீது கர்த்தரை எல்லா சூழ்நிலையிலும், எப்பொழுதும் துதிக்கிறவனாக காணப்பட்டான். தாவீது சமஸ்த இஸ்ரவேலுக்கும் இராஜாவாக இருந்தான். அவன் ஒரு நாட்டிற்கே இராஜாவாக இருந்ததினிமித்தம் அநேக வேலைகள் அவனுக்கு இருந்திருக்கும். இந்நாட்களில் இருப்பதைப்போல கட்சியை பலப்படுத்த எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும், மாநில மாவட்ட வாரியாக தலைவர்களை சந்திக்க வேண்டும், செய்தி தொடர்பாளர்களை சந்திக்க வேண்டும், தன்னுடைய அமைச்சர்களை அழைத்து அவர்களுக்கு பணிகளை கொடுத்து அவர்கள் சரியாக செயல்படுகிறார்களா என்று பார்க்க வேண்டும், தேசத்தின் குடிகளுக்கு வேண்டிய நல்ல திட்டங்களை செயல்படுத்த வேண்டும், எதிராக வரும் தேசத்திலிருந்து தன்னையும் தன் குடிகளையும் பராமரிக்க வேண்டும்; இப்படி பல பணிகளின் மத்தியிலும் அவன் எப்பொழுதும் ஆண்டவரை துதிக்கொண்டே இருந்தான். தாவீதின் ஜெயமுள்ள வாழ்க்கைக்கு மிக முக்கியமான காரியம் அவன் எல்லா சூழ்நிலையிலும் கர்த்தரை துதித்தான். இன்று நான் மிகவும் Busy யாக இருக்கிறேன், வேலைப்பளு அதிகம், குடும்ப காரியங்களை பார்க்க வேண்டும், ஆகையால் எனக்கு ஆண்டவரை துதிக்க நேரமில்லை என்று சொல்பவர்கள், தாவீதை உங்களுக்கு முன்பாக வைத்து பாருங்கள். தாவீதை காட்டிலும் நிச்சயமாக நீங்களும் நானும் அலுவல வேலைகளில் மூழ்கி இருக்கவில்லை. உங்கள் வேலைஸ்தலங்களில், உதாரணத்திற்கு, ஒரு ஈமெயில் அனுப்புகிறீர்களென்றால், அதை அனுப்பிக்கொண்டே உங்களால் ஆண்டவரை உள்ளத்தில் துதிக்க முடியும்; வாகனத்தை ஓட்டி கொண்டு செல்லும்போது, கர்த்தரை துதிக்க முடியும்; சாப்பிடும் போது கர்த்தரை துதிக்க முடியும்; எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் தனி ஜெபத்தில் அதிக நேரம் கர்த்தரை மனமுவந்து துதிக்க வேண்டும்; அப்படி துதிக்கிறவர்களாக, யூதா கோத்திரத்து ஜனங்களாக நீங்கள் காணப்பட வேண்டும்.
சிலர் சொல்லுவார்கள் என் படுக்கையின் போது எனக்கு பயமாகவும் திகிலாகவும் இருக்கிறது என்று, சிலர் என் படுக்கையின் போது நான் வேண்டாத காரியங்களை சிந்தித்து கவலைப்பட்டு குழம்பிக்கொண்டிருக்கிறேன் என்றும், சிலர் படுக்கையின்போது வேண்டாத காரியங்களை தொலைபேசியில் பார்த்துக்கொண்டும், சிலர் தங்கள் சிந்தைகளில் வேசித்தன எண்ணங்களை சிந்தித்து கொண்டும் இருப்பதுண்டு. ஆனால் இங்கே பக்தன் தன்னுடைய படுக்கையில் ஆண்டவரை கெம்பீரமாக, களிகூர்ந்து பாடி மகிழ்கிறான். ஒரு ஊழியக்காரர் சொல்லுவார், நான் இயேசுவை நன்றாக துதித்து விட்டு தூங்கும்போது, என் நித்திரை இன்பமாக இருப்பது மாத்திரமல்ல, கொஞ்ச நேரம் தூங்கினாலும், மிக அதிக இளைப்பாறுதல் கிடைத்ததுபோல ஒரு புத்துணர்ச்சி எனக்கு உண்டாகும் என்பதாக. நீங்களும் உங்கள் படுக்கைகளில் தேவனை குறித்து சிந்தித்துக்கொண்டு, அவரை பாடி புகழுங்கள்; உங்கள் படுக்கைகளில் ஆண்டவரை குறித்து களிகூர்ந்து அவருக்குள் மகிழுங்கள். உங்கள் வாயில் கர்த்தரை உயர்த்தும் துதியும், உங்கள் கையில் இருபுறமும் கருக்குள்ள பட்டயமும் (சங் 149:8) இருக்கட்டும். அப்பொழுது உங்கள் நித்திரை இன்பமாக இருக்கும்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org