கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள், ஆனந்த சத்தத்தோடே வாத்தியங்களை நேர்த்தியாய் வாசியுங்கள் (சங். 33:3).
For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/F8FPmxMHBuw
கர்த்தருக்கு புதிய பாடல்களைப் பாடி அவரைத் தொழுதுகொள்ள வேண்டும். சங்கீதக்காரனாகிய தாவீதின் வாயில் தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவரே கொடுத்தர் என்று சங். 40:3 கூறுகிறது, ஆகையால் சங்கீத புத்தகத்தில் காணப்படுகிற பாடல்களை அவன் எழுதினான். ஒரு கடினமான சூழ்நிலையில் காணப்பட்ட வேளையில் நீ என்னால் மறக்கப்படுவதில்லை என்ற வசனம் என் கண்களில் பட்டது, அதிலிருந்து என்னை மறவாதவரே, என்னில் நினைவானவரே என்ற புதிய பாடலை எழுதும் படிக்குக் கர்த்தர் கிருபை செய்தார், அந்த பாடல் இன்றும் அனேகருக்கு ஆறுதலாகவும், தேறுதலாகவும், ஆசீர்வாதமாகவும் காணப்படுகிறது. இந்தப் பூமியில் மட்டுமல்ல, பரலோகத்தில் நாம் கடந்து செல்லும் போதும் அங்கேயும் ஆட்டுக்குட்டியானவரின் மீட்பின் பாடலைப் பாடுவோம். இயேசுவும் ஸ்தோத்திரப்பாட்டைப் பாடியபின்பு, தன்னை சிலுவை மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கும் படிக்கு ஒலிவமலைக்குப் புறப்பட்டுப்போனார் (மத். 26:30). ஆகையால் அவருடைய பிள்ளைகளாகிய நீங்களும் கர்த்தரைக் கெம்பீரமாய் பாடி அவரை மகிமைப் படுத்துங்கள். ஆவியோடும் கருத்தோடும் நீங்கள் பாடும் போது தேவ பிரசன்னத்தை உணரமுடியும். நான் என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தும் எந்த ஸ்தானத்திலும் உன்னிடத்தில் வந்து, உன்னை ஆசீர்வதிப்பேன் என்றவர் நீங்கள் அவரைப் பாடி துதிக்கும் போது உங்களை நிச்சயமாய் ஆசீர்வதிப்பார். ஆகையால் வாகனங்களை ஓட்டும்போதும், வீட்டு வேலைகளைச் செய்யும் போதும், மற்ற நேரங்களிலும் கர்த்தரை உயர்த்தும் பாடல்கள் உங்கள் வாயில் இருக்கட்டும். நீங்கள் ஆனந்தக்களிப்புடன் கர்த்தரைப் பாடி உயர்த்தும்போது, நித்திய மகிழ்ச்சி உங்களை நிரப்பும், சந்தோஷமும் மகிழ்ச்சியும் உங்களுக்கு உண்டாகும், சஞ்சலமும் தவிப்பும் உங்களை விட்டு ஓடிப்போய்விடும்.
ஒருமுறை யோசபாத் என்ற யூதாவின் ராஜாவிற்கு விரோதமாய் யுத்தம் பண்ண மோவாப் புத்திரரும், அம்மோன் புத்திரரும், அவர்களோடே அம்மோனியருக்கு அப்புறத்திலுள்ள மனுஷருங்கூட வந்தார்கள். சிலர் வந்து, யோசபாத்தை நோக்கி: உமக்கு விரோதமாய் ஏராளமான ஜனங்கள் கடலுக்கு அக்கரையிலிருக்கிற சீரியாவிலிருந்து வருகிறார்கள் என்றார்கள். அப்பொழுது யோசபாத் பயந்து, கர்த்தரைத் தேடுகிறதற்கு ஒருமுகப்பட்டு, யூதாவெங்கும் உபவாசத்தைக் கூறுவித்தான். பின்பு அவன் யுத்தத்திற்குப் புறப்பட்ட வேளையில் பரிசுத்தமுள்ள மகத்துவத்தைத் துதிக்கவும், ஆயுதம் அணிந்தவர்களுக்கு முன்னாக நடந்துபோய், கர்த்தரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றும் உள்ளதென்று கர்த்தரைப் பாடவும், பாடகரை நிறுத்தினான். அவர்கள் பாடித் துதிசெய்யத் தொடங்கினபோது, யூதாவுக்கு விரோதமாய் வந்து பதிவிருந்த அம்மோன் புத்திரரையும், மோவாபியரையும், சேயீர் மலைத் தேசத்தாரையும், ஒருவருக்கு விரோதமாய் ஒருவரைக் கர்த்தர் எழும்பப்பண்ணினதினால் அவர்கள் வெட்டுண்டு விழுந்தார்கள். யோசபாத்திற்கு கர்த்தர் பெரிய ஜெயத்தைக் கொடுத்தார், அவர்களுடைய ஆடை ஆபரணங்களை மூன்றுநாளாய் கொள்ளையிட்டார்கள், அது அவ்வளவு மிகுதியாயிருந்தது. நீங்களும் கர்த்தரைப் பாடி உயர்த்தும் போது உங்கள் எதிரிகளைக் கர்த்தர் வீழ்த்தி, உங்களுக்குப் பெரிய வெற்றியைக் கட்டளையிடுவார். உங்கள் சத்துருக்களை நீங்கள் கொள்ளையிடுமபடிக்கு கர்த்தர் செய்வார்.
பவுலையும் சீலாவையும் சிறைச்சாலையின் உட்காவலறையிலே அடைத்து, அவர்கள் கால்களைத் தொழுமரத்தில் மாட்டிவைத்தார்கள், நடுராத்திரியிலே அவர்கள் ஜெபம் பண்ணி, தேவனைத் துதித்துப்பாடினார்கள், காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். சடிதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாகப் பூமி மிகவும் அதிர்ந்தது@ உடனே கதவுகளெல்லாம் திறவுண்டது, எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று. கர்த்தர் பெரிய விடுதலையை அவர்களுக்குக் கொடுத்தார். கர்த்தருடைய பிள்ளைகளே நீங்களும் பாடி துதிசெய்யும் போது உங்கள் கட்டுகள் உடையும், தடைகள் மாறும், விடுதலை உண்டாகும். ஆகையால் சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் உங்கள் இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடி கொண்டாடுங்கள். அப்போது கர்த்தர் உங்கள் ஒவ்வொருவரையும் உயர்த்தி ஆசீர்வதிப்பார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar