வேலையில் உயர பரிசுத்த ஆவியானவர்:-

யாத் 31:5 … சகலவித வேலைகளையும் யூகித்துச் செய்கிறதற்கும் வேண்டிய ஞானமும் புத்தியும் அறிவும் அவனுக்கு உண்டாக, அவனை தேவஆவியினால் நிரப்பினேன்.

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/V5mbyZhaWX0

ஆண்டவர் பெசலெயேலைப் பேர்சொல்லி அழைத்து, விநோதமான வேலைகளை அவன் யோசித்துச் செய்கிறதற்கும், பொன்னிலும் வெள்ளியிலும் வெண்கலத்திலும் வேலைசெய்கிறதற்கும், இரத்தினங்களை முத்திரைவெட்டாக வெட்டிப் பதிக்கிறதற்கும், மரத்தில் சித்திரவேலைகளைச் செய்கிறதற்கும் வேண்டிய ஞானத்தின் ஆவியால் கர்த்தர் அவனை நிரப்பினார். பரிசுத்த ஆவியானவர் ஆவிக்குரிய நன்மைகளை மாத்திரமல்ல, நாம் நம்முடைய வேலை ஸ்தலங்களில், தொழிலில் திறம்பட வேலை செய்ய பரிசுத்த ஆவியானவர் நம்மை நிரப்புகிறவராய் காணப்படுகிறார்.

நீங்கள் எந்த ஒரு வேலை செய்தாலும், பரிசுத்த ஆவியானவர் உங்களை நிரப்ப ஜெபியுங்கள். தகவல் தொழில்நுட்பத்துறை, மின்சாரத்துறை, கல்வி, பொறியியல், கணக்காளர்கள், வங்கி வேலைகள் போன்ற எந்த வேலை செய்தாலும் நீங்கள் ஆவியானவரால் நிரம்பி இருப்பீர்களென்றால், கர்த்தர் உங்களை மென்மேலும் உயர்த்திக்கொண்டு இருப்பார். பார்வோன் தன் ஊழியக்காரரை நோக்கி: தேவ ஆவியைப் பெற்ற இந்த மனுஷனைப்போல வேறொருவன் உண்டோ என்றான். பின்பு, பார்வோன் யோசேப்பை நோக்கி: தேவன் இவையெல்லாவற்றையும் உனக்கு வெளிப்படுத்தியிருக்கிறபடியால், உன்னைப்போல விவேகமும் ஞானமுமுள்ளவன் வேறொருவனும் இல்லை. நீ என் அரமனைக்கு அதிகாரியாயிருப்பாய்; உன் வாக்கின்படியே என் ஜனங்கள் எல்லாரும் அடங்கி நடக்கக்கடவர்கள்; சிங்காசனத்தில் மாத்திரம் உன்னிலும் நான் பெரியவனாய் இருப்பேன் என்றான். பார்வோன் யோசேப்பை உயர்த்திய விதத்தை பார்க்கும்போது யோசேப்பு எவ்வளவாய் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருந்தான் என்பதை புறஜாதி இராஜாவே சொல்லும்படி இருந்தது. அதேபோல நேபுகாத்நேச்சார் தானியேலை பார்த்து தன் சொப்பனத்திற்கு அர்த்தம் சொல்லும்படி பரிசுத்த தேவர்களுடைய ஆவி உனக்குள் இருக்கிறதே என்று புரா ஜாதி இராஜாவே சொல்லுகிறவனாய் காணப்பட்டான். ஆனால் கர்த்தருடைய பிள்ளைகள் வேலை செய்வதற்கு பரிசுத்த ஆவியானவரின் நிறைவு வேண்டும் என்ற அறிவு இல்லாமல் இருப்பது கிறிஸ்துவ உலகில் துரதிஷ்டமான காரியமாக காணப்படுகிறது. அநேக கிறிஸ்துவர்கள் பரிசுத்த ஆவியானவர் ஆவிக்குரிய காரியங்கள், ஊழியக்காரியங்களில் மாத்திரமே உதவுவார் என்று எண்ணி, தங்களுடைய உலகுக்கடுத்த காரியங்களில் பரிசுத்த ஆவியானவரின் ஒத்தாசையை நாடாமல் போய் விடுகிறார்கள். பரிசுத்த ஆவியானவரின் நிறைவை பெற்றுக்கொள்வதில் ஆவிக்குரிய காரியம் மற்றும் உலகத்துக்குரிய காரியம் பாகுபடுத்தக்கூடாது. அவர் எல்லா சூழ்நிலைகளிலும் உதவுகிற நம்முடைய தேற்றரவாளன். கர்த்தர் உங்களுக்கு எந்த வேலையை கொடுத்திருந்தாலும், கர்த்தருடைய சித்தத்தின்படி பரிசுத்த ஆவியினால் நிரப்படுங்கள். பரிசுத்த ஆவியானவர் ஞானத்தின் ஆவியானவர்; அவர் அறிவை கொடுக்கும் ஆவியானவர். நீங்கள் திறமையாக வேலைசெய்ய வேண்டிய ஞானத்தினால் பரிசுத்த ஆவியானவர் உங்களை நிரப்புவார்.

கிறிஸ்தவ வாலிபர்கள் வாலிப சகோதரிகள் இந்திய ஆட்சிப்பணி என்று சொல்லப்படும் IAS, இந்திய காவல் பணித்துறை அதிகாரி என்று சொல்லப்படும் IPS, மாவட்ட ஆட்சியர், தாசில்தாரர் போன்ற தலைமைத்துவ பணிகளுக்கு வரவேண்டும். தனியார் துறையில் வேலை செய்யும் ஆண்டவருடைய பிள்ளைகள் தலைமைத்துவ பணிக்கு வரவேண்டும். அப்படி முன்னேறிச்செல்ல வேண்டுமென்றால், இந்நாட்களில் பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொருவரையும் நிரப்ப உங்களை ஒப்புக்கொடுக்க வேண்டும். உயர்மட்டங்களில் இன்று தானியேல்கள், நெகேமியாக்கள், யோசேப்புக்கள், எஸ்தர்கள், தெபோராக்கள் போன்றோர்கள் இடம்பெற வேண்டும். அப்படியாக வேலையில் உங்களை உயர்த்த ஸ்தானத்தில் உயர்த்த பரிசுத்த ஆவியானவர் தாமே உங்களை நிரப்புவராக.

கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *