இந்த மன்னா(This Manna).

இப்பொழுது நம்முடைய உள்ளம் வாடிப்போகிறது, இந்த மன்னாவைத் தவிர,    நம்முடைய கண்களுக்கு முன்பாக வேறொன்றும் இல்லையே என்று சொன்னார்கள் (எண். 11:6).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/U5VKOQ4upvM

இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்தரத்தில் காணப்பட்ட வேளையில் கர்த்தர் ஒவ்வொரு நாளும் காலையில் தேவதூதர்களின் அப்பமாகிய மன்னாவை அவர்களுக்கு உணவாகக் கொடுத்தார். அது வானத்தின் தானியமாகக் காணப்பட்டது. அந்த மன்னா கொத்துமல்லி விதையளவும்,    அதின் நிறம் முத்துபோலவும் இருந்தது. அதின் ருசி புது ஒலிவ எண்ணெய்யின் ருசிபோலவும்,    தேனிட்ட பணிகாரத்திற்கு ஓப்பாயிருந்தது. நாட்கள் கடந்து சென்ற வேளையில் கர்த்தருடைய உணவை அசட்டைச் செய்து,    நன்றியறியாதவர்களாய் அவர்கள் காணப்பட்டார்கள். வேதத்தில் வேறொரு இடத்தில்  கூட கர்த்தருடைய உணவை அற்பமாய் கருதியதை குறித்து வாசித்து அறியமுடிகிறது.  அவர்கள் ஏதோம் தேசத்தைச் சுற்றிப்போகும் படிக்கு,    ஓர் என்னும் மலையைவிட்டு,    சிவந்த சமுத்திரத்தின் வழியாய்ப் பிரயாணம் பண்ணினார்கள்,    வழியினிமித்தம் ஜனங்கள் மனமடிவடைந்தார்கள்.  ஜனங்கள் தேவனுக்கும் மோசேக்கும் விரோதமாகப் பேசி: நாங்கள் வனாந்தரத்திலே சாகும்படி நீங்கள் எங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணினதென்ன? இங்கே அப்பமும் இல்லை,    தண்ணீரும் இல்லை,    இந்த அற்பமான உணவு எங்கள் மனதுக்கு வெறுப்பாயிருக்கிறது என்றார்கள் (எண். 21:4,   5). கர்த்தர் அருளிய உணவை அற்பமாகவும்,    வெறுப்பாகவும் கருதினார்கள். 

கர்த்தருடைய பிள்ளைகளே,    நம்முடைய ஆண்டவருடைய பெயர்களில் ஒன்று யேகோவாயீரே என்பதாகும். அவர் நம்முடைய  தேவைகளைச் சந்திக்கிறவர். அனுதினமும் நம்முடைய வாழ்க்கையில் நமக்கு என்ன வேண்டுமோ,    அதை அருளுகிறவர். ஆனால் நாம் விரும்புவது,    இச்சைகளால் நிறைந்த நம்முடைய விருப்பங்கள் எல்லாவற்றையும் அவர் சந்திக்க வேண்டும் என்று. அவருடைய பிள்ளைகளுக்கு எது ஆசீர்வாதமாய் காணப்படுகிறதோ அவற்றை ஏற்ற வேளையில் தருகிறவர். நமக்கு இறைச்சியைப் புசிக்கக்கொடுப்பவர் யார்?  என்று இஸ்ரவேல் ஜனங்கள் முறுமுறுத்த வேளையில்,    அவர்களுடைய இச்சைக்கேற்ப  இறைச்சியைக் கொடுத்தார்,    ஆனால் அந்த இறைச்சி அவர்கள்  பற்கள் நடுவே இருக்கும் போது அவர்கள் அதை மென்று தின்னுமுன்னே கர்த்தருடைய கோபம் ஜனங்களுக்குள்ளே மூண்டது,    கர்த்தர் ஜனங்களை மகா பெரிய வாதையால் வாதித்தார். திரளான ஜனங்கள் மரித்துப் போனார்கள்,    இச்சித்த ஜனங்களை அங்கேயே அடக்கம்பண்ணினார்கள். ஆகையால் நம்முடைய இச்சைகளின்படி கர்த்தர் நமக்கு அருளினால் அது நமக்கு ஆசீர்வாதமாய் இருப்பதில்லை. நமக்கு அனுதினமும் கர்த்தர் அருளுகிற ஈவுகளுக்கு நன்றி சொல்லுவதற்கே ஆயுள் போதாது,    ஆனால் இல்லாதவற்றுக்குப் பேராசைப் படுகிறவர்களாய் நாம் காணப்படுவதினால் கர்த்தருடைய கோபாக்கினையின் பாத்திரங்களாய் மாறிவிடுகிறோம்.

கர்த்தர்  அருளுகிற நன்மைகளை அசட்டைச் செய்வதும் அற்பமாய் கருதுவதும் அவரையே அசட்டை செய்வதற்கு ஒப்பாகக் காணப்படுகிறது. ஆகையால் இதுவரை உங்களை நடத்திக் கொண்டு வருகிற தேவனுக்கு நன்றி செலுத்துங்கள். உண்ண உணவும்,    உடுப்பதற்கு உடையும்,    தங்குவதற்கு நல்ல வீடுகளையும் கொடுக்கிற அவருக்கு ஸ்தோத்திர பலிகளைச் செலுத்துங்கள். என் ஆத்துமாவே,    கர்த்தரை ஸ்தோத்திரி,    என் முழு உள்ளமே,    அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி.  என் ஆத்துமாவே,    கர்த்தரை ஸ்தோத்திரி,    அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே என்ற சங்கீதக் காரனைப் போல் நாம் நன்றி செலுத்துவது தான் மேன்மேலும் கர்த்தர் நம்மை ஆசீர்வதித்து உயர்த்துவதன் இரகசியம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *