அப்பொழுது ராஜா கட்டளையிட, அவர்கள் தானியேலைக் கொண்டுவந்து, அவனைச் சிங்கங்களின் கெபியிலே போட்டார்கள். ராஜா தானியேலை நோக்கி: நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைத் தப்புவிப்பார் என்றான். (தானி. 6:16).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/PozJy67RELE
மேதியனாகிய தரியு ராஜா, தானியேலைப் பார்த்து, நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைச் சிங்கங்களுக்குத் தப்புவிப்பார் என்றான். தானியேல் பாபிலோனில் எந்தனை வருடங்கள் கர்த்தரை இடைவிடாமல் ஆராதித்தான்? சுமார் 70 வருடஙகள் மேலாய் ஆராதித்தான் என்பதை கர்த்தருடைய பிள்ளைகள் அறிந்து கொள்ள வேண்டும். டீன் ஏஜ்ஜில் அடிமையாகச் சிறைபிடிக்கப்பட்டு எருசலேமிலிருந்து, பாபிலோனுக்கு நேபுகாத்நேச்சாரால் கொண்டுபோகப்பட்டான். அங்குச் சென்ற பின்பும் முன்பு செய்து வந்தபடியே எப்பொழுதும் ஆண்டவரை ஆராதிக்கிறவனாக தொடர்ந்து காணப்பட்டான். அரண்மனை வேலைக்காரனாய், பிரதானிகளில் ஒருவனாய் காணப்பட்டிருந்தும், அதிகமான வேலைப்பழுக்கள் இருந்தும் அவன் தேவப் பிரசன்னத்தில் நிறைந்தவனாயும், தினம் மூன்று வேளை ஜெபிக்கிறவனாயும் இடைவிடாமல் காணப்பட்டான். அப்போஸ்தலர்களும் கூட இடைவிடாமல் ஜெபிக்கிறவர்களாகவும், தேவ வசனத்தை போதிக்கிறவர்களாகவும், புத்தி சொல்லுகிறவர்களாகவும் காணப்பட்டார்கள் என்று வேதம் கூறுகிறது.
இந்நாட்களில் கொஞ்ச நாட்கள் கூட தொடர்ச்சியாய் கர்த்தரைச் சேவிக்க முடியவில்லை, ஆதியில் கொண்டிருந்து அன்பை விட்டு சோரம் போனவர்கள் அனேகர் உண்டு. இயேசுவைப் போஜனம் பண்ணும் படிக்கு அழைத்த பரிசேயனுடைய வீட்டில், தேவனுடைய ராஜ்யத்தில் போஜனம் பண்ணுகிறவன் பாக்கியவான் என்பதைப்பற்றிய ஒரு உவமையை ஆண்டவர் கூறும் போது, ஒரு மனுஷன் பெரிய விருந்தை ஆயத்தம் பண்ணி, அநேகரை அழைப்பித்தான். விருந்து வேளையில் தன் ஊழியக்காரனை நோக்கி: நீ அழைக்கப்பட்டவர்களிடத்தில் போய், எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது, வாருங்கள், என்று சொல்லென்று அவனை அனுப்பினான். அவர்களெல்லாரும் போக்குச்சொல்லத் தொடங்கினார்கள். ஒருவன்: ஒரு வயலைக்கொண்டேன், நான் அகத்தியமாகப்போய், அதைப் பார்க்கவேண்டும், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். வேறொருவன்: ஐந்தேர்மாடு கொண்டேன், அதைச் சோதித்துப் பார்க்கப்போகிறேன், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். வேறொருவன்: பெண்ணை விவாகம் பண்ணினேன், அதனால் நான் வரக்கூடாது என்று ஒவ்வொருவரும் சாக்குப்போக்குச் சொல்லத் தொடங்கினார்கள். இந்நாட்களிலும் கூட இப்பிரபஞ்சத்திற்குரிய கவலையினாலும், பொருளாசைகளினாலும், சோம்பல்களினாலும், கனநித்திரையினாலும் கர்த்தரை இடைவிடாமல் சேவிக்க முடியாமல் இருநினைவுகளினால் குந்திக்குந்தி நடக்கிற கிறிஸ்தவர்கள் அனேகர் காணப்படுகிறார்கள்.
தானியேல் உண்மையாய் இடைவிடாமல் கர்த்தரை ஆராதித்ததினால், அவன் மேல் பொய் குற்றம் சாட்டி சிங்கக் கெபியில் தள்ளின சத்துருக்களின் மேல் காத்தர் அவனுக்கு ஜெயத்தைக் கொடுத்தார். அவன் சேவித்த ஐந்து ராஜாக்களின் காலத்திலும் தானியேலுடைய காரியங்கள் ஜெயமாயிருக்கும் படிக்குக் கர்த்தர் செய்தார். சொப்பனங்களை வியாக்கியானம் பண்ணுகிற கிருபைகளையும், பல ஆவிக்குரிய தரிசனங்களைக் கர்த்தர் அவனுக்குக் கொடுத்தார். ஜீவனுள்ள தேவனுடைய தாசனே என்று ராஜாவினால் அழைக்கப்படுகிற கனத்திற்குரிய பாத்திரமாய் அவன் காணப்பட்டான். கர்த்தருடைய பிள்ளைகளே, சோர்ந்து போகாமலும், பின்னிட்டு பாராமலும் தொடர்ந்து கர்த்தரைச் சேவியுங்கள். உங்கள் உண்மையையும், உத்தமத்தையும் உலகத்தின் ஜனங்கள் உங்களில் கண்டு இயேசுவை மகிமைப் படுத்தட்டும். அப்போது கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து உயர்த்துவார், உங்கள் காரியங்கள் எப்பொழுதும் ஜெயமாயிருக்கும்!
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar