ஆபிரகாமுடைய மடி (Abraham’s Bosom).

பின்பு அந்தத் தரித்திரன் மரித்து,      தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்,   ஐசுவரிய வானும் மரித்து அடக்கம்பண்ணப்பட்டான். பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது,      தன் கண்களை ஏறெடுத்து,      தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான் (லூக்கா 16:22,     23).

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/Y8flIjHlmPM

ஆபிரகாமுடைய மடி என்ற வார்த்தை வேதத்தில் ஒரே ஒரு இடத்தில்தான் எழுதப்பட்டிருக்கிறது. இளைப்பாறுதலின் ஸ்தலம் என்பது அதின் அர்த்தமாகும். வேதம் பரலோகத்தையும் பாதாளத்தையும் குறித்து அதிகமாகக் கற்றுத் தருகிறது. பூமியில் வாழுகிற ஒவ்வொருவரும் இப்பூமிக்குரிய வாழ்க்கையை முடித்தபின்பு இந்த இரண்டு இடங்களில் ஒன்றில்தான் தங்கள் நித்தியத்தைக் கழிக்கமுடியும். இயேசுவும் இதைக்குறித்து ஐசுவரிய வான்,      லாசருவைப் பற்றிய உவமையில் கற்றுத் தந்தார். 

விசுவாசிகள் மரிக்கும் போது,      சரீரமாகிய மண் பூமியில் அடக்கம்பண்ணப் பட்டாலும்,      உள்ளான மனிதனாகிய ஆத்துமாவும்,      ஆவியும் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கும். அங்குச் சமாதானத்தோடும் சந்தோஷத்தோடும் இளைப்பாறிக் கொண்டிருக்கும். கர்த்தருடைய பிள்ளைகளுக்கு மரணம் என்பது,      இந்தத் தேகத்தை விட்டுக் குடிபோவதும்,      கர்த்தரிடத்தில் குடியிருப்பதுமாகும் (2 கொரி. 5:8). அப்போஸ்தலனாகிய பவுல் தேகத்தைவிட்டுப் பிரிந்து,      கிறிஸ்துவுடனேகூட இருக்க ஆசைப்பட்டார் (பிலி. 1:23),      அதுதான் உண்மையாய் கர்த்தரைச் சேவிக்கிற ஒவ்வொருவருடைய வாஞ்சையாய் காணப்படுகிறது. ஆனால் வேதத்தில் சிலவசனங்கள் விசுவாசிகளுடைய  உயிர்த்தெழுதலைக் குறித்தும்,      மறுரூப சரீரத்தைக் குறித்தும் கூறுகிறது. ஏனெனில்,      கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும்,      பிரதான தூதனுடைய சத்தத்தோடும்,      தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்,   அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக,      மேகங்கள்மேல் அவர்களோடே கூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு,      இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனே கூட இருப்போம் என்று 1 தெச. 4:16,     17 கூறுகிறது. அதுபோல,      இதோ,      ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்,   நாமெல்லாரும் நித்தியரையடைவதில்லை,   ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது,      ஒரு நிமிஷத்திலே,      ஒரு இமைப்பொழுதிலே,      நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்.  எக்காளம் தொனிக்கும்,      அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்,   நாமும் மறுரூபமாக்கப்படுவோம் என்றும் 1 கொரி.15:51,     52ல் எழுதப்பட்டிருக்கிறது. கர்த்தருடைய பிள்ளைகள் மரித்த உடனே இளைப்பாறுதலின் ஸ்தலத்தில் ஆபிரகாமின் மடியாகிய பரலோகத்தில் பிரவேசிக்கும் போது ஏன் இந்த உயிர்த்தெழுதல் அவசியம் என்ற கேள்வி நமக்குள் எழும்பக் கூடும்.  இந்த பூமியில் தோன்றப் போகிற ஆயிரம் வருட அரசாட்சியிலும்,       அதற்குப் பின்பு புதிய எருசலேமிலும் நாம் பிரவேசிக்கும் போது உயிர்த்தெழுதலின் சரீரத்தோடுதான் நாம் பிரவேசிக்க முடியும். ஆகையால் தான் கடைசி எக்காளம் தொனிக்கும் போது பரதீசியில் இளைப்பாறிக் கொண்டிருக்கிற ஆத்துமாவும்,      ஆவியும் அடக்கம் செய்யப்பட்ட சரீரத்தில் பிரவேசிக்கும்,      அப்போது மகிமையின் சாயலடைந்து மத்தியவானில் மணவாளன் இயேசுவோடு எப்பொழுதும் காணப்பட எடுத்துக் கொள்ளப்படுவோம். முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்,   இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை,   இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருந்து,      அவரோடே கூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள் என்று வெளி. 20:6 கூறுகிறது. கர்த்தருடைய பிள்ளைகளே,      எதை இழந்தாலும் பரலோகத்தை இழந்து விடாதிருங்கள். யோவான்ஸ்நானன் காலமுதல் இதுவரைக்கும் பரலோக ராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது,   பலவந்தம் பண்ணுகிறவர்கள் அதைப் பிடித்துக்கொள்ளுகிறார்கள் என்று வேதம் கூறுகிறது. ஆகையால் இயேசுவை மையப்படுத்தி,      அவருடைய சிந்தையைத் தரித்து,      நீதிக்குரிய ஜீவியம் செய்து தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க பிரயாசப்படுங்கள்.

இயேசுவைச் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளாமலும்,      அவருடைய ரத்தத்தால் பாவங்களறக் கழுவப்படாமலும் காணப்படுகிறவர்கள் மரிக்கும் போது,      அவர்களும் ஒரு தற்காலிக வேதனையின் இடத்திற்குக் கடந்து செல்லுவார்கள். ஐசுவரிய வான் மரித்து அடக்கம் பண்ணப்பட்ட உடனே அவன் பாதாளத்திலே கொண்டு   போகப்பட்டு அங்கே வேதனைப்பட்டான். அங்கே கடைசி நியாயத்தீர்ப்பின் உயிர்த்தெழுதல் மட்டும் காணப்பட்டு  வேதனையை அனுபவிக்கவேண்டும். ஐசுவரிய வான்,       தகப்பனாகிய ஆபிரகாமே,      நீர் எனக்கு இரங்கி,      லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து,      என் நாவைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்பவேண்டும்,   இந்த அக்கினி ஜுவாலையில் வேதனைப்படுகிறேனே என்று கூப்பிட்டான் என்ற வசனத்திலிருந்து அவனுடைய வேதனையைப் புரியமுடிகிறது. இயேசு நியாதிபதியாய் வெள்ளை சிங்காசனத்தில் அமர்ந்து நியாயத்தீர்ப்பு செய்யும் வரைக்கும் அங்கே காணப்படுவார்கள்,      அதன்பின்பு பிசாசுக்காகவும்,      அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தமாக்க்பட்ட அக்கினி கடலிலே தள்ளப்படுவார்கள்.  பின்பு,      நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல் வீற்றிருக்கிறவரையும் கண்டேன்,      அவருடைய சமுகத்திலிருந்து பூமியும் வானமும் அகன்றுபோயின,      அவைகளுக்கு இடங்காணப்படவில்லை.  மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்குமுன்பாக நிற்கக்கண்டேன்,      அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன,      ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது,      அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் கிரியைகளுக்குத்தக்கத்தாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்.  சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது,      மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்.  அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம். ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான் என்று வெளி. 20:11-15ல் எழுதப்பட்டவைகள் அப்படியே நிறைவேறும். ஒருவன் அக்கினிகடலில் தள்ளப்பட்டு வேதனையை அடைவதைப் பார்க்கிலும் இப்பூமியில் பிரவாதிருந்தால் நலமாயிருக்கும். 

கர்த்தருடைய பிள்ளைகளே, தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதற்கேற்ற பாத்திரவான்களாய் ஜீவியுங்கள். மாரநாதா, கர்த்தர் வருகிறார்!

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *