பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப்போலானேன், எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன் (1 கொரி. 9:22).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/00D1_8WkfCE
அப்போஸ்தலனாகிய பவுல், இரவு பகலாய் பிரயாசப்பட்டு, கர்த்தருடைய ஊழியத்தைச் செய்ததின் நோக்கம், எப்படியாயினும் சிலரை இரட்சிக்க வேண்டும் என்பதற்காக. பாவத்தில் வாழ்ந்து, அதின் சம்பளமாகிய மரணத்திற்கு நேராக ஓடி, பிசாசுக்காகவும் அவனுடைய தூதர்களுக்காகவும் ஆயத்தப்படுத்தியிருக்கிற அக்கினி கடலுக்குக் கடந்து சென்றுகொண்டிருக்கிற ஜனங்களை இயேசுவுக்கு நேராகத் திருப்பி, இரட்சிக்க வேண்டும் என்பதையே வாழ்க்கையின் நோக்கமாகக் கொண்டிருந்தார். பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப்போலவும், யூதனுக்கு யூதனாகவும், கிரேக்கருக்கு கிரேக்கனாகவும் அவர் காணப்பட்டார். அதற்காகவே மூன்று மிஷனரி பயணங்களை மேற்கொண்டு, அநேகந்தரம் மரண அவதியில் அகப்பட்டார், யூதர்களால் ஒன்று குறைய நாற்பதடி யாக ஐந்துதரம் அடிபட்டார், மூன்றுதரம் மிலாறுகளால் அடிபட்டார், ஒருதரம் கல்லெறியுண்டார், கப்பற்சேதத்தில் இருந்தார், கடலிலே ஒரு இராப்பகல் முழுவதும் போக்கினார், ஆறுகளால் வந்த மோசங்களிலும், கள்ளரால் வந்த மோசங்களிலும், சுயஜனங்களால் வந்த மோசங்களிலும், அந்நிய ஜனங்களால் வந்த மோசங்களிலும், பட்டணங்களில் உண்டான மோசங்களிலும், வனாந்தரத்தில் உண்டான மோசங்களிலும், சமுத்திரத்தில் உண்டான மோசங்களிலும், கள்ளச்சகோதரரிடத்தில் உண்டான மோசங்களிலும், பிரயாசத்திலும், வருத்தத்திலும், அநேகமுறை கண்விழிப்புகளிலும், பசியிலும், தாகத்திலும், உபவாசங்களிலும், குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்தார். சுவிசேஷத்தை நான் பிரசங்கியா விட்டால் எனக்கு ஐயோ என்று கூறினார். அதிக ஜனங்களை ஆதாயப்படுத்திக் கொள்ளும் படிக்கு, என்னைத்தானே எல்லாருக்கும் அடிமையாக்கினேன் என்றும் கூறினார்.
கர்த்தருடைய பிள்ளைகளே, சுவிஷேசத்தை அறிவிப்பது நம்மேல் விழுந்த கடமையாய் காணப்படுகிறது. எப்படியாகிலும் சிலரை இரட்சிப்பிற்கு நேராக நடத்தியாக வேண்டும். இந்நாட்களில் ஊழியம் செய்வதன் நோக்கம் என்ன என்றால், அனேகருக்கு அது ஒரு ஆதாயத் தொழிலாய் காணப்படுகிறது. சிலர் பேர் புகழுக்காக ஊழியம் செய்கிறார்கள். சிலர் கர்த்தர் தங்களுக்குக் கொடுத்த கிருபை வரங்களை வியாபாரம் செய்கிறார்கள். இரட்சிப்பிற்கேதுவாக நடத்த வேண்டிய கோடிக்கணக்கான ஜனங்கள் நம் தாய்நாடுகளில் உண்டு, சந்திக்கப்பட வேண்டிய கிராமங்கள் அனேகம் உண்டு, அதற்காக எழும்பி செயல்படுகிறவர்களின் எண்ணிக்கை வெகு குறைவு. தேவபக்தியை ஆதாயத்தொழிலென்று எண்ணுகிற மனுஷர்களை விட்டு விலகு என்று வேதம் எச்சரிக்கிறது. கர்த்தருடைய ஜனங்கள் எப்படியாயினும் சிலரை இரட்சிக்க, இரட்சிப்பிற்கேதுவாய் நடத்த நம்மால் இயன்றதைச் இந்நாட்களில் செய்தாக வேண்டும். ஆத்துமாக்களை ஆதாயம் செய்வதைக் குறித்து, ஜார்ஜ் வொயிட்பீல்டு என்ற தேவ மனிதர், ஆண்டவரே ஆத்துமாக்களை எனக்குத் தாரும் அல்லது என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும் என்று கூறினார். எனக்காக மலையளவு வெள்ளியோ, பொன்னோ குவித்து வைப்பதைக் காட்டிலும் கிறிஸ்துவுக்காக ஒரே ஒரு ஆத்துமாவை ஆதாயம் செய்வதே அதிக மகிழ்ச்சி தரும் என்று எண்ணுகிறேன் என்று மாத்தியூ ஹென்றி என்ற தேவ மனிதர் கூறினார். ஐயா சிலருடைய தணியாத வாஞ்சை பொன், இன்னும் சிலரின் தீராத ஆசை புகழ், என்னுடைய தீராத ஆசையோ ஆத்துமாக்கள் என்றார் வில்லியம் பூத். கர்த்தருடைய பிள்ளைகளே, ஆத்துமாக்களின் இரட்சிப்பிற்காகக் கடைசியாய் நாம் எடுத்து முயற்சிகள் என்ன? கடைசியாக ஒருவருக்கு இயேசுவைப் பற்றி எப்போது கூறினோம்? நீங்கள் ஒருவரை நீதிக்குள்ளாய் நடத்தினால், கர்த்தருடைய வருகையில் நட்சத்திரங்களைப் போல இலங்கிப் பிரகாசிப்பீர்கள். கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் இணைந்து செயல்படுவோம், தேசத்தை இயேசுவுக்காகச் சுதந்தரிப்போம்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar