நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம், ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் திருப்பிக்கொடு (மத். 5:39).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/_ZtVwgdxG-4
தீமை செய்கிற ஜனங்கள் எங்கும் பெருகிக் காணப்படுகிறார்கள். சில கொடூரமான தேசங்களின் தலைவர்கள் மற்ற தேசங்களின் மேல் யுத்தம் செய்து ஜனங்களுக்குத் தீமை செய்வார்கள், தீவிரவாதக் குழுக்கள் தேசங்களில் எழும்பி அப்பாவி ஜனங்களைக் கொன்று குவிப்பார்கள். நீங்கள் வேலை செய்கிற இடங்களில் உங்களுக்கு எதிராக எழும்பி தீமை செய்வார்கள். சிலர் நீங்கள் செய்த நன்மைகளுக்குக் கூட தீங்கை பதிலளிப்பார்கள். வேதத்திலும், யோசேப்பு தன் சகோதரர்களுக்கு உணவுப் பொருட்களைக் கொண்டு நலம் விசாரிக்குப்படிக்குக் கடந்து சென்றான். ஆனால் அவர்கள் அவனைக் குழியில் தள்ளிப் போட்டு அவனுக்குத் தீமை செய்து, கடைசியில் இஸ்மவேலர்களுக்கு அடிமையாக விற்றுப் போட்டார்கள். சவுல் தாவீதை கொலை செய்யும்படிக்குப் பின் தொடர்ந்தான். ஒரு விசை சவுலைக் கொல்லுவதற்கு தாவீதிற்கு தருணம் கிடைத்தது. கர்த்தர் இன்று கெபியில் உம்மை என்கையில் ஒப்புக்கொடுத்தார் என்பதை இன்றையதினம் உம்முடைய கண்கள் கண்டதே, உம்மைக் கொன்றுபோட வேண்டும் என்று சிலர் சொன்னார்கள், ஆனாலும் என்கை உம்மைத் தப்பவிட்டது, என் ஆண்டவன்மேல் என் கையைப் போடேன், அவர் கர்த்தரால் அபிஷேகம் பண்ணப் பட்டவராமே, என் தகப்பனே பாரும், என் கையிலிருக்கிற உம்முடைய சால்வையின் தொங்கலைப் பாரும் என்றான். சவுல், என் குமாரனாகிய தாவீதே, இது உன்னுடைய சத்தமல்லவா என்று சொல்லி, சத்தமிட்டு அழுது, தாவீதைப் பார்த்து: நீ என்னைப்பார்க்கிலும் நீதிமான், நீ எனக்கு நன்மை செய்தாய், நானோ உனக்குத் தீமை செய்தேன் என்றான். அப்போஸ்தலனாகிய பவுலும், கன்னானாகிய அலெக்சந்தர் எனக்கு வெகு தீமை செய்தான், அவனுடைய செய்கைக்குத்தக்கத்தாக கர்த்தர் அவனுக்குப் பதிலளிப்பாராக என்று கூறினார். ஊழியங்களிலும் நன்மையைப் பெற்ற ஜனங்கள் தீங்கு செய்யும்படிக்கு எழும்பும் வேளைகள் உண்டு.
சில நேரங்களில் தீங்கு செய்கிறவர்களுக்கு எதிராகச் செயல்பட வேண்டும் என்ற எண்ணம் நமக்கு மாமிசத்தில் வரும். ஆனால் இயேசு தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம் என்று நமக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார். கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் எல்லாரும் ஆண்டவருடைய மலைப் பிரசங்கத்தை அவ்வப்போது வாசிக்க வேண்டும். அவைகள் மத்தேயு 5, 6, 7வது அதிகாரங்களில் எழுதப்பட்டிருக்கிறது. அவைகள் நம்முடைய அனுதின வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானவை. அதை விரும்பி வாசிக்கும் போது நம்முடைய எஜமானும், முன்னோடினவருமாகிய இயேசுவின் சுபாவங்களை அறிந்து கொள்ளலாம். அவரைப் பின்பற்றி, சீஷத்துவ வாழ்க்கை நாம் வாழ்வதற்கு அந்த வார்த்தைகள் மிகவும் உபயோகமாயிருக்கும். உங்களுக்கு விரோதமாக அனேகர் எழும்பி தீமைச் செய்தாலும், நீங்கள் அவர்களுக்கு விரோதமாக எதிர்த்து நிற்க வேண்டாம் என்று இயேசு கூறினார். ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் திருப்பிக்கொடு என்றும், உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ள வேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு என்றும், ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம்வரப் பலவந்தம் பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ என்றும் கற்றுத்தந்தார். ஆகையால் பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதில் செய்வேன் என்ற ஆண்டவருடைய வார்த்தையை நம்பி, நீங்கள் ஒருவருக்கும் தீமை செய்யாதிருங்கள், அப்படிச் செய்கிறவர்களுக்கு எதிர்த்தும் நில்லாதிருங்கள். அப்போது கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார், உங்கள் காரியம் ஜெயமாயிருக்கும்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar