நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மாளும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்வாருண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சினேகிதரைச் சம்பாதியுங்கள் (லூக்கா 16:9).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/_DLlOCk6pEk
பண ஆசையையும், பொருளாசையையும் தூண்டுகிற மக்கள் நடுவில் வாசம் செய்கிறோம். பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேர் என்பதையறிந்த கர்த்தருடைய ஜனங்களும் அதையே நாடித்திரிகிறார்கள். பணம் சம்பாதிப்பது எப்படி? அதை எங்கே முதலீடு செய்வது? என்பது அனேகருடைய கேள்வியாய் காணப்படுகிறது. ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்று ஆண்டவர் எச்சரித்திருந்தும், பணத்தினால் நித்திய ஜீவனைச் சம்பாதித்து விடலாம் என்று கருதுகிறவர்களும் உண்டு. ஆண்டவர் ஆஸ்தி ஐசுவரியங்களைக் கொடுப்பது எதற்கென்றால் ஆத்துமாக்களைச் சம்பாதிப்பதற்கும் என்பதை கர்த்தருடைய ஜனங்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஆண்டவர் ஒரு உவமையைக் கூறும் போது, ஐசுவரியமுள்ள ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது. அப்பொழுது அவன்: நான் என்ன செய்வேன்? என் தானியங்களைச் சேர்த்து வைக்கிறதற்கு இடமில்லையே@ நான் ஒன்று செய்வேன், என் களஞ்சியங்களை இடித்து, பெரிதாகக் கட்டி, எனக்கு விளைந்த தானியத்தையும் என் பொருள்களையும் அங்கே சேர்த்துவைத்து, பின்பு: ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்துவைக்கப்பட்டிருக்கிறது@ நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான். தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார். தேவனிடத்தில் ஐசுவரியவானாயிராமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான் என்றார். அவன் விளையச் செய்கிற கர்த்தரை மறந்து போனான். தன் சுயநலத்தைக் குறித்து மாத்திரம் கவலைப் படுகிறவனாய் காணப்பட்டான். கர்த்தரைக் குறித்தும், அவருடைய ராஜ்யத்தின் தேவைகளைக் குறித்தும், ஆத்தும ஆதாயத்தைக் குறித்தும் கரிசனையில்லாத கிறிஸ்தவர்களை மதிகேடனே என்று கர்த்தர் அழைப்பது நிச்சயம்.
கர்த்தருடைய ஜனங்கள் தேவனிடத்தில் ஐசுவரிய வான்களாய் காணப்பட வேண்டும். பரலோக ராஜ்யத்திற்குரியவற்றில் முதலீடு செய்வது தான் நீண்ட கால நித்திய முதலீடு என்பதை என்பதை அறிந்து கொள்ளுங்கள். என்னிடத்தில் இருப்பது கொஞ்சம் ஆண்டவருக்கென்று எதை என்னால் செய்ய முடியும் என்று நினைப்பவர்கள் உண்டு. கொஞ்சத்தில் உண்மையுள்ளவர்களாய் இருக்கும் போது, கர்த்தர் அனேக ஆசீர்வாதங்களைத் தந்து உங்களை உயர்த்துவார். ஒரு நாள் இயேசு தேவாலயத்தில் கடந்து சென்று, காணிக்கை பெட்டியின் அருகே அமர்ந்து, காணிக்கை போடுகிறவர்களைக் கவனித்தார். ஒரு ஏழை விதவை அதிலே இரண்டு காசைப் போடுகிறதையும் கண்டு: . இந்த ஏழை விதவை மற்றெல்லாரைப்பார்க்கிலும் அதிகமாகப் போட்டாள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன், தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள் என்றார். தனக்கு இருப்பதைக் குறித்த திருப்தியில்லாதவர்கள், ஆத்தும ஆதாயப் பணிக்காக எதையும் செய்வதில்லை. போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தி மிகுந்த ஆதாயம் என்று வேதம் கூறுகிறது. ஆகையால் இன்று கர்த்தர் உங்களுக்குக் கொடுத்திருக்கிற ஆசீர்வாதங்கள் அனேகரிடம் இல்லை;. வேலையில்லாமல் கஷ்டப்படுகிறவர்கள் திரளாய் காணப்படுகிறார்கள். வீடு வாசல்கள் இல்லாமல் காணப்படுகிறவர்கள் உண்டு. தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்க முடியாமல் திண்டாடுகிறவர்கள் உண்டு. இவையெல்லாம் நம்மிடத்தில் காணப்படுகிறது, நம்மால் முடிகிறது என்றால் அது கர்த்தருடைய ஈவு. கடைசிக் காலத்தின் அறிகுறிகளில் ஒன்று ஜனங்கள் நன்றியறியாதவர்களாய் காணப்படுவார்கள் என்று வேதம் கூறுகிறது. ஜனங்களிடத்தில் மாத்திரமல்ல, தேவனுக்கும் நன்றியறியாதவர்களாய் காணப்படுவார்கள். ஆகையால் உங்கள் ஆஸ்தி ஐசுவரியங்கள், ஆத்தும ஆதாயத்திற்கும் பயன்படக் கர்த்தர் தாமே கிருபை பாராட்டுவாராக.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar