வீடு (Home).

துன்மார்க்கனுடைய வீட்டில் கர்த்தரின் சாபம் இருக்கிறது,    நீதிமான்களுடைய வாசஸ்தலத்தையோ அவர் ஆசீர்வதிக்கிறார் (நீதி. 3:33).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/zgqmGq2W8ec

இரண்டு விதமான நபர்களுடைய வீட்டைக் குறித்து கர்த்தர் கூறும் போது,    துன்மார்க்கனுடைய வீட்டில் கர்த்தரின் சாபம் இருக்கிறது என்றும்,    நீதிமான்களுடைய வீட்டில் அவருடைய ஆசீர்வாதம் இருக்கிறது என்றும் கூறுகிறார். தேவனை அசட்டைச் செய்கிறவர்களும்,  அவருடைய வார்த்தையைக் கைக் கொள்ளாதவர்களும் துன்மார்க்கர்களாய் காணப்படுகிறார்கள். கர்த்தருக்குப் பயந்து,    அவருடைய வார்த்தைக்கு முன்பாக நடுநடுங்கி ஜீவிக்கிறவர்கள் நீதிமான்களாய் காணப்படுகிறார்கள்.

இஸ்ரவேல் ஜனங்கள் கானானுக்குள் பிரவேசித்த போது எரிகோ அவர்களுக்கு முன்பாக அடைபட்டுக் காணப்பட்டது. கர்த்தர் எரிகோவையும்,    அதின் ஜனங்களையும் இஸ்ரவேல் ஜனங்கள் கரத்தில் ஒப்புக் கொடுத்தார். ஆனால்  பட்டணமும் அதிலுள்ள யாவும் கர்த்தருக்குச் சாபத்தீடாயிருக்கும் என்றும்,     சாபத்தீடானதில் ஏதாகிலும் எடுத்துக்கொள்ளுகிறதினாலே,    நீங்கள் சாபத்தீடாகாதபடிக்கு,    இஸ்ரவேல் பாளயத்தைச் சாபத்தீடாக்கி அதைக் கலங்கப்பண்ணாத படிக்கும்,    நீங்கள்  சாபத்தீடானதற்குமாத்திரம்  எச்சரிக்கையாயிருங்கள் என்று கர்த்தர்  யோசுவாவின் மூலம் எச்சரித்திருந்தும்,   யூதாகோத்திரத்தைச் சேர்ந்த ஆகான் என்பவன்,    சாபத்தீடானதிலே சிலதை எடுத்துக்கொண்டான்,    ஆகையால் இஸ்ரவேல் புத்திரர்மேல் கர்த்தருடைய கோபம் மூண்டது. அதினிமித்தம் அவர்களுக்கு முன்பாக காணப்பட்ட ஆய் என்ற ஒரு சிறிய பட்டணத்தின் குடிகளுக்கு முன்பாக தோற்றுப் போய்,    ஏறக்குறைய முப்பத்தாறுபேரை அவர்கள் வெட்டிப்போட்டார்கள். யோசுவா தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு,    அவனும் இஸ்ரவேலின்  மூப்பரும்  சாயங்காலம்மட்டும் கர்த்தரின் பெட்டிக்கு முன்பாகத் தரையிலே  முகங்குப்புற விழுந்து,    தங்கள் தலைகளின்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டு கிடந்தார்கள். கர்த்தர் யோசுவாவை நோக்கி: எழுந்திரு,    நீ இப்படி முகங்குப்புற விழுந்துகிடக்கிறது என்ன?  இஸ்ரவேலர்  பாவஞ்செய்தார்கள்,    நான் அவர்களுக்குக் கட்டளையிட்ட என் உடன்படிக்கையை மீறினார்கள், சாபத்தீடானதில் எடுத்துக்கொண்டதும்,    களவு செய்ததும்,    வஞ்சித்ததும்,    தங்கள் பண்டம் பாடிகளுக்குள்ளே  வைத்ததும் உண்டே.  ஆதலால் இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சத்துருக்களுக்கு முன்பாக நிற்கக்கூடாமல்,    தங்கள் சத்துருக்களுக்கு முதுகைக் காட்டினார்கள், அவர்கள் சாபத்தீடானார்கள்,    நீங்கள் சாபத்தீடானதை உங்கள்  நடுவிலிருந்து நிக்கிரகம் பண்ணாவிட்டால்,    இனி உங்களோடு  இரேன் என்றார்.  ஆகான் கண்டுபிடிக்கப்பட்ட போது,    அவன் யோசுவாவுக்குப் பிரதியுத்தரமாக: மெய்யாகவே நான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன்,    இன்னின்ன பிரகாரமாகச் செய்தேன்.  கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனியச் சால்வையையும்,    இருநூறு வெள்ளிச்சேக்கைலையும்,    ஐம்பது சேக்கல் நிறையான ஒரு பொன்பாளத்தையும் நான் கண்டு,    அவைகளை இச்சித்து எடுத்துக்கொண்டேன்,    இதோ,    அவைகள் என் கூடாரத்தின் மத்தியில் பூமிக்குள் புதைத்திருக்கிறது. வெள்ளி அதின் அடியிலிருக்கிறது என்றான். அதினிமித்தம் ஆகான் அவன் குடும்பத்தின் உறுப்பினர்கள் அத்தனைப் பேரும் கல்லெறியுண்டு கொலை செய்யப்பட்டார்கள். கர்த்தருடைய பிள்ளைகளே,    உங்கள் வீடுகளில் சாபத்தீடான காரியங்கள் காணப்படும் போது,    கர்த்தர் உங்களோடு இருப்பதில்லை. இன்று அனேகர் துன்மார்க்கமான வருமானங்களாலும்,    பொய் வழிகளில் வருகிற ஐசுவரியங்களினாலும் தங்கள் வீடுகளை நிரப்புகிறார்கள். இன்னும் தேவனுக்குரியதைத் தேவனுக்கும்,    அரசாங்கத்திற்குரியதை அரசாங்கத்திற்கும் கொடுக்காமல்,    சாபத்தைச் சம்பாதிக்கிறவர்களாய் காணப்படுவதுமுண்டு. துன்மார்க்கனுடைய வீட்டில் கர்த்தருயை சாபம் காணப்படுகிறது என்ற எச்சரிப்பை மறந்துவிடாதிருங்கள்.

கர்த்தருடைய பெட்டியை தாவீது அபினதாபின் வீட்டிலிருந்து எடுத்துக் கொண்டு வந்த வேளையில்,    லேவியர்கள் அதை சுமந்து கொண்டு  வருவதற்குப் பதிலாக புது இரதத்தில் அதைக் கொண்டுவந்தான்.  அபினதாபின் குமாரராகிய ஊசாவும் அகியோவும் அந்த இரதத்தை நடத்தினார்கள்.  தாவீதும் இஸ்ரவேல் சந்ததியார் அனைவரும் தேவதாரு மரத்தால் பண்ணப்பட்ட சகலவித கீதவாத்தியங்களோடும்,    சுரமண்டலம் தம்புரு மேளம் வீணை கைத்தாளம் ஆகிய இவைகளோடும்,    கர்த்தருக்கு முன்பாக ஆடிப்பாடிக்கொண்டு துதி,    ஆராதனைப்பலிகளை  ஏறெடுத்தார்கள். ஆனால் நாகோனின் களம் இருக்கிற இடத்துக்கு வந்தபோது,    மாடுகள் மிரண்டு பெட்டியை அசைத்த படியினால்,    ஊசா தேவனுடைய  பெட்டியினிடமாய்த் தன் கையை நீட்டி,    அதைப் பிடித்தான். அப்பொழுது கர்த்தருக்கு ஊசாவின்மேல் கோபம்மூண்டது. அவனுடைய  துணிவினிமித்தம் தேவன் அங்கே அவனை அடித்தார்,    அவன் அங்கே தேவனுடைய பெட்டியண்டையில் செத்தான். அபினதாபின் வீட்டில் கர்த்தருடைய பெட்டி காணப்பட்டிருந்தும்,    தன் குமாரர்களுக்குக் கூட அதை எப்படிக் கையாள வேண்டும் என்று அவன் கற்றுக் கொடுக்காமல் சாபத்தைச் சம்பாதித்தான். இதுவரை குதித்து,    ஆராதித்துக் கொண்டு வந்த தாவீதை பயம் பிடித்தது. உடனே கர்த்தருடைய பெட்டி என்னிடத்தில் வருவது எப்படியென்று சொல்லி,    அதைத் தன்னிடத்தில் தாவீதின் நகரத்தில் கொண்டுவர மனதில்லாமல்,    கித்தியனாகிய ஓபேத்ஏதோமின் வீட்டிலே கொண்டுபோய் வைத்தான். ஆனால் ஓபேத்ஏதோம் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் அறிந்திருந்தும்,    சந்தோஷத்தோடு கர்த்தருடைய பெட்டியை  தன் வீட்டில் ஏற்றுக் கொண்டான். வேதவசனங்களில் எழுதப்பட்டபடி அதைக் கையாண்டான். கர்த்தருடைய பெட்டி அவன் வீட்டிலே மூன்று மாதம் இருக்கையில் கர்த்தர் அவனையும்,    அவன் வீட்டார் அனைவரையும் ஆசீர்வதித்தார். கர்த்தருக்குப் பயப்படுகிற,    அவருடைய வசனத்தின்படி செய்கிற ஒரு நீதிமானாகிய மனுஷன் நிமித்தம் அவனை மட்டுமல்ல அவன் வீட்டாரையும் கர்த்தர் ஆசீர்வதித்தார். அவனுக்கு அறுபத்திரண்டு ஆண் வாரிசுகள் காணப்பட்டார்கள் என்றும்,    அவர்கள் முக்கியமான தேவாலயப் பணிகளில் காணப்பட்டார்கள் என்றும் வேதம் கூறுகிறது. ஆம்,    நீதிமான்களுடைய வீடு ஆசீர்வதிக்கப்படும். கர்த்தருடைய பிள்ளைகளே,    கர்த்தர் தம்முடையவர்களை அறிவார்,    அவருக்குப் பயந்த ஜீவியம் செய்கிறவர்களையும்,    உண்மையாய் அவரை சேவிக்கிறவர்களையும் அவர் அறிவார். உங்கள் கூடாரம் நீதிக்குரியதாய் இருக்கும் போது,    கர்த்தர் உங்களையும் உங்கள் சந்ததிகளையும் ஆசீர்வதிப்பார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *